நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பாக வெளிவந்திருக்கும் புத்தகமான “ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்” எனும் நூல் பிரபல சமூக செயற்பாட்டாளரான ஆனந்த் டெல்டும்டே எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தமிழில் எஸ்.வி.ராஜதுரை அவர்களால் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்டது. இந்தியாவின் அறிவுஜீவுகளின் மத்தியில் பல்வேறு கோணங்களில் விவாதப் பொருளாக மாறிய இப்புத்தகம் குறித்த அறிமுகத்தினை இங்கு பார்க்கலாம்.
90 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இடதுசாரி அமைப்புகள் இந்தியாவிற்கே தனிச் சிறப்பாக அமைந்த சாதிப் பிரச்சனையை பத்தோடு பதினோராவது பிரச்சினையாக பார்த்த காரணத்தினால் புரட்சிகர செயல்திட்டத்தை வகுக்க முடியாமல் இடதுசாரிகள் வழிதவறி குழப்ப நிலையில் இருப்பதை தனது எழுத்துக்களின் மூலம் முன்நிறுத்தியுள்ளார் நூலாசிரியர்.
சமூக நிறுவனமாக சாதி இருக்கின்ற இந்திய சமூகம் குறித்த புரிதல்
இந்திய சமூகத்தில் ஒரு சமூக நிறுவனமாக சாதி இருந்து வரும் நிலையில், இந்திய சமுதாயத்தை பகுப்பாய்வு செய்ய மார்க்சியக் கோட்பாடுகளை பயன்படுத்தத் தவறியவர்களாக கம்யூனிஸ்ட்கள் மீதான குற்றச்சாட்டை நேரடியாக எடுத்து வைத்துள்ளார். இந்திய எதார்த்தம் பற்றி முன்கூட்டியே உருவாக்கிக் கொண்ட கருத்துக்கு பொருந்துகின்ற கற்பனைகளை உருவாக்கிக் கொண்டதாகவும், கடந்த காலத்தில் ஏற்பட்ட இந்த தவறுகளை சரிசெய்ய எதார்த்தத்தை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ள இடத்திற்கு தற்போது நகர்ந்துள்ள கம்யூனிஸ்ட்களை இயங்கியல் போக்கில் முக்கிய வளர்ச்சிக் கட்டமாக நூலாசிரியர் காண்கிறார்.
இந்திய இடதுசாரிகள் மீதான விமர்சனப் பார்வை
இந்தியாவின் அடிப்படை பாட்டாளி வர்க்கமாக தலித்துக்களைக் குறிப்பிடும் நூலாசியரியர், இப்பேர்பட்ட முன்னணி பாட்டாளி வர்க்க அணியினரை (தலித்துகளை) ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் விலக்கி வைக்கும் இடதுசாரிகளின் போக்கை கடுமையாக சாடியுள்ளார்.
“சமுதாயத்தின் ஒரு மக்கள் பிரிவினர் மீது மற்றொரு மக்கள் பிரிவினர் நடத்தும் நீடித்த ஒடுக்குமுறையே ஏகாதிபத்தியம்” எனும் லெனினின் வரையறையில் இந்தியாவில் உழைக்கும் மக்களை ஒரு வர்க்கமாக அணிதிரட்ட விடாமல் தடுத்து வரும் சாதிய முறையும் ஒரு ஏகாதிபத்தியமே என நூலாசியறியர் தெரிவிக்கிறார். இத்தகைய உள்நாட்டு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தலித் இயக்கங்கள் நடத்திவரும் போராட்டத்தை வெறும் சமூக சீர்திருத்தமாகக் குறுக்கிப் பார்க்கும் தன்மையால் இடதுசாரிகள் ஒரு சரியான புரட்சிகர செயல்திட்டத்தை வடிவமைக்க இயலாமல் குழப்பத்துடன் இருக்கும் நிலையை சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களே சாதிகள் எனவும் சாதி என்பது மேல் கட்டுமானமாக மட்டுமே உள்ளதாகவும், பொருளாதார அடிப்படை காரணிகள் மாறுகின்ற பொழுது சாதி ஒழிந்து போகும் என இந்திய சமூகத்தில் எந்தவித சமூக பகுப்பாய்வுகளையும் நடத்தாமல் வறட்டு கோட்பாடுகளை முன்னாள் இந்திய கம்யூனிஸ்டுகள் கைக்கொண்டதாகவும், மார்க்சின் ஐரோப்பிய சமூகத்தில் செய்த பகுப்பாய்வுகளின் முடிவுகளை எந்தவித மாற்றமுமின்றி இந்திய சமூகத்தில் பொருத்திப் பார்க்கும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் நூலாசிரியர்.
ஆசிய உற்பத்தி முறை பற்றிய மார்க்சின் குறிப்புகள்
ஒரே நேர்கோட்டில் சமுதாயம் வளர்ச்சி பெறுகின்றன எனும் மார்க்சின் முன்னாள் பகுப்பாய்வுகளின் முடிவுகளை பின்னர் அவரே மறுத்து பல்வேறு கூறுகளில், பல்வேறு பொருண்மை நிலைமையில் வெவ்வேறு பாதைகளில் சமுதாயம் வளர்ச்சி பெறுகின்றன என்பதைக் குறிக்கும் விதமாக “ஆசிய உற்பத்தி முறை” பற்றிய குறிப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளதையும் குறிப்பிட்ட நூலாசிரியர், அதேசமயம் மார்க்ஸை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் இந்திய மார்க்சியவாதிகள் இந்த கருத்துக்களை மறைத்து பொருளாதார அடிப்படை காரணிகள் மாறும்பொழுது சாதிகள் ஒழிந்து விடும் எனும் வாதத்தில் பொருளாதார புரட்சி ஏற்படும்வரை சாதிய ஒடுக்குமுறைகளை சகித்துக் கொள்ளுமாறு தலித்துகளை இடதுசாரிகள் வேண்டுகிறார்களா? எனும் கேள்வியையும் இந்நூலில் எழுப்பி உள்ளார்.
லெனின் குறித்து அம்பேத்கர் குறிப்பிட்டது
சீர்திருத்தவாதி, ஏகாதிபத்திய கைக்கூலி என பல்வேறு பெயர்களில் இடதுசாரிகளால் விமர்சிக்கப்பட்ட பாபாசாகேப் அம்பேத்கர், லெனின் குறித்து கூறும் குறிப்பில் “லெனின் இந்தியாவில் பிறந்திருந்தால் புரட்சி எனும் கருத்து அவரது சிந்தனையை எட்டுவதற்கு முன்பே சாதியத்தையும் தீண்டாமையையும் ஆழப் புதைத்து இருப்பார்” எனும் வார்த்தைகளில் மார்க்சியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தை தெளிவாக பகுப்பாய்வு செய்தவராகவும் இந்திய கம்யூனிஸ்டுகளின் போதாமையை குறித்து அறிந்தவராகவும் வெளிப்படுத்துவதை இந்த புத்தகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்காரவேலரை பாராட்டும் டெல்டும்ப்டே
சாதி பிரச்சனை பற்றி எந்த அக்கறையும் காட்டாத பல இடதுசாரி தலைவர்களின் மத்தியில் விதிவிலக்காக 1930 ஆண்டுகளிலேயே மார்க்சிய கண்ணோட்டத்தை சாதி எதிர்ப்பு செயல் திட்டத்துடன் இணைப்பதை பற்றி சிந்தித்த சிங்காரவேலர் போன்ற கம்யூனிஸ்டுகளை பாராட்டவும் நூலாசிரியர் தவறவில்லை.
தலித்திய அமைப்புகள் மீதான விமர்சனப் பார்வை
இடதுசாரி அமைப்புகளுடனான தலித்திய அமைப்புகளின் கடந்த கால கசப்பான அனுபவங்களின் காரணமாக பொருளாதார பிரச்சினைகளை முழுமையாக ஒதுக்கித் தள்ளி அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டதோடு அம்பேத்கருக்கு பிந்தைய காலத்தில் தலித்துகள் எதார்த்த நிலைமையுடனும் பொருளாதார விஷயங்களுடன் ஒட்டாமல் விலகி நின்ற தவறுகளையும் நூல் ஆசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
மேலும் இன்று பல தலித் இளைஞர்கள் இடதுசாரி அமைப்புகளில் ஈர்க்கப்படுவதற்கான காரணங்களாக இடதுசாரிகளின் தெளிவான கருத்து நிலை என்பதைத் தாண்டி நம்பிக்கையான ஒரு தலித் இயக்கம் உருவாகாமல் இருப்பதும் காரணம் என்பதையும் தெரிவித்துள்ளார்.
மாற்றமடையும் ஏகாதிபத்தியத்தின் செயல்முறைகள்
ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகளின் முறைகளும் வெளிப்பாடுகளும் வரலாறு நெடுக மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன. ஆதலால் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சண்டையிடும் கருத்து நிலைகளை நிலையான ஒன்றாக வைக்காமல் நாம் எதிர்கொள்ளும் உலகத்திற்கு அதை பொருத்தமற்றவையாக இருந்தால் அவற்றை புதிதாக உருவாக்க முனைய வேண்டிய தேவையை நம் முன் வைக்கிறார் நூலாசிரியர்.
தலித்துகளும் ஜனநாயக சக்திகளும் இணைய வேண்டிய புள்ளி
இந்தியாவில் தலித்துகள் இல்லாமல் எந்த ஒரு புரட்சிகர போராட்டமும் வெற்றி பெறாது. அதேபோல பிற புரட்சிகர சக்திகளின் ஆதரவின்றி தலித்துகள் எந்த போராட்டத்திலும் வெற்றி பெற முடியாது. ஆகவே ஜனநாயகப் புரட்சியின் இன்றியமையாத பகுதியாக இருக்கும் தலித்துகளின் விடுதலையை வென்றெடுக்கும் பொருட்டு அவர்கள் பிற ஜனநாயக சக்திகளுடன் இணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ள இந்த புத்தகம் பல்வேறு விவாதங்களை இந்திய அறிவுஜீவிகள் மத்தியில் உருவாக்கியது.
இன்னும் இப்புதகங்கள் சார்ந்து விவாதங்களும், பாராட்டுகளும், விமர்சனங்களும் என்று உரையாடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தொடரட்டும் அரசியல் தத்துவ உரையாடல்கள்.