பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி எழுதப்பட்ட அவரது வாழ்க்கைத் தொகுப்பு
தமிழகம் பிரிட்டிசாரிடமும், புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமும் அடிமைப்பட்டு இருந்த காலச்சூழலில் புதுவை முன்னணி வணிகரான கனகசபை, லெட்சுமி அம்மையாருக்கு 1891 ஏப்ரல் 29-ம்தேதி மகனாக பிறந்தார். சுப்புரத்தினம் என்று பெற்றோர் பெயர் வைத்தனர்.
திருப்புளிச்சாமி என்பவரிடம் ஆரம்பக் கல்வியாக பிரெஞ்சு மொழியும் கற்றார். அதன்பின் தமிழ் இலக்கண, இலக்கியங்களை மகா வித்வான் பு.அ.பெரியசாமி, புலவர் பங்காரு பத்தர் ஆகியோரிடமும் படித்தார். தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் இணைந்து தமிழ்ப் புலமை தேர்ச்சி பெற்றார்.
1909-ம் ஆண்டு கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பதவியேற்றார். 1920-ம் ஆண்டு பழநி அம்மையாரை திருமணம் செய்தார். தேசபக்தராக இருந்த இவர் பாரதியின் கவிதைகளாலும், கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்டார்.
அரசுப் பணியில் இருந்து தேசிய விடுதலைக் கருத்துக்களை எழுத முடியாததால், கே.எஸ்.பாரதிதாசன் என்ற பெயரில் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார்.
பாரதியார், வவேசு அய்யர், அரவிந்தர் உள்ளிட்டவர்கள் தலைமறைவாய் இருந்தபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டும் இன்றி, அவர்கள் தப்பிச் செல்லவும் உதவியவர். ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி, புதுச்சேரி வந்தபோது அவரை போலீசுக்கு தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டுசென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். தீவிர சுதேசிவாதியாக இருந்தார் கவிஞர்.
1929-30 ஆம் ஆண்டு காலக்கட்டம் என்பது சிந்தனைகளும் அரசியல் கொள்கைகளும் ஒரு மாறுதல் அடையும் காலகட்டமாக இருக்கிறது.
காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் 1925-ம் ஆண்டு குடியரசு மூலம் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார். எல்லா வகையான அடிமைத்தனங்களையும் எதிர்த்து ஒரு புயலைப் போல கிளம்பிய இந்த இயக்கம் தமிழகத்தைப் போன்றே புதுவையிலும் பெரும் வளர்ச்சி அடைந்தது.
புதுச்சேரியில் சுயமரியாதை இயக்கத்தினைத் துவக்கி வளர்த்தெடுத்தவர் ம.நோயேல் அவர்கள். சுயமரியாதை இயக்கத்தின் பெரும் தூணாகவும் புரவலராகவும் இருந்த நோயேல் பாரதிதாசனுக்கும் புரவலராகவும் இருந்தார்.
1929-ல் எழுதப்பட்ட ‘தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு” என்னும் நெடுங் கவிதையைக் குறுநூலாகத் தனது சொந்த செலவில் 1930-ல் முதன்முதலாக வெளியிட்டவர் இந்த நோயேல் பெருந்தகைதான். இவர் வழியாகவே திராவிட இயக்கத்திற்குள் வந்த சுப்புரத்தினம் பாரதி தாசன் ஆனார்.
வர்ண எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மொழி உணர்வு, இன விடுதலை, வர்க்க பேதம், பெண்ணடிமைத்தனம் என அத்தனையும் எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சார கவிஞராகவே உருவெடுத்தார்.
அதனால்தான், அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது கவிஞர் வைரமுத்து, ”எல்லோரும் பாட்டுக்கு உரை எழுதிய காலத்தில் பெரியாரின் உரைக்கெல்லாம் பாட்டு எழுதியவர் பாரதிதாசன்” என்று குறிப்பிட்டார்.
அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய போது பாரதிதாசனும் தி.மு.க-விற்கு வந்தார்.
திமுக உருவாகுவதில் பாரதிதாசனுக்கும் முக்கியப் பங்கு இருந்தது என்றே சொல்லலாம். 28.07.1946 அன்று பாரதிதசனுக்கு பொற்கிழி மற்றும் 25000 வழங்கும் விழா அண்ணா தலைமையில் நடைபெற்றது. அந்த விழா முடிந்த பின்னர் கார் பயணத்தில், இந்த பணத்தை வைத்து தமிழர்களுக்கு என்று ஒரு கட்சி துவங்க வேண்டும் என்று அண்ணாவிடம் முதன் முதலில் பேசிவர் இவர்தான்.
கவிகாளமேகம், ராமானுஜர், பாலாமணி அல்லது பக்காத்திருடன், அபூர்வசிந்தாமணி, சுபத்திரா, சுலோசனா, பொன்முடி, வளையாபதி ஆகிய படங்களின் கதை, திரைக்கதை உள்ளிட்ட பணிகளில் அவரது பங்களிப்பும் இருந்தது.
”பாரதிதாசன் தமிழ்ச்சூழலில் சங்க இலக்கியத்தில் இருந்து தமிழ் ஒர்மையை நவீன சமூகத்தில் கட்டமைத்தார்” என்று எழுதுகிற பேராசிரியரும் ஆய்வாளருமான தமிழவன் ”பாரதிதாசன் போல் நவீன உலகைப் பார்க்கும் சக்தி கொண்ட கவித்துவ ஆளுமை இந்திய மொழிகள் எதிலும் இல்லை” என்று கூறுவார்.