பேராசிரியர் அறிவரசன்

விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்பித்து வந்த பேராசிரியர் அறிவரசன்

பேராசிரியர் அறிவரசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

மு.செ.குமாரசாமி என்கின்ற இயற்பெயரைக் கொண்ட பேராசிரியர்   அறிவரசன் திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். அதன்பின் ஆழ்வார்குறிச்சி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றி 1996-ல் ஓய்வு பெற்றவர். 

இளம் வயதிலேயே திராவிட இயக்கத்துடனும் தன்னை இணைத்துக் கொண்டு பகுத்தறிவு, சுமரியாதை, சாதி ஒழிப்பு, தமிழர் உரிமை ஆகியவற்றிற்கு நெடுங்காலம் பங்காற்றியவர் பேராசிரியர் அறிவரசன்.

விடுதலைப் புலிகளுக்கு புகலிடமாய் விளங்கிய இல்லம்  

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் இயங்கியபோது அவரது இல்லம் அவர்களுக்கு ஒரு புகலிடமாகத் திகழ்ந்தது. அவரும், அவருடைய துணைவியார் திருமதி ஞானத்தாய் அவர்களும் புலிகளின் பணிகள் அனைத்துக்கும் துணை நின்றனர். விரும்தோம்பலில் சிறந்த ஞானத்தாய் புலி இளைஞர்களுக்கும் தாயாகத் திகழ்ந்தார். நெல்லை மாவட்டத்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுவதில் இருவரும் முன் நின்றனர்.

இதழியல் பணி

திராவிடர் கழக ஏடுகளான ’விடுதலை’, ‘உண்மை’ இதழ்களின் துணையாசிரியராகவும்  பணியாற்றியவர். உலகத் தமிழர் பேரமைப்பு உருவாக்கியது முதல் அதன் துணைத் தலைவராக  இருந்த அறிவரசன் அதன் மாநாட்டு மலர்களிலும் பெரும்பங்காற்றினார். ‘தமிழர் தாயகம்’ எனும் மாத இதழை கடையத்திலிருந்து தொடர்ந்து நடத்தி வந்தார். 

கடையம் திருவள்ளுவர் கழகத்தை நிறுவிச் செயல்பட்டு வந்தார். புத்தன் பேசுகிறான் என்கிற இவரின் கவிதைத் தொகுப்பு மிகவும் பெயர் பெற்றது. ’யார் பயங்கரவாதி?’, ’இவர்தாம் பெரியார்’, ’சோதிடப் புரட்டு’, ’யார் இந்த ராமன்’ ,’மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை’ உள்ளீட்ட நூல்களையும் பேராசிரியர்  எழுதி வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுதும் தமிழைக் கொண்டு சேர்த்த பணி

தமிழ் மொழியை உலகம்  முழுவதும் கொண்டு சேர்த்ததில் இவரின் பங்கு அளப்பரியது. லண்டன், இத்தாலி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் கற்பித்துள்ளார்.

தமிழ் கற்பிக்க இரண்டு ஆண்டுகள் ஈழத்திற்கு சென்றார்

தமிழ் ஈழத்தில் கிளிநொச்சியை தலைநகரமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள், திறனுள்ள ஆட்சி நிர்வாகம் நடத்தியபோது, அவர்களின் அழைப்பை ஏற்று 2006 முதல் 2008 வரை ஈழத்திற்கு நேரடியாகச் சென்று விடுதலைப் புலிகளுக்கும் மாணவர்களுக்கும் தமிழ் உரைநடை – இலக்கணப் பயிற்சிகளை  கற்பித்தார்.

“ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்” என்ற நூல் அவர் ஈழத்தில் பெற்ற அனுபவங்களை நுட்பமாக விவரிக்கின்றன. இந்த நூலைச் சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

பிரபாகரன் அவர்களுடனான சந்திப்பு

பேராசிரியர் அறிவரசன் தனது ஈழப் பயணம் குறித்த நேர்காணலில் பிரபாகரனை சந்தித்தது குறித்து பேசும்போது, ”அவருக்கு ஒரு பழக்கமிருக்கின்றது. அதை நானும் நினைத்தேன். ஒரு திரைப்படத்துறை சார்ந்தவரைப் பார்த்தால் அந்தத் திரைப்படத்துறை சார்ந்தே பேசுவார். ஒரு அரசியல் துறை சார்ந்தவரைப் பார்த்தால் அரசியல் கதைப்பார். நான் ஒரு தமிழ்ப் புலவன், தமிழ்ப் பேராசிரியர் ஆகவே இரண்டுமுறையும் என்னைச் சந்திக்கும்போது தமிழ்பற்றியே பேசினார். ரொம்ப நிறைவாக இருந்தது. எங்க ஊரில் ஒரு சில தலைவர்கள், அங்குபோனால் ஒரு சில நிமிடங்களில் எனக்கு வேலை இருக்கின்றது. போயிற்று வர்றீங்களா? என்று அனுப்புவாங்கள். அதுமாதிரி எல்லாம் இல்லாமல் மிக மிக ஓய்வாக மனங்கலந்து உரையாடிய வாய்ப்பு ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ரொம்ப மகிழ்ச்சியாக நிறைவாக இருக்கின்றேன்.” என்று கூறியிருப்பார்.

மாநில சுயாட்சி கோரிக்கை

வாழ்கையின் ஒவ்வொரு நாளையும் தமிழ் மொழிக்காக வாழ்ந்திட்ட பேராசிரியர், பாளையங்கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார்.

தமிழ்நாட்டு உரிமைகளுக்காக நடந்த போராட்டங்களில் முன்னணியில் நின்ற பேராசிரியர் மாநில சுயாட்சி கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்று  தொடர்ந்து பேசிவந்தார்.

”மாநில சுயாட்சி கோரிக்கையை மாணவர்கள் எழுப்ப வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தும் இந்திய நடுவணரசால் பறிக்கப்பட்டிருப்பதையும் அவற்றை மீட்க மாநில சுயாட்சி தேவை என்பதையும் மாணவர்கள் எடுத்துரைத்து மக்கள் ஆதரவைப் பெறவேண்டும். தமிழ்நாட்டு நலனில் அக்கறை உடைய  தமிழ்நாடு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு உரிமையுடன் திகழவேண்டும் என்ற கொள்கையுடைய மாணவர்கள் மாநில சுயாட்சிக் கோரிக்கையை எழுப்பி வெற்றி பெறவேண்டும்” என்று தனது இறுதி காலங்களில் எழுதியவர்.

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழிசை பாவாணர் என்ற பட்டமும், கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் பைந்தமிழ் பகலவன் என்ற பட்டமும் இவருக்கு  வழங்கப்பட்டன.

இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துசெல்வி, தமிழ்செல்வி ஆகிய இரு மகள்களும், செல்வநம்பி, அழகியநம்பி ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவரது துணைவியார் ஞானத்தாய், திருச்சி பெரியார் நாகம்மை ஆதரவற்றோர் காப்பகப் பொறுப்பாளராகப் பல்லாண்டு பணியாற்றியவர்.

அரசு மருத்துவமனைக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட உடல்

தென்காசி – கடையம் நகர் இல்லத்தில் பேராசிரியர் அறிவரசன் 4.3.2020 அன்று இரவு 7.00 மணியளவில் இயற்கை எய்தினார்.  தான் வாழ்ந்த காலத்தில் சமுகத்திற்கு பயன்பட்டது போலவே இறந்த பின்னும் பயன்பட வேண்டும் என்று விரும்பிய அவர் தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடுக்கக் கோரியிருந்தார். அவர் விருப்பப்படியே  5.3.2020 அன்று அவர் உடல், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது.

பாரெங்கும் சென்று தமிழ் பரப்பிய பேராசிரியர் அறிவரசன் நினைவு நாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *