யோகி ஆதித்யநாத்

பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் அருகே அக்ராபாத் தெஹ்ஸில் எனும் கிராமத்தில் மீண்டும் தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அலிகாரில் வசித்து வருவதாகவும், அவர் தனது பாட்டி வீட்டில் ஆறு ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், சிறுமி தெளிவாக பேச வராத, காது கேட்காத மாற்றுத்திறனாளி என்றும், அந்த கிராம மக்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை குறித்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பகுதி மக்கள் 17 வயது இளைஞன் ஒருவனால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கருதுகின்றனர்.

எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் சிறுமி உடலை எடுத்துச் செல்ல முயன்றபோது, கோபமடைந்த கிராமவாசிகள் சாலை மறியல் செய்து வழியைத் தடுத்தனர்.

கோதுமை வயலில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல்

கொலை செய்யப்பட்ட சிறுமி ஞாயிற்றுக்கிழமை காலை கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக வயல்வெளிக்குச் சென்றிருக்கிறார். மதியம் வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் சிறுமியைத் தேடினர். அப்போது அவளது உடல் இறந்த நிலையில் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் கோதுமை வயலில் கண்டெடுக்கப்பட்டது.

அவரது உடைகள் கிழிக்கப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் இருந்ததாகவும்  அவரை தரையில் இழுத்துச் செல்லப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் அவளது உடலை நேரில் பார்த்த கிராமத்தினர் பத்திரிக்கைகளில் கூறியுள்ளனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அடையாளம்        தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அலிகார் காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மற்ற விவரங்கள் தெளிவாகத் தெரியவரும் என்றும், சில உள்ளூர் மக்களை விசாரிப்பதற்காக தடுத்து வைத்துள்ளோம், விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்றும் காவல்துறை தரப்பில் கூறியுள்ளனர்.

அலிகார் பகுதியில் செய்யப்பட்ட கட்டப்பஞ்சாயத்து

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்திரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில்   வீட்டிலிருந்த இளம்பெண் ஒருவர், இரண்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் இதுதொடர்பாக கிராமப் பஞ்சாயத்தில் அந்த இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

புகாரை விசாரித்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்களையும் எச்சரித்து பிரச்சினையை முடித்து வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனக்கு நீதி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை

2020 செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அன்று, 19 வயது பட்டியலின இளம்பெண் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை அலிகார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, காயங்களின் தீவிரத்தால் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29-ம் நாள் அப்பெண் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கோவில் பூசாரியும், உதவியாளர்களும் இணைந்து மேற்கொண்ட கூட்டு பாலியல் வன்கொடுமை

அதன்பின் இதேபோல பதாயுன் மாவட்டத்தில் கோயிலுக்குச் சென்ற 50   வயதான பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். பிரேதப் பரிசோதனை        அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அவரது உடலில் காயங்கள் உள்ளன. கால் எலும்பு முறிந்துள்ளது. கோயில் பூசாரியும், அவரது இரு உதவியாளர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்திருப்பது பின்னர் தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யபட்டனர்.

இந்தியாவிலேயே அதிகமான பாலியல் வன்கொடுமைகள் உ.பியில்

2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகள் நடந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல ஒட்டுமொத்தமாக 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்த மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக 5,830 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஜாமீனில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற பாலியல் குற்றவாளி

இதே உத்திரப்பிரதேசத்தில் ஹத்ராஸில் 20 வயது தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். இந்த வழக்கில் அரசு நிர்வாகம் காட்டிய அக்கறையின்மை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு பின்னர் சிபிஐ-க்கு ஒப்படைக்கப்பட்டது. இதில்  நான்கு பேர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகளில் கைது  செய்யப்பட்டனர்.

2018 ஆம் ஆண்டில் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு, உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குரு சர்மா அவர் மீது வழக்கு தொடுத்த பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார். தற்போது பாதிக்கபட்ட பெண்ணான அவரது மகள், தனக்கு நீதி கேட்டு காவல் நிலையத்தின் முன் நின்று அழும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உ.பி

தினந்தோறும் வரும் செய்திகளைப் பார்க்கிறபோது சனாதானத்தை  அப்படியே ஏற்றுக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் இன் யோகி ஆதித்யநாத்  ஆட்சியின் கீழ் வாழும் ஆண்கள் சனாதான கருத்தியல் அடிப்படையிலேயே பெண்களை தங்களுக்கு கீழானவராக கருதுவதிலிருந்தே இந்த கொடூரங்களை நிகழ்த்தும் மனநிலைக்கு வருகிறார்கள். தலித் பெண்களை அதனினும் கீழாக  எண்ணுகிற ஆதிக்க மன நிலையே தொடர்ந்து நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொலைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. 

பாஜக ஆளும் உத்திரப்பிரதேசம் என்பது பெண்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத மாநிலாமாக இருப்பதை உணரமுடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *