நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதுவரை நடந்த தேர்தல்களில் இல்லாத அளவிற்கு போலி செய்திகள் பரப்புரையில் முக்கியப் பங்காற்றியுள்ளன. சமூக ஊடகங்களில் போலி செய்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டு அது தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்கு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
முன்னணி நாளிதழ்கள் கூட உண்மைக்குப் புறம்பான செய்திகளை உண்மை என நம்பிய மிக மோசமான நிலை இந்த தேர்தலில் தான் நடந்துள்ளது.
1. டெமாக்ரசி நெட்வொர்க் பெயரிலான கருத்துக்கணிப்பு
டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் எனும் பெயரில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. இதில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறப்போவதாகக் கூறப்பட்டது. இதனை உண்மை என நம்பி தினமணி உள்ளிட்ட பத்திரிக்கைகள் செய்தியாகவே வெளியிட்டன. இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டது. நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைய பக்கங்களில் வந்திருந்ததால் பெரும்பாலும் எல்லோரும் உண்மை என நம்பினர். ஆனால் அடுத்த சில தினங்களில் டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நாங்கள் அப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிடவில்லை என்று கூறியபோது, இது அதிமுக பாஜகவிற்கு ஆதரவானவர்கள் போலியாக வெளியிட்ட கருத்துக்கணிப்பு என்று தெரிய வந்தது.
2. விஜயபாஸ்கர் தற்கொலை செய்துகொள்வேன் எனும் போஸ்டர்
விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திமுக வேட்பாளர் பழனியப்பன் பெரும் சவாலாக இருப்பதால், தொகுதிக்குள் மிக உருக்கமாக பேசி பிரச்சாரம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனது மகளையும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். தனக்கு சுகர் இருப்பதாகவும், தான் மாத்திரை சாப்பிடுவதாகவும் மிக செண்டிமென்ட்டாகப் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், தேர்தலில் தோல்வியடைந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று விஜயபாஸ்கர் கூறியதாக ஒரு போஸ்டர் மிக அதிகமாக வலம்வந்தது. பின்னர் அதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் அந்த சுவரொட்டியை மறுத்தார்.
3. கனிமொழி சபரிமலைக்குச் செல்வேன் எனும் நியூஸ்கார்டு
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திமுக ஆட்சிக்கு வந்தால் நான் சபரிமலை செல்வேன் என்று கூறியதாக பாலிமர் தொலைக்காட்சியின் டெம்ப்ளேட் உருவாக்கப்பட்டு மத ரீதியான உணர்வைத் தூண்டும் விதமாக போலியாக பாஜகவைச் சேர்ந்தவர்களால் பரப்பப்பட்டது.
4. பொன்முடி வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்துசெய்வோம் என சொன்னதாக பரவும் செய்தி
முன்னாள் அமைச்சர் பொன்முடி, ”வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம், வன்னியர்கள் வாக்கு எங்களுக்கு வேண்டாம், வன்னியர்களை நம்பி திமுக இல்லை” என்று பேசியதாக போலி செய்திகள் பரப்பப்பட்டு சாதி ரீதியான உணர்வைத் தூண்டும் விதமாக தேர்தல் ஆதாயத்திற்காக போலியாகப் பரப்பப்பட்டது.
5. திமுக உயர்சாதிப் பெண்களை காதலித்து மணப்பவர்களுக்கு பணம் தருவதாக பரப்பப்படும் செய்தி
இந்த தேர்தலில் ஒரு பெரும் பிரச்சாரமாக கொண்டு செல்லப்படும் போலி செய்தி என்பது திமுக தேர்தல் அறிக்கையில் 259-வது வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கான உதவித்தொகை குறித்த திரிபு செய்தி தான். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு 6000 ரூபாயும், ஒரு சவரன் தங்கமும் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்திருக்கிறது திமுக. அதனை வன்னியர்,செட்டியார்,கவுண்டர், தேவர், முதலியார் பெண்களை காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று திரித்து வீடியோ வெளியிட்டது மட்டுமல்லாமல், இடைநிலை சாதிகளின் வாட்சப் குழுக்களுக்கு அனுப்புவது முதல் ரெக்கார்ட் போன் கால் வழியாகவும் திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுகிறது.
சாதி, மத நம்பிக்கைகளை போலி செய்திகள் மூலமாக தூண்டி விடுவதை இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் முக்கிய யுக்தியாகக் கையாள்வது, எதிர்கால தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு எதிரான செயல் என்கிற அக்கறை கூட இதை செய்யும் கட்சிகளுக்கு இல்லை. உலகம் முழுவதுமே வலதுசாரிகள் தேர்தல்களில் போலி செய்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றிருப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. தற்போது அது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் படுகிறது. அமைதிப் பூங்கா என்று வர்ணிக்கப்படும் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கும் இப்படிப்பட்ட போலிச்செய்திகள் பரவுவதை அனுமதிப்பது நல்லதல்ல.