பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்றவர்கள் உட்பட பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் போராடும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். மேலும் தில்லிக்கு செல்லும் வழியில் விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் விருதுகளை திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர்.
விருதை திருப்பிக் கொடுக்கும் பட்டியலில் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா, அர்ஜூனா விருது பெற்ற பல்விந்தர் சிங் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஹாக்கி வீரர் ராஜ்பீர் கவுர் ஆகியோர் உள்ளனர்.
செவ்வாய் அன்று செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுனா விருது பெற்ற கூடை பந்து வீரர் சஜன் சிங் சீமா இந்த தகவலைக் கூறியுள்ளார்.
இந்த வீரர்கள் டிசம்பர் 5-ம் தேதி டெல்லிக்குச் சென்று தங்களது விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
டெல்லிக்கு செல்வதை தடுக்க போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தியதாக அவர்கள் ஒன்றிய அரசின் மீதும் மற்றும் ஹரியானா அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
எங்கள் மூத்தவர்களின் தலைப்பாகை தூக்கி எறியப்படும்போது எங்களுக்கு விருதுகள் எதற்கு?
விளையாட்டு வீரர் சீமா பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “நாங்கள் விவசாயிகளின் குழந்தைகள். அவர்கள் கடந்த பல மாதங்களாக அமைதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒரு வன்முறை சம்பவம் கூட நடக்கவில்லை. ஆனால் டெல்லிக்குச் செல்லும்போது அவர்களுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
எங்கள் மூத்தவர்கள் மற்றும் சகோதரர்களின் தலைப்பாகைகள் தூக்கி எறியப்பட்டுள்ளபோது எங்களுக்கு விருதுகள் மற்றும் மரியாதை எதற்கு? நாங்கள் எங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். இதுபோன்ற விருதுகளை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் நாங்கள் அதைத் திருப்பித் தருகிறோம்.” என்று கூறினார்.
விளையாட்டு வீரர்கள் போராட்டத்தில் இணைகிறார்கள்
விவசாய சட்டங்களுக்கு எதிரான ‘டெல்லி சாலோ’ அணிவகுப்பின் ஒரு பகுதியாக விவசாயிகள் தலைநகரை நோக்கிச் செல்லும்போது தண்ணீர் பீரங்கிகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியது சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் கோபம் கொள்ளச் செய்துள்ளது.
“விவசாயிகள் அத்தகைய சட்டங்களை விரும்பவில்லையென்றால், ஏன் மத்திய அரசு அவர்கள் மீது திணிக்கிறது” என்று பஞ்சாப் காவல்துறையில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக ஓய்வுபெற்ற கர்தார் சிங் கேள்வியெழுப்பியுள்ளார். டிசம்பர் 5 ம் தேதி டெல்லி எல்லையில் முன்னாள் வீரர்களும் விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் கிளர்ச்சியை ஆதரிக்கும் ஹரியானாவில் உள்ள முன்னாள் வீரர்களையும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் சிங் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். விவசாயிகள் போராட்டம் என்பது பொது சமூகத்தின் போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது.