2019 பிப்ரவரி மாதம் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படையில் நிலம் வைத்திருக்கும் 14 கோடி விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் என மூன்று தவணையாக 2000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் என்று பாஜக அரசு அறிவித்தது.
துவக்கத்தில் இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காக என்று சொல்லி இத்திட்டம் துவங்கப்பட்டது. பின் 2019 மே மாதத்தில் இத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.
- பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வரை பயனடைந்தவர்களில் 41.5% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சார்ந்தவர்கள் என அரசு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 11.9% பேர் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்கள்.
- 9.9%பேர் பழங்குடி வகுப்பை சார்ந்தவர்கள்.
- ஒன்றிய விவசாயத் துறையின் அலுவலக தகவலின் அடிப்படையில் இதுவரை பயனடைந்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் 4.2 கோடி, 1.2 கோடி பேர் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்கள், 1 கோடி பேர் பழங்குடியினர் என்று தெரியவந்துள்ளது.
- மேலும் பொதுப்பிரிவைச் சார்ந்த 3.7 கோடி உயர் சாதியினர் பயனடைந்துள்ளனர். ஒட்டுமொத்த பயனாளர்களில் உயிர்சாதியினர் 36.6% என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக சமமின்மையை பிரதிபலிக்கும் தரவுகள்
சமூக சமமின்மை நிலவுவதை எடுத்துக் காட்டும் வகையில் இந்த தரவுகள் இருக்கின்றன. எந்தெந்த சமூகங்களின் கையில் நிலங்கள் இருக்கின்றன என்பதை இதன் மூலம் முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
பஞ்சாப் மாநில மக்கள் தொகையில் 31% சதவீதம் தலித்துகள் இருக்கிறார்கள். ஆனால் 22 பட்டியல் சமூகத்தினருக்கு மட்டுமே இந்த பணம் கிடைத்திருக்கிறது. எனவே அங்கு நிலம் என்பது பட்டியல் சமூகத்தினரைத் தவிர்த்து பிற சமூகத்தினரிடம் மட்டுமே பெரும்பான்மையாகக் குவிந்திருப்பதை இது காட்டுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் 87 ஓ.பி.சி சாதிகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவர் கூட இந்த பயனாளர்கள் பட்டியலில் வரவில்லை என்பதும் தெரிய வருகிறது.
ஓ.பி.சி பயனாளிகளின் சமூக நிலை
ஓ.பி.சி பிரிவினரைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் சராசரியாக வைத்திருக்கும் நிலத்தின் அளவு என்பது சிறிய பரப்பிலானதாகவே இருப்பினும், ’சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள்’ என்ற வகையில் பார்த்தால் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையே, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 41.5% சதவீத ஓ.பி.சி பயனாளர்கள் இடம்பெற்றிருப்பது காட்டுகிறது.
உத்திரப்பிரதேசத்தில் உயர்சாதிகளிடம் அதிக நிலம்
பொதுப்பிரிவினரைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே அதிகமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் தான் அதிக பேர் இந்த பணத்தைப் பெற்றுள்ளனர். 52 லட்சம் பொதுப்பிரிவினர் இத்திட்டத்தில் பயனாளிகளாக உத்திரப்பிரதேசத்தில் உள்ளனர். இதன்மூலம் உத்திரப்பிரதேசத்தில் பெரும்பான்மையான நிலங்கள் உயர்சாதியைச் சார்ந்தவர்களிடம் இருப்பதைக் காட்டுகிறது.
ஓ.பி.சி பிரிவினரின் நிலை
உத்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிகார், ஆந்திரா, குஜராத், ஒரிசா, சட்டிஸ்கர் ஆகிய 11 மாநிலங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான OBC பிரிவினர் பயனடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் தான் இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் ஓ.பி.சி பிரிவினர் பலனடைந்துள்ளனர். அங்கு மொத்த பயனாளர்களில் 86% அதாவது 45,08,071 பேர் OBC பிரிவைச் சார்ந்தவர்கள்.
அதேவேளையில் தெலுங்கானாவில் எந்த OBC பிரிவைச் சார்ந்தவர்களுக்கும் இந்த நிதி கொடுக்கப்படவில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையின்படி தெலுங்கானாவில் 87 சமூகத்தின்ர் OBC பிரிவைச் சார்ந்தவர்கள். இருந்தும் அவர்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கவில்லை.
அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, போன்ற மாநிலத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, தில்லி, லடாக், லட்சத்தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களில் OBC பிரிவினருக்கு இத்திடத்தில் எந்த நிதியும் வழங்கப்படவில்லை.
பட்டியல் பிரிவு மக்களின் நிலை
அதிகப்படியாக உத்திரப்பிரதேசத்தில் 43.3 லட்சம் பட்டியல் பிரிவினருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் வாழுகின்ற 88.6 லட்சம் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களில் வெறும் 22 பேருக்கு மட்டும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அலுவலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜார்கணட் மாநிலத்தில் உள்ள 86.45 லட்சம் SC பிரிவினரில் வெறும் 2.90 லட்சம் பேர் மட்டும் பயனடைந்துள்ளனர். இது அந்த மாநிலத்தில் மொத்த பயனடைந்தவர்களில் 16.28% மட்டுமே.
அதேபோல் சட்டிஸ்கரில் உள்ள 78.23 லட்சம் பழங்குடி மக்களில் 2.38 லட்சம் பேர் மட்டுமே பலனடைந்துள்ளனர்.