மாலதி மைத்ரி

கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்

மாலதி மைத்ரி தமிழின் மிக முக்கியமான கவிஞர், செயற்பாட்டாளர். தமிழின் முதல் பெண்ணிய வெளியீட்டகமான அணங்கு பதிப்பகத்தை உருவாக்கியவர். அதே பெயரில் பெண்ணிய இலக்கிய இதழினையும் நடத்தி வருகிறார். விளிம்பு நிலை மக்களின் அரசியல் மற்றும் மனித உரிமை அரசியல் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுபவர். 

சங்கராபரணி, நீரின்றி அமையாது உலகு, நீலி, எனது மதுக்குடுவை, முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை, கடல் ஒரு நீலச்சொல் என்பவை இவரது கவிதைத் தொகுதிகள். விடுதலையை எழுதுதல், நம் தந்தையரைக் கொல்வதெப்படி, வெட்டவெளி சிறை என்பவை இவரது கட்டுரை நூல்கள். 

இதோ மாலதி மைத்ரி அவர்கள் பரிந்துரைக்கும் நூல்கள்

இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் நான் பரிந்துரைக்கும் நூல்கள் மிக முக்கியமானவை. பெண்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுகிற நூல்கள், பெண்களுடைய நடத்தைக்கான விதிகளை வகுத்து வைத்திருக்கிற இந்து மதம், உலக அளவில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் குடும்ப வன்முறைகளைப் பற்றி பரவலாக கவனம் பெற்ற புகழ்பெற்ற நாவல்கள் மற்றும் சிறுகதைகளை பரிந்துரை செய்கிறேன். 

இந்த நூல்கள் அனைத்து பெண்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டியது. இவற்றை வாசிப்பது முக்கியமாக உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும். உங்களுடைய சுய சிந்தனையை நிச்சயமாக வளர்த்தெடுக்கும்.

1. மனு நூல்

எழுத்து என்பதும், எழுத்து செயல்பாடு என்பதும் ஒரு ஆதிக்க கருத்தியலையும், அதுசார்ந்து அதிகாரத்தையும் உருவாக்கும் ஒரு செயல்பாடு. எழுத்து என்பது சாதாரண ஒரு வாசகருக்கும் எழுத்தாளருக்குமான ஒரு கம்யூனிகேஷன் மட்டுமே கிடையாது.

இன்றைக்கு ஊடகம் என்பது ஆதிக்க கருத்துருவாக்கத்தை எப்படி உருவாக்குகிறது என்பதை நாம் நம்புகிறோம். அது பரவலாக நிரூபிக்கபட்ட உண்மையாக இருக்கிறது. எழுத்தும் அப்படித்தான்.

ஊடகம் வரும்முன் நூல்கள் அந்த செயல்களை செய்து கொண்டிருந்தன. அதனால் தான் மனுநூல் வந்தது. இன்றைக்கு மனுவின் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட மனிதர்கள் சனாதனவாதிகளாக, முழுமையாக ஒரு ஆதிக்கவாதிகளாக  உருவாகியிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மனுவின் ஆதிக்க  உளவியலை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

அனைத்து பெண்களும் மனுநூலை கண்டிப்பாக படிக்க வேண்டும். அது வரையறுக்கும் போதே ஆண் பெண் உறவை எப்படி கட்டமைக்கிறது,  ஆண் பெண் உறவு மட்டும் இல்லாமல் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு பாகுபாட்டை எப்படி கட்டமைக்கிறது,  அதனை எப்படி  ஒவ்வொரு மனிதனையும் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. நாம் எப்படி அந்த கருத்தியலிடம் சரணடைகிறோம்? அந்த கருத்தியலுக்கு சரணடைய இந்த சமூகத்தில் இருக்கும் நிறுவனங்கள் எப்படி துணை போயிற்று?   அப்படியென்றால் இந்த உலகில் பெரும்பான்மை ஆதிக்கமானது அதிகாரத்தில் இருக்கிறவர்கள் எதனை முதன்மைப்படுத்துகிறார்களோ அந்த நூலோ அல்லது  கருத்தியலோ, அதுவே இயல்பாக சமூகத்தில் பரவியிருக்கிறது. 

எழுத்து மனித மனங்களை வளர்த்தெடுப்பதில் அதிக பங்காற்றுகிறது. அதனால் தான் ஒவ்வொருவரும் மனுவை கண்டிப்பாக படிக்க வேண்டும். நான் படித்த திரிலோக சீத்தாராம் மொழிபெயர்த்த (அலைகள் வெளியீட்டகத்தின் வெளியீடு) மனு எளிதான தமிழில் நல்ல மொழிபெயர்ப்புடன் இருக்கிறது. 

2. ஆனந்தாயி

குடும்ப வன்முறையை தமிழில் முதன்முறையாக பேசிய நாவல் சிவகாமி எழுதிய ஆனந்தாயி.

பெண்ணுடைய நிலையைப் பற்றிக் குறிப்பிடும்போது, பொதுவாக ஒடுக்கப்படும் இனத்திலும் ஒடுக்கப்படும் இனமாக  இருப்பதாக சொல்வார்கள். உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக கருப்பினம் இருக்கிறது. இந்திய அளவில் தலித்கள் இருக்கிறார்கள். ஒரு தலித் குடும்பத்திற்குள் ஒடுக்கப்படும் ஒரு இனமாக பெண் எப்படி இருக்கிறாள்? அந்த குடும்பங்களில் உள்ள ஆண் மனநிலை எப்படி இருக்கிறது? ஆணாதிக்கவாதியாக இருக்கிறான். சனாதானவாமானது அதிகாரம் வரும்போது அதிகமான வன்முறையை செலுத்துவதற்கான தைரியத்தையும் துணிவையும் எப்படி வழங்குகிறது?

ஒரு பெண் குடும்பத்தில் எப்படி நடத்தப்படுகிறார்? குடும்பத்திற்குள் ஒரு ஆண் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் அவன் தேடிக் கொண்ட பெண்கள் மீதான வன்முறையை எப்படி நடத்துகிறான் என்று மிகவும் நுட்பமாக தைரியமான நாவலாக எழுதி இருப்பார்.

3. கவலை

இதுவும் குடும்ப வன்முறை குறித்து பேசுகிற நாவல்தான். அழகிய நாயகி அம்மாள் அந்த ஒரே ஒரு நாவல் தான் எழுதியிருக்கிறார். இந்த நாவல் புனைவு, தற்புனைவு உள்ளிட்ட இரண்டு வகையிலும் உள்ள ஒரு நாவலாகும்.

அந்த நாவலுக்குள் குடும்ப வன்முறை குறித்து பேசியிருப்பார். படித்த குடும்பம், முற்போக்கான குடும்பம், அந்த குடும்பத்திற்குள் ஒரு பெண் எப்படி எந்தவித உரிமையும் இல்லாமல் இப்படி கண்காணிப்பிற்கு உள்ளாகிறார்? சுயமாக செயல்பட விடுவது இல்லை. மேலும் குடும்பத்தை நடத்த முடிவு எடுக்கிற எந்தவொரு சின்ன உரிமையும் கிடையாது. அரிசி ஒரு ஆழாக்கு என்பதை அளந்து தான் கொடுப்பார்கள். சமைப்பதில் கூட ஒரு பெண்ணை சுயமாக முடிவெடுக்கும்  அதிகாரம்  இல்லாமல், குடும்ப அமைப்பு ஒடுக்கி நசுக்குகிறது என்பதை தன்னுடைய  வாழ்க்கை அனுபவத்தில் இருந்து நாவலாக எழுதியிருப்பார். 

இந்த நாவலை நாட்டார் வழக்காற்றியல் துறை வெளியிட்டது. தற்போது கிளாசிக் வரிசையில்   அது வெளிவந்து இருக்கலாம்.

 4. ஊதா நிற செம்பருத்தி

ஆப்ரிக்க இலக்கியத்திலிருந்து இந்த நாவல் எழுத்தாளர் பிரேம் மொழிபெயர்ப்பில் அணங்கு வெளியீடாக வந்தது. ஊதா நிற செம்பருத்தியும் குடும்ப வன்முறை குறித்துதான் பேசுகிறது. ஒரு நைஜீரிய ஆண் வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரு ஆண், தன் குடும்பத்திற்குள் குழந்தைகளை தன் மனைவியை எப்படி நடத்துகிறான் என்பதை மையப்படுத்தியது.

அந்த ஆண் ஊர் முழுவதும் எவ்வளவு நல்லவனாக இருக்கிறான், ஜனநாயகவாதியாக இருக்கிறான், அதிகாரத்துக்கு எதிரானவனாக இருக்கிறான், அதிகாரத்துக்கு எதிராக பேசக்கூடியவர்களுடன் இணைந்து செயல்படுகிறான், நிறைய தொண்டு நிறுவனங்களுக்கு புரவலராக இருக்கிறான், அப்படி இருக்கக் கூடிய ஒரு ஆண் தன் குடும்பத்திற்குள் ஒரு ஆண் உளவியலில் இருந்து ஆணாதிக்கவாதியாக குடும்ப வன்முறை நிகழ்த்தக் கூடியவனாக இருக்கிறான் என்பதை பேசும் நாவல் அது. இந்த நாவல் சுய வரலாறு, புனைவு இரண்டு தளத்திலும் இயங்கக்கூடிய ஒரு நாவல்.

5. இஸ்மத் சுக்தாய் கதைகள் 

இஸ்மத் சுக்தாய் உடைய சிறுகதை தொகுப்பு. விஜயபத்மா என்பவர் மொழிப்பெயர்த்து, எதிர் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. இது இஸ்லாமிய சமூகத்தில் இருக்கக்கூடிய பெண்களின் இருப்பு குறித்து, அவர்களின் சுதந்திரம் குறித்து, ஆணுடைய மனநிலை பெண்களை நடத்துகிற விதம் குறித்து பேசுகிற கதைத் தொகுப்பாகும். 

திருமண முறைகள் குறித்து பெண்ணின் விருப்பமே இல்லாமல் அந்த திருமண உறவுக்குள் எப்படி தள்ளப்படுகிறாள் என்பது குறித்தும் பேசக்கூடிய கதைத் தொகுப்பு. இது எல்லோரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு. சின்ன சின்ன விஷயங்களில் மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன ஐந்து நூல்களில் மனுநூல் தவிர்த்து ஆனந்தாயி, கவலை, ஊதா நிற செம்பருத்தி, இஸ்மத் சுக்தாய் கதைகள் ஆகிய நான்கும் புனைவு மற்றும் தற்புனைவு ஆகிய இரண்டு தளத்திலும் செயல்படக்கூடியவை. மிகவும் விறுவிறுப்பாகவும் இருக்கக்கூடிய புத்தகங்களாகும். அதில் கையாளப்பட்டிருக்கும் மொழி, அழகியல் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும். இயல்பாகவே சொல்வார்கள் பெண்கள் கதைகள் சொல்வதில் வல்லவர்கள் என்று. எழுத்து என்பது ஆண்களின் இடம் என்பதை உடைத்தெறிந்த படைப்புகள் இவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *