அரக்கோணம் தலித் இளைஞர்கள் படுகொலை

அரக்கோணம் சம்பவத்தில் நடந்தது என்ன? எவிடென்ஸ் கதிர் தரும் அறிக்கை!

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் அமைதியாக முடிந்திருக்கிறது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட சில நேரத்திலேயே அரக்கோணத்தில் நிகழ்ந்த கொடூரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. 

இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை, 5 பேருக்கு கத்தி குத்து என்று மிக மோசமான முறையில் நிகழ்த்தப்பட்ட படுகொலையைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. தொடக்கம் முதலே இந்த படுகொலை விவகாரத்தில் ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் எவிடென்ஸ் அமைப்பின் கதிர் உண்மை அறியும் குழுவாக அரக்கோணம் சோகனூருக்குச் சென்று விசாரித்து தனது அமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

எவிடென்ஸ் கதிர் அறிக்கையின் சாராம்சத்தினை இங்கு அளிக்கிறோம்.

கொல்லப்பட்ட அர்ஜூனின் மனைவி லெட்சுமி தனது 8 மாத கைக்குழந்தையுடன். முன்னால் அமர்ந்து விசாரித்துக் கொண்டிருப்பவர் எவிடென்ஸ் கதிர்

இந்த சம்பவத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் பழனி என்பவரின் மகன் சத்யா, ஆர்எம்எஸ் சேம்பர் வைத்திருக்கக்கூடிய ராஜு என்பவரின் மகன்கள் சிவா, மதன் போன்றவர்கள் முக்கிய குற்றவாளிகள்.

அரக்கோணம் தொகுதி அதிமுக இதுவரை வலிமையாக வென்று வந்த தொகுதி. செம்பேடு, சோமனூர் போன்ற பகுதி தலித் மக்கள் கணிசமாக அதிமுகவிற்கு வாக்கு அளித்து வந்துள்ளனர். இந்த முறை கணிசமான வாக்குகள் விடுதலை சிறுத்தைகளுக்கு செலுத்தியிருப்பதாக தெரிய வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் வலுவான பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளனர். 

ஆதரவை இழந்த அதிமுக எம்.எல்.ஏ

தற்போதுள்ள அதிமுக எம்எல்ஏ மீது அப்பகுதி தலித் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த முறை அதிமுக, பாமக கூட்டணியால் இதுவரை அதிமுகவிற்கு வாக்கு அளித்து வந்த கணிசமான தலித்துகள் தற்போது பானை சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர். இந்த கோபம் அதிமுக எம்எல்ஏவிற்கு இருந்ததாக இப்பகுதி தலித் மக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதிமுக ஒன்றிய செயலாளர் பழனியிடத்தில் தற்போதைய எம்எல்ஏ உங்களது ஒன்றியம் நமக்கு ஆதரவு இல்லாமல் இருக்கிறது என்கிற வருத்தத்தை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இரண்டு படுகொலைகள் நடந்தும் அரக்கோனத்தின் தற்போதைய அதிமுக எம்எல்ஏ அந்த பகுதிக்கு இதுவரை நேரடியாக வந்து ஆறுதல் கூறாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

பானிபூரி கடையில் நடந்த சம்பவம் வரை இதை ஒரு தனி மனித மோதலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத அதிமுக ஒன்றிய செயலாளர் பழனியின் மகன் சத்யாவும் ஆர்எம்எஸ் சேம்பர் ராஜுவின் மகன்கள் சிவாவும் மதனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அர்ஜுன் விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் பரப்புரைக்கு முன் நின்று வேலை செய்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செம்பேடு கிராம வன்னியர் சமூக மக்களின் கருத்து

செம்பேடு கிராமத்தில் வன்னியர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடத்தில் எமது குழுவினர் விசாரித்தபோது, எங்களுக்கும் தலித்துகளுக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஒன்றாக பழகி வருகிறோம். எங்களில் பலர் பானை சின்னத்திற்கு ஓட்டுப்போட்டனர். இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் பெருமாள் ராஜபேட்டை, சாலை போன்ற கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள். இதுபோன்ற கொலையில் ஈடுபட்டிருக்கக்கூடாது வருத்தமாக உள்ளது என்று கூறினார்கள்.

சாதி உணர்வைத் தூண்டி அரசியல் சக்திகள் நடத்திய கொலை

பானிபூரி கடையில் தாக்கப்பட்ட அப்பனு நியாயம் கேட்க தனது பெற்றோருடன் சென்றிருக்கின்றார். அதுமட்டுமல்ல அந்த கும்பல் தாக்குகிற சிறிய அளவிலான வீடியோ கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் சமாதானம் பேச வரச்சொல்லிவிட்டு இப்படி செய்கிறீர்களே இது நியாயாமா? என்று தலித் இளைஞர்கள் கத்துகிற குரல் கேட்கின்றன.

குறிப்பிட்ட சில அரசியல் சக்திகள் சாதி உணர்வை தூண்டி இந்த கொலையை செய்திருக்கின்றன. இது கண்டிப்பாக தலித் – வன்னியர் சாதி பிரச்சனை அல்ல என்று தலித்துகள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சாதிய துவேசத்தோடும் அரசியல் காழ்ப்புணர்வோடும் நடந்து கொண்ட குறிப்பிட்ட சில சாதிய சக்திகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலுவாக வலியுறுத்துகின்றனர்.

இந்த வழக்கில் 8 பேர் அடையாளப்படுத்தப்பட்ட குற்றவாளிகள். இவர்களில் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 3 பேர் மற்றும் பலர் பட்டியலில் உள்ளவர்களில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்று சில பேர் கைது செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது.

நிவாரணம் அளிக்காத அரசு

அரசு நிவாரணம் கொடுத்திருப்பதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. அரசு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை. தலித் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய நிவாரணம் என்பது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை ஆகும். ஆகவே அரசு 1 ரூபாய் கூட நிவாரணம் கொடுக்கவில்லை.

வழக்கறிஞர் குழுவினை அமைக்க வேண்டும்

இந்த வழக்கினை 3 பேர் கொண்ட அரசு குற்ற வழக்கறிஞர் குழுவினை ஏற்படுத்த வேண்டும். வழக்கு முடியும் வரை குற்றவாளிகளுக்கு பிணை கொடுக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.8,25,000 போக கூடுதலாக தலா ரூ.10 இலட்சம் அரசு நிதியிலிருந்து வழங்க வேண்டும். இரண்டு குடும்பத்தினருக்கும் அரசு வேலையும் வாழ்நாள் பென்சனும் 5 ஏக்கர் வேளாண் நிலமும் வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *