மோடி நின்றாலும் நடந்தாலும் கூட அதை சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும் புகழும் நிலையில்தான் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில நபர்களை வைத்து எந்த விவகாரம் ஆனாலும், அதை தேசியம், காங்கிரஸ் எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு போன்றவற்றை மட்டுமே சுற்றி செய்திகளையும் விவாதங்களையும் நடத்தும் Echo Chamberகளாகத் தான் ஊடகங்கள் செயல்படுகின்றன.
மன்மோகன் சிங்கை ”மெளன்” மோகன் சிங் என்று கேலி செய்த மோடி, இன்று வரை எந்த ஒரு பிரச்சனையின் போதும் ஊடக சந்திப்பை நடத்தியது இல்லை. மோடி கடைசியாக அரசியல் ரீதியாக அளித்த பேட்டி என்பது கரன் தாப்பரிடம் 2002 குஜராத் கலவரத்திற்கு பிறகு அளித்தது தான். அதன் பிறகு ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகளில், நீங்கள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள், எப்படி இவ்வளவு சுருசுருப்பாக இருக்கிறீர்கள், உங்களுக்கு பிடித்த பழம் எது, மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவீர்களா இல்லை வெட்டிச் சாப்பிடுவீர்களா போன்ற கேள்விகள் தான் கேட்கப்பட்டனவே அன்றி, அரசியல் ரீதியான கேள்விகள் கேட்கப்படவில்லை.
எந்த ஒரு சூழலிலும் மோடியை நோக்கி ஒரு கேள்வி கூட வராமல் பார்த்துக் கொள்வதில், இந்த ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பற்றிய கேள்விகளெல்லாம் சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்ட போது, வடஇந்திய ஊடகங்கள் பிரபலங்களை அழைத்து வந்து நேரலையில் அந்தாக்ஷரி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடக்கத் தொடங்கிய போது, தப்லிகி ஜமாத்-னை குற்றம்சாட்டி, அவர்கள் வேண்டுமென்றே மோடியின் பெயரைக் கெடுக்க இந்தியாவிற்குள் கொரோனாவை கொண்டு வந்ததாக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ்-இன் ‘கொரோனா ஜிகாத்’ எனும் கதையாடலை வலுப்படுத்தும் வகையில்தான் வட இந்திய ஊடகங்கள் கட்டமைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தன.
மோடி கை தட்டச் சொன்ன போதும், விளக்கேற்றச் சொன்ன போதும், அதை கொரோனாவிற்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையாக சித்தரித்தன. கொரோனா எண்ணிக்கைகள் அதிகரித்த போது, மம்தா பானர்ஜி எண்ணிக்கைகளை தவறாக சொல்கிறார் என்றும், அர்விந் கெஜ்ரிவால் சொதப்புகிறார் என்றும் பிற தலைவர்களை கைகாட்டிக் கொண்டிருந்தன.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான எல்லைப் பதட்டம் அதிகரிக்கத் தொடங்கியதுமே சீனப் பெருட்களை புறக்கணிப்போம் என்பதை மட்டுமே பேசு பொருளாக கொண்டிருந்த ஊடகங்கள், சிக்கல் தீவிரவமானதும், மீண்டும் போர் வந்தால் இந்தியா இந்த முறை மிகச் சுலபமாக சீனாவை தோற்கடித்துவிடும் என்று கூறத் தொடங்கின. அதை நியாயப்படுத்த, “சீனா ‘one child’ திட்டத்தை இது வரையில் கடைப்பிடித்து வந்துள்ளது. இதனால் பல இராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தில் ஒரே பிள்ளைகளாக இருக்கிறார்கள். அவர்கள் போர் என்று வந்தால் நாட்டுக்காக போரில் சாவதை விட குடும்பத்திடம் திரும்பிச் செல்வதில் தான் குறியாக இருப்பார்கள். அதனால் அவர்களை நாம் சுலபமாக தோற்கடித்து விடலாம்” போன்ற அபத்தமான கருத்துக்களை கூறத் தொடங்கின.
இதில் உச்சகட்டமாக, இராணுவ வீரர்கள் உயிரிழப்பு நேர்ந்த நிலையில், ஆஜ் தக் என்ற இந்தி செய்தி ஊடகம், “எல்லைக்குள் சீன இராணுவம் வரும் போது, இந்திய ராணுவம் தூங்கிக் கொண்டிருந்தால் அதற்கு மோடி எப்படி பொறுப்பாக முடியும்? இராணுவம் தான் அதற்கு பொறுப்பு” என்று கூறியுள்ளார். கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல், ஒரே இரவில் நடந்த மோதல் இல்லை. மே மாதத்தில் இருந்தே இதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. ஊடகங்களும் இது தொடர்பான செய்திகளை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வழக்கம் போல் மோடி அரசு மெளனமே காத்தது. மோடி அரசை விமர்சிக்கும் போது எல்லாம், இந்திய இராணுவத்தை முன்நிறுத்தி வாதங்களை வைக்கும் இந்த மீடியாக்கள், மோடியா, இராணுவமா என்று வரும் போது இராணுவத்தை பலி கொடுத்து மோடியின் பக்கம் தான் நிற்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் சில ஊடகங்கள், சீனத் தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாக வாட்சப்பில், சீன இராணுவ வீரர்களின் பெயர் பட்டியலோடு வலம் வந்த ஒரு செய்தியை அப்படியே தங்கள் Prime Time செய்தி நேரத்தில் வாசித்தன.
ஊடகங்கள் தங்களின் தனித் தன்மையை இழந்து, முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் இயங்கும் ஒரு நிறுவனமாக, லாப-நஷ்டக் கணக்குகளையும், தங்கள் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களின் நலனையும் முன்னிறுத்தத் தொடங்கும் போது அவை ஆளும் வர்க்கத்தின் செயல்பாடுகளுக்கு மக்களிடையே ஒப்புதலை உருவாக்கும் (Manufacturing Consent) ஒரு கருவியாக சுருங்கிப் போவதை சோம்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார். இந்திய ஊடகங்களும் அதே போன்ற கருத்துருவாக்கத்திற்கான ஒரு கருவியாக சுருங்கிவிட்டது. மக்களிடையே ஒரு கருத்தை உறுதி செய்வதற்காக எந்தவித அபத்த எல்லைக்கும் செல்ல இந்த ஊடகங்கள் தயங்குவதில்லை.
சமூக வலைதளங்கள் மூலம் தவறான செய்திகள் நாள் தோறும் மக்களிடையே பரவுவது ஒரு புறம். ஆனால் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்களே பொய்யான தவறான செய்திகளை ஆட்சியாளர்களை நியாயப்படுத்த பரப்புகின்ற ஒரு நிலைக்கு வந்து தற்போது சேர்ந்துவிட்டோம். இதற்கு விதி விலக்காக சில ஊடகங்களும், சில பத்திரிக்கையாளர்களுமே உள்ளனர். அத்தகைய ஊடகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொருட்டு, மீடியாக்களுக்கான ஒழுங்கு விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வரும் முயற்சியில் பா.ஜ.க அரசு இறங்கி இருக்கிறது. ஒரு ஊடகத்திற்கு வழங்கப்படும் உரிமத்தை, விதிமீறல்களை சுட்டிக் காட்டி தன்னிச்சையாக உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய இந்த திருத்தம் வழிவகை செய்கிறது. இந்த வரைவு அறிக்கைக்கான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும், பா.ஜ.க அரசு அதை பொருட்படுத்தாமல் தேசிய நலனை சுட்டிக்காட்டி இதை நடைமுறைப் படுத்தத்தான் போகிறது.
மக்களிடையே உண்மையான செய்திகளையும், சரியான பார்வையையும் கொண்டு செல்லும் ஒரு மிகப் பெரிய சவால் மாற்றுச் சிந்தனையாளர்கள் முன்னால் உள்ளது.