இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் கோவில் சொத்துகளை பாழ்படுத்துகிறார்கள், அதனால் கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். கோவில் சொத்துகளை சாமியார்களிடமும் துறவிகளிடமும் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஜக்கி ஆதரவாளர்கள் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கோவில்களுக்கு இருக்கும் சொத்துகள் எவ்வளவு? அதை யார் தான் ஆக்கிரமித்துள்ளார்கள் என்று நமக்கு கேள்வியெழும். அந்த கேள்விக்கு விடை காண்போம்.
கோவில்களின் சொத்துகள் பிரித்தளிக்கப்பட்டுள்ள விவரம்
தமிழ்நாட்டில் அறநிலையதுறையின் கீழ் உள்ள கோவில்கள் திருமடங்களுக்கு சொந்தமாக 2019-ம் ஆண்டின் கணக்குப்படி 4,78,283 ஏக்கர் நிலங்கள் உள்ளது. அதில் 22,600 கட்டிடங்கள் மற்றும் 33,665 வீட்டுமனைகள் குத்தகைக்கு விடப்படுள்ளன. 1,23,729 விவசாயிகளுக்கு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு அதில் விவசாயம் செய்து வருகிறார்கள்.

கோவில் நிர்வாகத்திலிருந்து அரசை வெளியேறச் சொல்வதால் யாருக்கு லாபம்?
இவற்றின் மூலம் ஆறு ஆண்டுகளில் 838 கோடி ரூபாய் வருவாய் கோவில்களுக்கு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 1,23,729 சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரமாக கோவில் நிலங்கள் உள்ளன. விவசாயிகள் குத்தகைக்கு விவசாயம் செய்தாலும் இந்த நிலங்கள் கோவிலின் பெயரில் தான் உள்ளது.
கோவில் நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேறி தனியாரிடம் கையளிக்கும் பட்சத்தில் குத்தகை விவசாயிகளாக உள்ள சிறு விவசாயிகளிடமிருந்து இந்த நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படும் சூழல் ஏற்படும். லாபம் ஒன்றையே நோக்காகக் கொண்டு இந்த நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்படும் சூழல் உருவாகும். கோவில் நிலங்களிலிருந்து சிறு விவசாயிகளை வெளியேற்றும் நோக்கத்தோடுதான் கோவில்களின் நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேறி தனியாரிடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்துத்துவ அமைப்புகளால் முன்வைக்கப்படுகிறது.
அறநிலையத்துறையின் சமூகப் பணிகள்
கோவில் நிலங்களின் குத்தகை வருமானம், கட்டிட வாடகை ஆகியவற்றிலிருந்து வரும் வருமானத்தில் அறநிலையத்துறை 50 கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக், 360 மேல்நிலை, உயர்நிலை, இடைநிலை மற்றும் ஆரம்பப் பள்ளிகளை நடத்தி வருகிறது. மேலும் ஒரு நாதஸ்வரப் பள்ளி, வேதாகம பாடசாலை, தேவரா பயிற்சிப் பள்ளி, காது கேளாதோர் பள்ளி, கருணை இல்லம் மற்றும் மருத்துவமனைகள் என 45-க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் பொது நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
மேலும் இலவச திருமணங்கள், நூற்றுகணக்கான கோவில்களில் அன்னதானம், ஒரு கால பூசை என பல பணிகளை இந்து சமய அறநிலையத்துறை செய்கிறது. இவை தவிர்த்து கிராம பூசாரிகள் நலவாரியமும் அதன் செயல்பாடுகளும் கூட இந்த வருமானத்தில் இருந்தே நடத்தப்படுகிறது.
இத்தனை சமூக நலத் திட்டங்களை செய்யும் அறநிலையத்துறையை குற்றம்சாட்டும் ஜக்கி வாசுதேவ், காவேரி கூக்குரல் தொடங்கி அமாவாசை வசூல் வரை கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தில் சமூக நலனுக்காக உருவாக்கிய கட்டமைப்பு என்று ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பே.

தனியாருக்கு மாற்றப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்கும் அறநிலையத்துறை
பல்வேறு நிலச் சீர்திருத்த பதிவுத் துறை சட்ட மாற்றங்களால் கோவில் நிலங்கள் சில இடங்களில் தனியார் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9 அண்டுகளில் 1,199 கோவில்களுக்கு சொந்தமான 8031.19 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டு மட்டும் 70 கோவில்களுக்கு சொந்தமான 1119 ஏக்கர் நிலங்கள் அறநிலையத்துறையால் அந்த கோவில்களுக்கே மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2887 கோடி ரூபாய் மதிப்பிலான 2315 ஏக்கர் நிலங்களும், 468 கிரவுண்ட் கட்டிடங்களும் மீட்கப்பட்டுள்ளன. 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மட்டும் 6066 நபர்கள் வாடகைதாரர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல 2019-2020ம் ஆண்டு காலத்தில் 194 கோவில்களுக்கு சொந்தமான 1448.38 ஏக்கர் நிலங்கள் கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் மீட்க மாவட்ட வாரியாக மண்டல வாரியாக மாநில அள்வில் என்று இந்து சமய அறநிலையத்துறை வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது.
உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள் யார்?
- நாகேஸ்வர ராவ் எனும் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவரால் உருவாக்கப்பட்ட அமிர்தாஞ்சன் நிறுவனம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து நீண்ட கால குத்தகையை இன்று வரை கொடுக்காமல் வைத்திருக்கும் பாக்கித் தொகை ரூ.6 கோடியே 45 லட்சம். இதை மீட்பதற்கும் அறநிலையத்துறை வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது.
- சென்னையின் மிகப் பிரபலமான பி.எஸ் மேல்நிலைப் பள்ளி என்று அழைக்கப்படும் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் தனியார் மேல்நிலைப் பள்ளி, கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த குத்தகை ஒப்பந்ததை பின்னர் 1979-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மீண்டும் புதுப்பித்துள்ளனர். மொத்தம் இந்த பள்ளி 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக அளிப்பது ரூ.1250 மட்டுமே. அதையும் அவர்கள் கொடுக்காததால் இந்து சமய அறநிலையத்துறை வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது.
- பார்த்தசாரதி ஐயங்கார் என்பவர் 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை மயிலாப்பூரில் இந்த இடத்தின் மதிப்பு என்னவென்று கணக்கிட்டால் தலை சுற்றுகிறது. இந்து சமய அறநிலையத்துறை உருவாவதற்கு முன் 1901-ம் ஆண்டு 99 வருடக் குத்தகையாக எடுத்த பார்த்தசாரதி ஐயங்கார் குடும்பத்தினர் இன்று உள்குத்தகைக்கு விட்டு, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவற்றையும் மீட்பத்ற்கு அறநிலையத்துறை தான் வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது.
- மயிலாப்பூர் கிளப் என்று சொல்லப்படும் பிராமணர்கள் தொடர்பான கிளப் ஆக்கிரமித்திருக்கும் கோவில் நிலத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கி பணம் மட்டும் 3 கோடியே 57 ஆயிரத்து 847ரூபாய். அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பவர்கள் இருக்கும் இந்த கிளப்பிடம் இருந்து கோவில் நிலத்தையும் பணத்தையும் மீட்க அறநிலையத்துறை சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போதுதான் இந்த ஆக்கிரமிப்பாளர்களின் கூட்டத்தின் அதரவு பெற்ற ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் கோவிலை விட்டு அரசை வெளியேற சொல்கிறார்கள்.
கோவில்கள் மீட்கப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறை இருந்தால் ஜக்கி வாசுதேவின் ஆதரவாளர்களும், அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகளும் கோவில்களுக்குள் சென்று போராட்டம் செய்திருக்க மாட்டார்கள். மயிலாப்பூர் கிளப்பில் தான் போராட்டம் செய்யச் சென்றிருப்பார்கள்.
ஆக்கிரமிப்பாளர்களாக பாஜக காட்டுவது யாரை?
இந்த ஆக்கிரமிப்பு குறித்தோ, வாடகை மற்றும் குத்தகை பாக்கி குறித்தோ வாய்திறக்காத பாஜக, எதனை வாடகை பாக்கி என்று சொல்கிறது தெரியுமா?
கோவில் திருப்பணியான விளக்கு எரித்தல், இலுப்பை எண்ணை தயாரிப்பது மற்றும் சுத்தம் செய்வது, திருவலகுபணி, சந்தனம் அரைப்பது, பூமாலை கட்டித் தருவது மற்றும் சாமி தூக்குகிற பணி உள்ளிட்ட பல்வேறு ஆலயப் பணிகளை பல தலைமுறையாக செய்தவர்களுக்கு அந்த காலக்கட்டத்தில் ஒரு கிரவுண்ட், அரை கிரவுண்ட் என நிலங்கள் அரசால் அளிக்கப்பட்டன. அந்த நிலங்களில் சொந்த செலவில் வீடு கட்டிக்கொண்டு பல தலைமுறையாக வாழ்கிறார்கள். அவர்களைத் தான் வாடகை கொடுக்காத ஆக்கிரமிப்பாளர்களாக பாஜகவும், ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களும் சித்தரிக்கிறார்கள்.
உண்மையான ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வழக்கு நடத்தி கோவில் சொத்துக்களை மீட்கப் போராடும் அறநிலையத்துறையை அப்புறப்படுத்துவதுதான் இப்பிரச்சாரத்தின் நோக்கமாக இருக்கிறது. கோவில் நிலங்களில் சிறு கடைகள் வைத்திருப்பவர்கள், லட்சக்கணக்கான விவசாயிகள் என அனைவரையும் அந்த நிலங்களிலிருந்து வெளியேற்றி, பரம்பரை பரம்பரையாக ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களை எந்த தலையீடும் இன்றி கோவில் சொத்துகளை அனுபவிக்கச் செய்வதும், தமிழக கோவில்களை கார்ப்பரேட் சாமியார்களின் நிறுவனங்களைப் போல பணம் காய்க்கும் மரமாக மாற்றவுமே ஆர்.எஸ்.எஸ், ஜக்கி வாசுதேவ், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள் அரசுக்கு கோவிலில் என்ன வேலை என்று கேட்கிறார்கள்.