காயிதே மில்லத்

தமிழை நாட்டின் தேசிய மொழியாக அறிவிக்கச் சொன்ன காயிதே மில்லத்

காயிதே மில்லத் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

திருநெல்வேலி மாநகருக்கு அருகில் உள்ள பேட்டையில் 1896-ம் ஆண்டு ஜூன் 5-ம் நாள் துணி வணிகராகவும், மதத் தலைவாரகவும் இருந்த மியாகான் ராவுத்தர் அவர்களின் மகானாகப் பிறந்தார் காயிதே மில்லத். காயிதே மில்லத் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் மூலமே வளர்ந்தார். அரபு மொழியும், மத நூலும் கற்றுத் தேர்ந்தார்.

காயிதே மில்லத் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். காந்தி அழைப்பு விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுக்க தனது பி.ஏ.பொதுத்தேர்வை எழுதாமல் புறக்கணித்தார். அதன்பின் முஸ்லிம் லீக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 1945-ம் ஆண்டில் தமிழ்நாட்டில், முஸ்லிம் லீக்கின் தலைவரானார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக

1947-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி அகில இந்திய முஸ்லீம் லீக்கின் கடைசி மாநாடு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான், இந்தியா என்று இரு நாடுகளாக பிரிந்துவிட்டது. அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியை உடைத்து இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் முஸ்லீம் லீக் என்று பிரித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக காயிதே மில்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1949-ல் இந்திய யூனியன் முசுலிம் லீக் என்று மாற்றினார். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்.

காயிதே மில்லத் அனைத்து கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். நேரு, இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

வகித்த பதவிகள்

1946 முதல் 52-ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952-ம் ஆண்டு முதல் 58-ம் ஆண்டு வரை டெல்லி மாநிலங்களாவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.

1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார். 1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.

தொழிற்துறையில்

அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதே மில்லத் புகழ்பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டிப் பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.

தமிழே தேசிய மொழியாக வேண்டும்

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் 1949-ம் ஆண்டு இந்திய தேசிய அரசியலமைப்பு நிர்ணய சபை கூட்டத்தில் தமிழகம் சார்பாக கலந்து கொண்டிருந்தார் இசுமாயில் (அ) காயிதே மில்லத். அப்போது இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வட இந்தியர்கள் கோரிக்கை வைத்து அது மாபெரும் விவாதமாக மாறியது. நிர்ணய சபை கூட்டத்திலிருந்த இவர், “ஒரு மொழி இந்திய மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அம்மொழி நாட்டின் பழைமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே தேசிய மொழியாக்க வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து, “இந்த நாட்டில் பழமையும் உறுதியும் கொண்ட ஒரே மொழி தமிழ்தான். அது எனது தாய்மொழியும் கூட. நீங்கள் எந்த ஒரு வரலாற்று ஆய்வாளரிடமும் இந்தக் கூற்றை விவாதித்துப் பாருங்கள், நான் சொன்னதுதான் நிஜம்” என்று இந்தியாவின் சட்டத்தின் வழியாக இந்தி ஆதிக்கம் செலுத்த முயன்றபோது அதனை எதிர்த்து தமிழ் மொழியை தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர்.

தேவிகுளம், பீர்மேடு விவகாரங்களில் தமிழ்நாட்டிற்கு குரல் கொடுத்தவர்

தமிழக எல்லைப் போராட்டம் தீவிரமாக நடந்தபோது காமராஜர் உள்ளிட்ட தேசிய கட்சித் தலைவர்கள் பாரமுகமாக நடந்து கொண்டனர். ஆனால் தனது கட்சிக்கு கேரளாவில் தான் செல்வாக்கு அதிகம் என்று தெரிந்திருந்த பொழுதும், அது குறித்து கவலைப்படமால், “தேவிக்குளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை கேரளாவுக்கு கொடுக்க வேண்டும் என்று இங்கே கேட்கிறார்கள். அவை எல்லையோர பகுதிகள். தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள். அங்கே அவர்கள் வந்துவிட்டு போகிறவர்கள் என்று அப்பகுதி அரசு சொல்கிறது. பின்னர் எவ்வாறு கடந்த தேர்தலில் அவர்கள் அங்கே பெரும்பான்மையாக ஓட்டளித்தார்கள் என்று விளக்க முடியுமா? அப்பகுதி தமிழகத்தோடு தான் இணைக்கப்பட வேண்டும்!” என்று நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உரிமை குறித்து பேசியவர்.

சென்னை மாநில இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக 1946-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் குழுத் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய இசுலாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.

“காயிதே மில்லத்” இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல் புண் நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1972 ஏப்ரல் 5 நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் காலமானார்.

அவரது இறுதி நிகழ்வில் தந்தை பெரியார் உட்பட பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

காயிதே மில்லத்தை ‘அன்பின் உறைவிடம்’ என்று ஒருமுறை அறிஞர் அண்ணா புகழ்ந்தார். அப்படிப்பட்ட தலைவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்தின் நினைவு நாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *