பெண் விடுதலை

பெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே!

மனித குலம் தோன்றிய நாளிலிருந்து சுரண்டும் வர்க்கத்திற்கும், சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு சுரண்டப்படுகிறார்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பெரும் கூட்டம் பெண்களே. இந்த சுரண்டலில் இருந்து பெண்களை மீட்பதற்கான போராட்டம் வரலாறு முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் என்பது ஒடுக்கப்படுகிற மக்களின் உரிமைப் போராட்டமாகவே நடைபெற்றுள்ளது.

கொடுங்கோலன் ஜார் மன்னருக்கு எதிராக 1917-ல் ரஷ்ய மக்கள் நிகழ்த்திய புரட்சி என்பது புரட்சியாளர் லெனின் தலைமையில் நடைபெற்றது.

ரஷ்யப் புரட்சியின் பெண்கள்

ரஷ்யப் புரட்சியிலும், அதை நடத்திய போல்ஸ்விக் கட்சியிலும் முன்னணித் தலைவர்களாக பல பெண்கள் இருந்தனர்.

நதேஷ்தா குரூப்ஸ்கயா (Nadezhda Krupskaya) (லெனின் மனைவி), அலெக்சாண்ட்ரா கொலண்டாய் (Alexandra Kollontai), யெலினா ஸ்டாசோவா(Yelena Stassova), இனெஸ்ஸா ஆர்மந்த்(Inessa Armand) மற்றும் கொங்கோரிடியா சமியோலோவா (Konkordia Samiolova) போன்ற பலர் பெண் சமத்துவத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு, போல்ஷ்விக் தலைமையின் மிக முக்கியமான தலைவர்களாக உருவானார்கள்.

இந்த தலைவர்கள் ரஷ்யப் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களாகவும், ரஷ்யப் புரட்சிக்கு தலைமை தாங்கக் கூடிய தலைவர்களாகவும் இருந்தார்கள். ஜார் மன்னனின் அடக்குமுறைக்கு எதிராக ரஷ்ய மக்களின் போராட்டம் கூர்மை அடைந்து கொண்டிருந்த பொழுது தங்களை தூய பெண்ணியவாதிகளாகக் காட்டிக்கொண்ட “பூர்ஷ்வா பெண்கள்”, போல்ஷ்விக்குகளைக் கண்டு அஞ்சினார்கள். 

போல்ஷ்விக் பெண்களோ, பெண் விடுதலைக்கான போராட்டம் என்பது தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்திவிட கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்தள். ரஷ்ய சமூகத்தை சோசலிச சமுகமாக மாற்றுவதே பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் என்று உறுதியாக இருந்தார்கள்.

சோசலிச சமூகத்தின் வழியேதான் பாலின சமத்துவம் முடியும்

போல்ஷ்விக் பெண்கள் மத்தியில், “பெண்கள் பிரச்சனை” என்பது, ஜாரிஸ்ட் ரஷ்யாவைத் தூக்கி எறிவது என்கிற தொழிலாளர் வர்க்கத்திற்கான லட்சியங்களோடு இருக்க வேண்டும் என்பதிலும், சோசலிசத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இதன்மூலம் மட்டுமே பாலின சமத்துவத்தைக் கொண்டுவர முடியும் என அவர்கள் நம்பினார்கள். 

உண்மையில், 1914 இல் போல்ஷ்விக் பெண்கள் உழைக்கும் பெண்கள் என்று பொருள்படும் ரபோட்னிட்சா (Rabotnitsa) என்னும் ஏட்டைக் கொண்டு வந்தார்கள். ஆயினும் இந்தத் தலைவர்கள் எல்லாரும் புரட்சிக்கு இட்டுச்சென்ற மாபெரும் மக்கள் எழுச்சியில் பங்கேற்ற வீரப்பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவேயாகும். 

இப்படித்தான் ரஷ்யப் புரட்சிக்கு பெண்கள் போராடினார்கள்

அலெக்சாண்ட்ரா கொலண்டாய் இவ்வீராங்கனைகளைப் பற்றி தன் நினைவுக்குறிப்பில் எழுதுகிற பொழுது,

”ஒருவர் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தோமானால், அக்டோபர் புரட்சியில் பங்கேற்ற பெண்களை உன்னிப்பாகப் பார்த்தார்களென்றால், அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் வறிய நிலையில் வாழ்பவர்களாக, பட்டினி கிடந்து வருபவர்களாக இருப்பதைப் பார்க்க முடியும்…அவர்கள் தலையில் குளிருக்காக அணிந்திருக்கும் குல்லாய்கள் கிழிந்து காணப்படுவதைக் காண முடியும். (பலருக்கு அதற்குக்கூட வழியில்லாமல் சிவப்புக் கைக்குட்டையை அணிந்திருப்பார்கள்).

கிழிந்த ஆடைகள், ஒட்டுப்போட்ட குளிர்கால ஜாக்கெட் அணிந்த இளம் பெண்கள் மற்றும் வயதான பெண்கள், பெண் தொழிலாளர்கள் மற்றும் வீரர்களின் மனைவிமார்கள், விவசாயப் பெண்கள், நகர்ப்புறங்களிலிருந்து வந்துள்ள குடும்பத் தலைவிகள் எனப் பார்க்க முடியும். அந்தக் காலத்தில், மிகவும் அபூர்வமாகத்தான் அலுவலக ஊழியர்களும், வேலை பார்க்கும் பெண்களும், படித்த பெண்களும், நாரீமணிகளும் பங்கேற்றார்கள். ஆனால் பின்னர், அக்டோபர் புரட்சியின்போது செங்கொடியை ஏந்தி வந்த அறிவுஜீவிகளில் – ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக்கழக இளம் மாணவிகள், பெண் மருத்துவர்கள் — மிகவும் உற்சாகத்துடன், சுயநலமின்றி, அதே சமயத்தில் லட்சிய வேட்கையோடு கலந்துகொண்டார்கள். 

அவர்கள் எங்கே அனுப்பப்பட்டார்களோ, அங்கே சென்றார்கள். போர்முனைக்குச் செல்ல வேண்டும் என்கிறீர்களா? வீரர்களின் தொப்பியை அணிந்துகொண்டு, செஞ்சேனை வீரர்களாக மாறினார்கள். அவர்கள் கைகளில் சிவப்புப் பட்டையை அணிவிப்பீர்களேயானால், பின்னர் அவர்கள் போர்முனையில் காயம்பட்டுக் கிடக்கும் செஞ்சேனை வீரர்களுக்கு முதலதவி செய்திட விரைந்து சென்றார்கள். படைகளின் தகவல் தொடர்பு மையங்களில் பணியாற்றினார்கள். இவ்வளவையும் மிகவும் உற்சாகத்துடனும், விரைவில் பெருஞ்சிறப்பு வாய்ந்தவை நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் செய்தார்கள். நாங்கள் அனைவருமே புரட்சியை மேற்கொண்டுள்ள வர்க்க சக்கரத்தின் ஒரு சிறிய பல் என்ற உணர்வுடன் இருந்தோம்.” 

என்று பதிவு செய்திருந்தார்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின் பெண்களுக்கு கிடைத்த உரிமைகள்

1917 இல் புரட்சி வெற்றி பெற்றது. ஜூலையில் பெண்களுக்கு வாக்குரிமையும், பொது நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் நவம்பரில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, வாக்களித்தவர்களில் பல பகுதிகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாகும். போல்ஷ்விக்குகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், புரட்சியின் சமத்துவ சிந்தனைகள் தவிர்க்கமுடியாத விதத்தில், புதிதாகத் துளிர்விட்ட சோவியத் அரசின் மனோபாவம் மற்றும் கொள்கைகளில் பெண்களுக்கான முக்கியத்துவத்துடன், அவர்களுக்கு சமூகத்தில் இருந்துவந்த ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையிலிருந்து விடுதலை அளிக்கக்கூடியதாக வளர்ந்தது.

மாமேதை லெனின் இது குறித்து கூறியதாவது: “மனித குலத்தின் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்கள், முதலாளித்துவத்தின் கீழ் இரட்டிப்பு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். உழைக்கும் பெண்களும், விவசாயப் பெண்களும் மூலதனத்தால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கும் மேலாக, பல முன்னேறிய பூர்ஷ்வா குடியரசு நாடுகளில்கூட, பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான உரிமைகள் மறுக்கப்பட்டே இருந்துவருகின்றன. அங்கேயுள்ள சட்டங்கள் பெண்களுக்கு ஆண்களுக்கிணையாக உரிமைகளை வழங்கிடவில்லை. இரண்டாவதாக, (இதுதான் மிகவும் முக்கியமானது) அவர்கள் வீட்டு வேலைகளுடன் பிணைக்கப்பட்டு (“household bondage”) இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து வீட்டு அடிமைகளாக (“household slaves”) இருந்து வருகிறார்கள். மிகவும் அழுக்கடைந்த சமையலறைகளில் திரும்பத்திரும்ப அரைத்த மாவையே அரைத்திடும் விதத்தில் உற்சாகமற்ற வேலைகளை, கடினமான வேலைகளை அதீதமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.” என லெனின் தன் உரையில் பதிவு செய்திருக்கிறார்.

பெண்கள் பெரும் எண்ணிக்கையில் ஊதியத்துடன் வேலை பார்க்க வந்தார்கள். அடிமைத்தளையிலிருந்து பெண்களை விடுவித்திட உதவியதைப் பார்க்க முடிந்தது. பெண்களின் பொருளாதார தற்சார்பை  வலுப்படுத்தும் விதத்தில் எண்ணற்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சொத்து உறவுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திருமணத்திற்குப் பின்னர் பெண்கள் இயங்குவதிலிருந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நிலம் வைத்துக் கொள்வதற்கும், ஆண் – பெண் இருவருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. குடும்பப் பொறுப்புகளிலும் பாலின சமத்துவத்தும் என்பது பின்பற்றப்பட்டது. 

புதிய சட்டங்களின் மூலமாக சமூக மாற்றங்களும் கட்டாயப்படுத்தப்பட்டன. மதச்சார்பற்ற முறையிலேயே திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. விவாகரத்து எளிதாக்கப்பட்டது. பெண்கள் கருத்தடை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மணமான பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும், மணமாகாத பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் இடையே சட்டபூர்வமாக எந்தப் பாகுபாடும் கிடையாது. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மருத்துவ விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவமனைகளில் அதிக அளவில் மகப்பேறு வார்டுகள் அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் பெண்களின் வாழ்க்கையில் மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தன. அதேநேரத்தில் ஐரோப்பாவில் வேறெந்த நாட்டிலும் இந்த அளவிற்கு பெண்களுக்கு உரிமைகளோ அங்கீகாரமோ அளிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது.

இந்த வெற்றியை ரஷ்யப் பெண்கள் ஒட்டுமொத்த மக்களுக்குமான விடுதலைப் போராட்டத்தின் ஊடாகத்தான் பெற்றார்கள். ஒட்டுமொத்த மக்கள் விடுதலைக்கான இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுதான் பெற்றார்கள். இது உலக அளவில் பெண்கள் பெற்ற மாபெரும் வெற்றியாகும்.

தமிழ்நாட்டில் பெண் உரிமைக்கான போராட்டம்

பெரியார் குடியரசு இதழில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

“இளம் வயது விவாக விளக்கு மசோதா தொடர்பான சட்டம் இயற்றுவது பற்றிய வாதம் சென்னை சட்டசபையில் நடைபெற்ற சமயத்தில் பார்ப்பனர் அல்லாதார் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி ஏ.பி.பத்ரா அவர்கள் சற்று மாறுதலாக பேசியதற்காக அவரை பார்ப்பனரல்லாதார் கட்சியில் தான் வகித்த பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும் என்று கேட்டிருந்தோம். இவர் பார்ப்பனரல்லாதார் கட்சியை சேர்ந்தவர் என்பது பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே அவமானம்”. (23 .9 .1928 குடியரசு தலையங்கம்)

“இந்திய நாட்டின் ஆளுமை உரிமை இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்பு பிரிவினையும் ,சாதி வேற்றுமையும் தொலைய வேண்டும் என்பதற்காக சமூக சீர்திருத்தக்காரர்கள் போராடுகிறார்களேயன்றி, பெண்மக்களுள் ஒரு பகுதியார் அழிந்து வருவதைப் பற்றி பாராமுகமாகவே பார்த்து வருகின்றனர் ” என்று தந்தை பெரியார் அவர்கள் 22.8.1926 அன்றைய குடியரசில் எழுதியுள்ளார். பொதுவாகவே இந்த சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான பெண்களின் ஒரு பகுதியாக உள்ள விதவைகளின் மறுமணம் குறித்து தன் கருத்தை இவ்வாறாக கூறியுள்ளார்.

பெரியார் எழுப்பிய கேள்வி

“திராவிடப் பேரறிஞர்களின் மனைவிகள், தங்கைகள் ,தமைக்கைகள், பெண் பிள்ளைகள் எங்கே எப்படி பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படி தகுதிபடுத்திக் கொண்டார்கள்? எப்படி இருக்கிறார்கள்?

ஜவுளிக்கடைகளில் விளம்பரத்திற்கு வைத்திருக்கும் பொம்மைகள் போலும், விளம்பரங்களில் வரும் படங்கள் போலுமே உள்ளனர். நாட்டுக்கும், மனித சமுதாயத்திற்கும், பெண்கள் உலகத்திற்கும் இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? நம் பெண்கள் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா ?

இந்த பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில்தானே தங்கை, தமக்கை பிறந்தனர். இவர்களின் தகப்பன்மார்கள் தானே அவர்களுக்கும் தகப்பன்மார்கள். அப்படியிருக்க இவர்களுக்கு இருக்கும் புத்தி, திறமை அவர்களுக்கு எப்படி இல்லாமல் போகும்? அவர்களின் அறிவைப் பயன்படுத்தாதது நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் நட்டமா? இல்லையா?”

இவ்வாறாக தன் சகாக்களை நோக்கிய கேள்வியை 21.9.1946 அன்றைய குடியரசில் கேட்டுள்ளார்.

பெண் விடுதலை, சம உரிமை என்ற அத்தியாயத்தில் இன்றைய நாளிலும் தீர்வுகள் கிடைக்காத கேள்விகளை கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன் கேள்வி எழுப்பியவர் பெரியார். வெகுசன மக்களால் கடவுள் மறுப்பாளர் என்ற ஒற்றை விடயத்தின் வாயிலாக மட்டுமே பார்க்கப்படுகின்ற பெரியார் அவர்கள் அக்காலச்சூழலில் நிகழ் பிரச்சனைகளை மட்டுமே சமூக சீர்திருத்தவாதிகள் பேசிக்கொண்டிருந்த நிலையில், பெண்களுக்கான சமூக தடைகள் பற்றிய புதிய பரிமாண கேள்விகளையும் அதற்கான தீர்வுகளையும் பேசியவர் தந்தை பெரியாரும் அவர் வழிவந்த திராவிட இயக்கமும்.

இச்சமூக தடைகளை உடைப்பதன் மூலம் பெண்களுக்கான சுயமரியாதை மற்றும் பொருளாதார விடுதலை குறித்தும், பெண் விடுதலை எவ்வாறு சமூகத்தை முன்னேற்ற பாதை நோக்கி இட்டுச் செல்லும் என்றும், சமூகத்தின் அவலங்களான சாதியும் மதமும் பெண்களின் இயற்கை பண்புகளையும், இயற்கை உணர்வுகளையும் இழிவுபடுத்தி அதன்பொருட்டு அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருந்த கொடுமைகளை நோக்கி தன் கேள்விகளை சமரசம் இன்றி கேட்பதும், அதற்கான தீர்வுகளுக்காக தொய்வின்றி போராடியதும் சுயமரியாதை இயக்கமான திராவிட இயக்கம்.

அதனால்தான் இந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களான மீனாம்பாள், ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி போன்ற தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான பெண்களும் அந்த இயக்கத்தில் இணைந்து சனாதன தர்மத்தின்படி நாலாந்தர மக்களாக  நடத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக போராடினர். அந்த போராட்டத்தின் ஊடாகத் தான் பெண்கள் மீது மனுதர்மம்  விதித்த அத்தனை இழிவுகளையும் நீக்கும் போராட்டத்திலும் இன்று வரை  முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்புலிகள்

மாலை ஆறு மணி ஆகியதும் பெண்கள் வீட்டிற்கு வெளியே செல்லக் கூடாது என்கிற பிற்போக்குத்தனமான பண்டைய மரபில் ஊறித் திளைத்திருந்த தமிழ் மக்களின் நம்பிக்கைகள் யாவையும் தகர்த்துதெரியும் வண்ணம் தன்னை தாக்கவரும் எதிரியினை வழிமறித்து போர் செய்ய பெண்களாலும் முடியும் எனும் எதார்த்த நிலையினை ஈழ மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் நிகழ்த்திக் காட்டியவர்கள் விடுதலைப் புலிகள்.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1985-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பெண் புலிகளுக்கு என்று தனியான பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு, பெண் புலிகளின் போரிடும் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில் செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பெண் புலிகள் மத்தியில் உலகத்தில் பெண் விடுதலை எவ்வாறு இருக்கின்றது என முதலில் பெண்களுக்கான செயல் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்காகவெல்லாம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆரம்பத்தில் ஆண் போராளிகளோடு இணைந்து களமாடிய பெண் போராளிகள் பின்னர் தனித்து நின்று தாக்குதல் செய்யும் அளவிற்கு வல்லமை பெற்றார்கள். பெண் போராளிகள் தங்களின் முதல் தாக்குதலை இலங்கையின் வட பகுதியான மன்னார் அடம்பன் பகுதியில் நிகழ்த்திக் காட்டினார்கள். இலங்கையின் மணலாறு இராணுவ முகாம் மீது 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்பது பெண் புலிகளின் வீரத்திற்கான எடுத்துக்காட்டாகும். மணக்குள முகாம் மீதான தாக்குதல் தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என்பவை பெண்புலிகளின் சாதனையை உலகிற்கு உணர்த்திய கள முனைகளாகும்.

கடலுக்கு அடியில் சென்று போர்க்கப்பல்களை அழிப்பது முதல் விமான எதிர்ப்பு ஏவுகணை இயக்குதல், எதிரியின் முகாமுக்குள் சென்று உளவு தகவல்களை சாதுரியமாக திரட்டுதல் வரை பல சிறப்பான செயல்பாடுகளை பெண்போராளிகள் செய்தனர்.

பிற்காலத்தில் மரபுவழித் தாக்குதல் முதல் களமுனையில் ஆண் போராளிகளை மிஞ்சக் கூடிய பல சாதனைகளையும் செய்து காட்டியிருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் மருத்துவப் பிரிவு, ஒலி-ஒளி பிரிவு, பொறியியல் துறையில் புலிகள் வசமிருந்த அனைத்து துறைகள், இலக்கியத் துறை, நிர்வாகத் துறை என பல துறைகளிலும் சிறப்பான செயல்திறனை உணர்த்திக் கொண்டே இருந்தார்கள்.

பிற்போக்குத்தனமான ஆணாதிக்க சமூகத்தில் தங்களின் பாதுகாவலனாக, சகோதரனாக தங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் தலைவனாக பிரபாகரன் அவர்களை பெண்புலிகள் பார்த்தார்கள் என்று எழுத்தாளர் மாலதி தன், “எனது நாட்டில் ஒரு துளி நேரம் “என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழத்து பெண்களின் விடுதலை என்பது தமிழீழ விடுதலையின் ஒரு அங்கமே என விடுதலைப் புலிகள் இயக்கமும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண்களும் போராடி இருப்பது நமது சமகால வரலாறு.

தமிழகத்தில் சூழலியல் காக்க, நிலத்தை, நீரை, வாழ்வாதாரத்தைக் காக்கப் போராடும் பெண்களே தமிழகத்தின் அனைத்து உரிமைகளுக்கும், பெண் உரிமைக்கும் போராடுகிறவர்களாக இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *