புரவி புயல்

கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலை

தென் தமிழகத்தை நோக்கி வரும் புரவி புயல் பாம்பனிலிருந்து 420 கி.மீ. குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

புரவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

12 மணிநேரத்தில் புரவி புயல் மேலும் வலுவடையும் என்றும், இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே புரவி புயல் கரையைக் கடக்கிறது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 3-ம் தேதி மதியம் பாம்பனை நெருங்கும் புயல் டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை தூத்துக்குடி அருகே மீண்டும் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கரைக்கு திரும்பிய ஆழ்கடல் மீனவர்கள்

இன்று 4-வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 300 நாட்டுப் படகுகள் மற்றும் 423 விசைப் படகுகளைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் உள்ள மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பவர்கள். கடந்த நில நாட்களுக்கு முன்பு 72 படகுகளில் ஆழ்கடலில் இருந்தனர். அவர்களுக்கும் புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உடனடியாக கரை திரும்ப உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 64 படகுகள் நேற்று கரை திரும்பின. மேலும் 8 படகுகளை சேர்ந்த சுமார் 100 மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.

இதேபோல திருநெல்வேலி மாவட்டம் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி உள்பட பத்திற்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்களும் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 2 ஆயிரம் நாட்டுப்படகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வ.உ.சி துறைமுகத்தில் 6-ம் எண் புயல் கூண்டு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கவும், அது வலது புறமாக கடக்கும் என்பது குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் துறைமுகத்தில் இன்று காலை 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் அடுத்த 3 நாட்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றங்கரைகளில் பதாகைகள் வைத்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது.  

விமான சேவை ரத்து விவரங்கள்

நாள்தோறும் பெங்களுரு – தூத்துக்குடி இடையே ஒரு விமானமும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மூன்று விமானமும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று காலை கூடுதலாக சென்னை – தூத்துக்குடி இடையே ஒரு விமான சேவை இயக்கப்பட்டது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நிலை

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பிவிட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்ட அணைகள் இன்னும் மழைக்காக காத்திருத்திருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப இன்னும் 17 அடி நீர்மட்டம் உயர வேண்டும். சேர்வலாறு அணை நீர்மட்டம் 125.62 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப இன்னும் 30 அடி நீர்மட்டம் உயர வேண்டும்.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் இன்று காலை 96 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப மேலும் 22 அடி நீர்மட்டம் உயர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *