வள்ளலார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals
இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு…
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்….
தெருட்சாறும் சுத்த சன்மார்க்க நன்னீதி சிறந்து விளங்க…
– வள்ளலார்
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 1823-ம் ஆண்டில் அக்டோபர் 5-ம் நாள் கடலூர் மாவட்டம் மருதூர் எனும் கிராமத்தில் இராமையாபிள்ளை, சின்னம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
அவர் பிறந்த அடுத்த ஆண்டே தந்தையின் மரணம் காரணமாக அவரது குடும்பம் சென்னைக்கு புலம்பெயர்ந்து, தனது 12-ம் வயதில் கவிதை பாடத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இவரது சமூக செயல்பாடுகள் 1835-ம் ஆண்டுமுதல் துவங்கியது. முதலில் இவர் திருவொற்றியூர் மற்றும் திருத்தணி கோயில்கள் மற்றும் அங்கு இருக்கும் தெய்வத்தைப் பற்றியும் பாடத் துவங்கினார்.
சித்தாந்தத்தை மையப்படுத்தி வேதாந்தத்தை எதிர்கொண்ட வள்ளலார்
1851-ல் “ஒழிவிலொடுக்கம்” எனும் நூலை முதலில் பதிப்பித்துள்ளார். அந்த காலகட்டத்தில் பெரிதும் விவாதத்தில் இருந்த வேதாந்தம், சித்தாந்தம் குறித்த உரையாடலின் ஒரு வடிவமாக இச்செயலைப் பார்க்கலாம்.
1854-ல் அவரால் உருவாக்கப்பட்ட உரைநடை நூலான ‘மனுமுறை கண்ட வாசகம்’ நூலில் சித்தாந்தத்தை முதன்மைப்படுத்தி வேதாந்தத்தை எதிர்கொண்டார். வள்ளலாரின் ’வேதாந்தம் – சித்தாந்தம்’ என்பது அன்றைய சூழலில் தமிழ் மரபுக்கும் – வைதீக மரபுக்கும் இடையிலான தத்துவ முரண்களாக செயல்பட்டிருக்க வேண்டும்.
சைவத்திலிருந்து விலகி சன்மார்க்கத்தை நிறுவினார்
ஆரம்பத்தில் சைவ மரபில் அதீத பற்று கொண்டிருந்ததால் கருங்குழி சென்ற வள்ளலார் சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு தினசரி சென்று வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்வுகளால் பிடிமானம் இழந்து வடலூரில் ‘உத்தரஞான சிதம்பரம்’ என்ற சத்தியஞான சபையை உருவாக்கினார். அதன்மூலம் ஜீவகாருண்யத்தை கடைப்பிடிக்கிறார்.
பின்னாளில் சைவம், வைணவத்தை நம்பாதீர்கள். அது உண்மையை சொல்லாது. ஒரு காலத்தில் நானும் சைவத்தை நம்பினேன். எனக்கிருந்த நம்பிக்கைக்கு அளவு சொல்ல முடியாது. ஏன் நம்பியிருந்தேன் என்றால் அப்போது எனக்கு அறிவு கொஞ்சம்தான் இருந்தது என்றார்.
வைதீகத்திற்கு மாற்றாகவே கொல்லாமையை முன்னிறுத்தினார்
வைதீக மரபின் முதன்மையான மூன்று உபநிஷதம், பிரம்மசூத்திரம், பகவத்கீதை. இவை அனைத்துமே கொல்வதை தர்மமாக கூறியது; சூது சொல்லித் தந்தது. இதற்கு மாறாக வள்ளலார் கொல்லாமை, உணவூட்டுதல், உயிர் காத்தல்தான் கடமை என்றார். வைதீகத்தை ஏந்தி வரும் சமஸ்கிருதம் போன்ற அனைத்து வாகனங்களின் கடையாணிகளையும் பிடுங்கி எறிந்தார். பகவத் கீதைக்கு மாற்றாக திருவருட்பா மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முன்வைத்தார்.
1867-ல் இவரது பாடல்கள் அருட்பா எனும் பெயரில் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. வள்ளலார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினார். இனிமை ததும்பும் ”தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி” என்பன போன்ற பாடல்கள் அல்லாமல் ’உயிர்க் கொலையை விட்டிடுக’ என்று வேண்டிடும் பாடல்கள், ’மதங்களை விட்டொழித்திடுக’ என்று சீர்திருத்தக் கருத்துகள் அடங்கிய பாடல்கள் போன்றவற்றைப் பாடினார்.
சாதியும், சமயமும் பொய்யே என்றார்
”வள்ளலார் வாழ்ந்த காலம் சாதி, மத வெறி ஓங்கியிருந்த காலமாகும். மடாதிபதிகள் கூட சாதி அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். இன்னமும் கூட மடங்களில் அந்த பழக்கம் தொடர்கிறது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் சாதியும், சமயமும் பொய்யே என துணிவுடன் முழங்கியவர் வள்ளலாரே” என்று பழ.நெடுமாறன் எழுதியிருப்பார்.
வள்ளலார் பிற்போக்குத் தனமான சனாதன தரும மதங்களுக்கு எதிராக புரட்சி செய்தார். அதற்கு வழிகளாக சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்ய தருமச் சாலை, சத்ய ஞான சபை, சித்தி வளாகம் ஆகியவற்றை உருவாக்கினார்.
பசியினால் வருந்துகின்றவர்கள் எந்த தேசத்தவராயினும், எந்த சமயத்தவராயினும், எந்தச் சாதியாராயினும், எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேசவொழுக்கம், சமயவொழுக்கம், சாதியொழுக்கம், செய்கையொழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரிக்காமல், எல்லா சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து, அவரவர் ஒழுக்கத்திற்கு தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே ஜீவ காருண்யம்.
ஐம்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் மட்டுமே வாழ்ந்த வள்ளலார் என்ற மனிதர் தமது கடைசி ஒன்பது ஆண்டுகளில் சாதிக்கு எதிராக, சமயத்துக்கு எதிராகப் போராடினார். பசிப்பிணி போக்கும் தயவே வாழ்க்கை என்று பேசினார்.
இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையைத் தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது.
ஜனவரி மாதம் 30-ம் தேதி 1874-ல் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகத்தில் உள்ளே சென்ற நாள் அவரது இறுதி நாளாக அமைந்தது.