நேற்றைய பத்திரிக்கைகளில் நடந்தது வெறும் விளம்பரம் தொடர்பான பிரச்சினை அல்ல. அது ஒரு முக்கியமான பரிமாணம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகத்தை பாசிஸ்ட்கள் சிறிது சிறிதாக செல்லரித்து நேற்றைக்கு மொத்தமாக முறித்துவிட்ட பரிமாணத்தை அடைந்து விட்டார்கள். இதே யுக்தி நேற்று அசாமில் நிகழ்த்தப்பட்டு இருப்பதை வைத்து இது அதிமுகவோ, எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே செய்தது கிடையாது என்பதும், எடப்பாடி பழனிச்சாமியால் மட்டும் இதனை செய்துவிடவும் முடியாது என்பதும், இதற்குப் பின்னால் பிக்பாஸ்களாக நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இருப்பதும் புரிகிறது.
அவர்கள் ஊடகங்களை மிரட்டி பணியவைத்தார்களா அல்லது ஊடகங்களும் பாசிஸ்ட்களோடு சேர்ந்து பயணிக்கத் தொடங்கிவிட்டதா என்பது தெரியாது. ஆனால் நேற்றோடு இந்த துணைக்கண்டத்தின் ஊடகங்களுக்கு கடந்தகாலம் என்பது கிடையாது.
இனி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் “நாங்கள் எமெர்ஜென்சியை எதிர்த்தவர்கள்” என்று சொல்லிக்கொள்ளும் எந்த தார்மீக உரிமையும் அவர்களுக்கு கிடையாது. அனைத்து பத்திரிக்கைகளும் ஏப்ரல் 4-ம் தேதியோடு காலத்தை இழந்துவிட்டார்கள். தங்கள் பத்திரிக்கை வரலாற்றின் அனைத்து அறங்களையும் அழித்துவிட்டார்கள்.
முதலில் பத்திரிக்கை துறையில் உள்ளவர்கள் இதை உணரவேண்டும். ஒரு விளம்பரத்தை புதிய செய்திபோல முதல் பக்கத்தில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். விளம்பரம் என்று குறிப்பிடாமல் பழைய பத்திரிக்கையின் செய்திகளை தங்களுடைய முகப்பு பக்கத்தில் போடுவது ஆபாசம்; அதைத்தான் நேற்று பத்திரிகைகள் செய்திருக்கின்றன. எழுத்தாளர் அழகியபெரியவன் அதைத்தான் எரித்து தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். மக்களை ஏமாற்றுவதை பற்றிய எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இதை செய்திருக்கிறார்கள்.
போலி செய்திகளை வாட்சப்பில் பரப்புவது ஒரு மோசமான தேர்தல் கட்சியின் தந்திரமாக இருக்கலாம். ஆனால் அதுவே ஒரு பொறுப்பான பத்திரிக்கையின் தொழிலாக இருக்க முடியாது. ஆனால் அதை நேற்று சாத்தியப்படுத்தி இருக்கிறது பாஜக.
பத்திரிக்கைத் துறையின் அணைத்து அறத்தையும் கொன்று மக்களை ஏமாற்ற அதுவே துணைபோய் இருக்கிறது. இந்த பரிமாணம் எவ்வளவு அச்சமானது என்றால் இன்றைக்கு மக்கள் நம்பக்கூடிய எந்த சுதந்திரமான அமைப்பும் இனி இல்லை என்பதுதான். இதற்கு பிறகு பத்திரிக்கைகள் எப்படி செய்திகளை வெளியிட முடியும். ஒரு பத்திரிக்கை ஒரு செய்தியை வேறு ஒரு இடத்தில இருந்து கையாள்கிறது என்றால் அதற்கான நன்றி அறிவிப்பு இருக்கும். அப்படி எதுவும் இல்லாமல் பல பழைய செய்திகளை புதிய செய்திபோல முதல் பக்கத்தில் வெளியிட்டு ஏமாற்றிவிட்டு இனி பத்திரிக்கைகள் எப்படி இயங்கும்?
மோடிக்கு பெரிய அண்ணனாக இருந்த ட்ரம்ப் அமெரிக்க தேர்தல் சமயத்தில் பைடன் தொடர்பான ஒரு மோசமான காணொளியை தேர்தல் பிரச்சாரத்திற்கு கையாள முயன்றபோது ஒட்டுமொத்த பத்திரிகைகளும் புறக்கணித்தன. ஒரு முழுமையான முதலாளித்துவ நாட்டின் பத்திரிகைகளுக்கு இருக்கும் அறத்தைக் கூட இந்திய பத்திரிக்கைத் துறை இழந்துவிட்டதுதான் நாம் மோசமான காலத்திற்குள் சென்று கொண்டிருப்பதற்கான சமிக்ஞைகள்.
இந்து குழுமத்தின் என்.ராம் இந்த நிகழ்வில் தனக்கு சம்மதம் இல்லை என்கிறார். அது தன்னுடைய இமேஜை காப்பாற்றிக்கொள்ளும் வெறும் தற்காப்பு நடவடிக்கையாகவே இருக்கிறது. உண்மையில் அவருக்கு எவ்வளவு ஆபத்தான நிலைக்கு
இந்திய பத்திரிகைத் துறையை பாசிஸ்ட்கள் நகர்த்தியிருப்பதை பற்றிய பொறுப்பான கவலை இருக்குமானால், அவருக்கு இருக்கும் சர்வதேச தொடர்புகள் மூலம் வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டும். அவருக்கு நெருக்கடி வந்தபோது உலகின் தலைசிறந்த பத்திரிக்கைகளை அவருக்காக குரல் கொடுக்க வைக்க முடிந்த சம்பவங்கள் அண்மையில் கூட நடந்தது. ஏனைய பத்திரிக்கை துறை ஆளுமைகள் இது குறித்து என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதும் முக்கியம்.
நடக்கும் நிகழ்வுகள் நம் கையறு நிலையைக் காட்டுகிறது. பாசிஸ்ட்கள் பலம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமான தன்னிச்சையான அத்தனை நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் வெறுமனே பார்த்துக்கொண்டு நிற்கின்றோம், மக்கள் மட்டுமே பலம். நாம் அவர்களிடத்தில்தான் சொல்ல வேண்டும். நடக்கும் அநீதிகளை மக்களிடத்தில் ஒப்படைப்போம்.
தேர்தல் காலம் என்பதையும் தாண்டி ஜனநாயகம் காக்கும் மிக முக்கியமான பணி ஒரு பொறுப்பான ஊடகத்திற்கு உள்ளது என்றே கருதுகிறோம். அதனடிப்படையில் நேற்று ஊடகங்கள் நடந்து கொண்டவிதம் ஊடக அறத்திற்கு எதிரானது என்பதை ஒரு சமூக பொறுப்புள்ள ஊடகமாக Madras Review முன்வைக்கிறது.