ஆன்லைன் வகுப்பு முறை குழந்தைகளை மட்டுமல்ல, வீட்டிலுள்ள பெரியவர்களையும் படாதபாடு படுத்தி வருகிறது. தினந்தோறும் ஆன்லைன் வகுப்பில் குழந்தைகளை கணினி அல்லது தொலைபேசியின் முன்னே அமரவைப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதனை ஏராளமானோர் கதையாகவும், காணொளிகளாகவும் சமூக வலைதளங்களில் பதிந்து வருகிறார்கள்.
கணினி திரைகளின் முன்பு குழந்தைகள் தூங்கி வழியும் காணொளிகளும் நிறைய காணக்கிடைக்கின்றன. அந்த பாணியில் ஒரு வித்தியாசமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் பதிந்துள்ள யானைக்குட்டி ஒன்றின் காணொளி சமூக வலைதளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
யானைகள் நின்று கொண்டே தூங்கும் பழக்கம் உடையன. அப்படி ஒரு யானைக்குட்டி பெரிய யானையின் அருகே நின்று கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது. திடீரென தடுமாறி அதன் தலை முன்னோக்கி சென்று, பெரிய யானையின் காலில் இடிக்கையில், பதறி உருண்டு விழுகிறது. மற்ற யானைகள் ஒன்று சேர்ந்து கொண்டு குட்டி யானையை நலம் விசாரித்து எழுப்புகின்றன. இக்காணொளி பலரின் மனதையும் ஈர்த்துள்ளது.
படிக்க வைக்க எழுப்பி உட்கார வைக்கும் குழந்தைகள் தூங்கி விழுவதைப் போல இந்த காணொளி இருப்பதாக பலரும் நகைச்சுவையுடன் இக்காணொளியைப் பகிர்ந்து வருகிறார்கள்.
காணொளி