விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசு

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் இருந்து தில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்க டில்லி காவல்துறை கண்ணீர் புகைகுண்டு மற்றும் தண்ணீரை பீச்சி அடித்து விரட்டி உள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதில் குறிப்பாக பஞ்சாப் மாநில விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த செப்டம்பர் 25 முதல் பஞ்சாப் மாநில விவசாய சங்கங்கள் இணைந்து ‘இரயில் ரோகோ’ என்கிற பெயரில் இரயில் மறியல் போராட்டத்தை தொடங்கி நடத்தி வந்தனர். இந்த போராட்டம் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டது. இதைதொடர்ந்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாய குழுக்கள் ‘டில்லி சலோ’ எனும் பெயரில் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் டெல்லியை நோக்கி அணிவகுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்தனர்.

விவசாயிகளுக்கு எதிராக ஆயுதங்களுடன் காத்திருக்கும் துணை ராணும்

இதை தொடர்ந்து அண்டை மாநிலத்தில் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக விவசாயிகள் தொடர்ந்து டில்லி மாநிலத்திற்குள் நுழைய முயன்றதால் டில்லி மாநிலம் தனது எல்லைகளை முழுமையாக மூடியது.

போராட்டம் தொடங்குவதற்க்கு முன்பாகவே 70 க்கும் மேற்பட்ட விவசாய தலைவர்களை ஹரியானா அரசு நேற்று கைது செய்தது.மேலும் 144 தடை உத்தரவின் கீழ் டில்லி மாநிலத்தின் பல பகுதிகளிலும் சீல் வைக்க உத்தரவுகள் பிறப்பிக்கபட்டன.

டில்லியின் எல்லை பகுதிகளில் சர்வதேச எல்லைகளை போன்று முள்வேலிகள் கொண்டு காவல் துறையினர் அரண் அமைத்து இருந்தனர். மேலும் நவீன ரக துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

டெல்லி போராட்டதில் அமைக்கப்பட்ட முள்வேலி

போராட்டக்காரர்களின் டிராக்டர்களைத் தடுத்து நிறுத்த மணல் நிரம்பிய ஐந்து லாரிகள் எல்லைகளில் நிறுத்தப்பட்டு இருந்தன. பாதுகாப்பு பணிகளுக்காக ட்ரோன்கள் பயன்படுத்த உள்ளதாகவும் காவல் துறை தெரிவித்தது. மேலும் மாநில எல்லைகள் சீல் செய்யப்பட்டு தில்லிக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்பட்டன.

டெல்லியின் உள்ள சீக்கிய கோவில்களில் தஞ்சம் புகுந்த விவசாயிகளை டெல்லி காவல்துறை கைது செய்து வருவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'(The Indian Express) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் போராடும் மக்கள் கூட்டத்தை அடக்குவதற்கு ஹரியானா காவல்துறை இத்தகைய நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது என்பது கண்டிக்கத்தக்கது. நாங்கள் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம், ஆனால் எங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதைத் தடுக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்” என போராட்ட களத்தில் இருந்து விவசாயி ஒருவர் டெக்கான் ஹெரால்டு ‘Deccan Herald’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்

போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகள்:

போராட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நரேந்திர மோடி அரசின் கொடூரத்திற்கு எதிராக இந்திய விவசாயிகள் உறுதியாக நிற்கிறார்கள்” என்று ட்வீட் செய்துள்ளார். முன்னதாக விவசாயிகளின் குரல்களை நசுக்க பாஜக முயன்று வருவதாக குற்றம்சாட்டி ஹரியானா அரசிற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கு பதிலாக, பாஜக அரசு விவசாயிகளிடமிருந்து ஆதார விலையை பறித்து, அவர்களை நீர் பீரங்கிகளால் தாக்குகிறது” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

டில்லி செல்லும் விவசாயிகளை தடுக்கும் ஹரியானா அரசாங்க நடவடிக்கைகளை “இன்று பஞ்சாபின் 26/11” என மும்பை தாக்குதல் நடவடிக்கைகளோடு தொடர்புபடுத்தி ஷிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் விமர்சித்தார்.

விவசாயிகள் டெல்லிக்கு செல்வதைத் தடுப்பது அரசியலமைப்பு சாசனம் மற்றும்  பேச்சு சுதந்திரத்திற்கும் எதிரானது என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்ததாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு குருகிராம் காவல்துறையினரால் ஸ்வராஜ் இந்திய அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கான காரணத்தை விமர்சித்து இது”ஒரு விசித்திரமான தொற்றுநோயாக இருக்க வேண்டும்” என்றார். மேலும் ஏன் விவசாயிகள் போராட்டத்திற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? ” எனவும் கேள்வி எழுப்பினார்.

குளிர் மற்றும் மழைகளை பொருட்படுத்தாத விவசாயிகளின் நெஞ்சுரம்:

நேற்றும் ( நவம்பர் 25) ஹரியானா காவல்துறையினர் விவசாயிகளை டில்லிக்குள் செல்வதை தடுக்க குருக்ஷேத்ரா மாவட்டத்தில் குறைந்தது இரண்டு முறையாவது தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி கூட்டத்தை களைத்தனர்.

போராட்ட களத்தில் குளிர் மற்றும் மழைகளை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்காலிக தங்குமிடங்களை அமைத்தும் தங்கள் டிராக்டர்களின் டிராலிகுள்ளும் இரவு நேரத்தை கழித்தனர். மேலும் விவசாயிகள் காய்கறிகள், விறகுகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களையும் உடன் கொண்டு வந்து போராட்டத்தில் பெரும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *