நியூ காலிடோனியா பேரணி

பிரான்சில் இருந்து நியூ காலிடோனியா பிரிவதற்காக நடத்தப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு

மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள நியூ காலிடோனியா தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தியுள்ளது.

கிட்டத்தட்ட  2,69,000 மக்களை உள்ளடக்கிய இந்த தீவு பிரான்ஸ் நாட்டில் இருந்து 18,000 கி.மீ தள்ளி பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. 

நியூ காலிடோனியா அமைந்துள்ள பகுதி

இந்த தீவு பல அழகிய பவளப்பாறைகள் தொகுப்புகளைக் கொண்டுள்ளமையால் எண்ணற்ற மீன் இனங்களுக்கு புகலிடமாக இருக்கிறது. 2008-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரிய சின்னமாக இத்தீவை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

நியூ காலிடோனியாவின் வரலாறு

1880-களில் நியூ காலிடோனியாவின் பூர்வீக மக்கள்
  • இத்தீவை முதலில் கண்ட ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த மாலுமி இத்தீவிற்கு நியூ காலிடோனியா என்கிற பெயரை சூட்டினார். 
  • 1853-ம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த அகஸ்டி பெப்ரியர் என்கிற போர்ப்படை தளபதி பசிபிக் கடல் பகுதியில் தங்கள் நாட்டின் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக இத்தீவைக் கைப்பற்றினார். 
  • ஆரம்ப காலத்தில் இத்தீவை குற்றம் சாட்டப்பட்ட மற்றும் தண்டனைக்குரிய அரசியல் கைதிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாக பிரான்ஸ் அரசு  பயன்படுத்தி வந்தது. 
  • பின்னர் 1946-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான தொலைதூர தீவாக அறிவிக்கப்பட்டது. தற்போது இத்தீவு குறிப்பிட்ட வரைமுறைக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
  • நியூ காலிடோனியா மக்கள் தொகையில் 48% கனாக் (Kanak) இனத்தைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்த(caldoches) இனத்தவர்கள் 27% இருக்கிறார்கள். 
நியூ காலிடோனியா பூர்வீக மக்களின் பாரம்பரிய நடனம்
  • மேலும் பசிபிக் கடல் பகுதிகளில் அமைந்திருக்கும் வாலிஸ், ஃபூடுன போன்ற லட்சக்கணக்கான தீவுகளில் இருந்து தஞ்சம் புகுந்தசிறிய அளவிலான மக்கள் மற்றும் டஹிதியான், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இத்தீவில் சிறுபான்மை மக்களாக இருக்கிறார்கள்.
  • 19-ம் நூற்றாண்டில் அங்கு குடியேறத் தொடங்கிய ஐரோப்பியர்கள் தங்களோடு கொண்டு வந்த அம்மை போன்ற நோய்களால் பூர்வகுடி மக்களின் மக்கள்தொகை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, எண்ணிக்கையில் பெரிய அளவில் குறைந்தனர். 
  • பழங்குடி மக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கூட்டு கலப்பால் உருவாகும் மக்கள் தற்போது அதிகளவில் இத்தீவில் வளர்ந்து வருகின்றனர். 

பூர்வகுடி மக்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இடையே ஏற்பட்ட சிக்கல்

1878-ம் ஆண்டில் இருந்து பூர்வகுடி மக்கள் சுரங்கத் தொழிலில் உரிமை கோரி தொடங்கிய கிளர்ச்சியில் 200 ஐரோப்பியர்கள் மற்றும் 600 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 1500 நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். இந்த சிக்கலில் இருந்து தொடர்ச்சியாக பூர்வகுடி மக்களுக்கும்,  ஐரோப்பியர்களுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

பின்பு 1980-ம் ஆண்டு மீண்டும் பூர்வகுடி மக்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர  மோதலைத் தொடர்ந்து 1988-ம் ஆண்டு ஐரோப்பியர்கள் சிலரை  பூர்வகுடி மக்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

நியூ காலிடோனியாவின் பூர்வீக மக்களுக்கும் பிரான்ஸ் ராணுவத்தினருக்குமான சண்டை – 1988

நௌமே(noumea) ஒப்பந்தம்

தொடர்ச்சியான பிரச்சினைகளைத் தொடர்ந்து இந்த இரு பிரிவினருக்கும் இடையே சுமூகமான அரசியல் மற்றும் பொருளியல் சம பங்கீட்டுத் தீர்வை ஏற்படுத்த பிரான்ஸ் அரசு முயற்சித்தது. இந்த முயற்சியின் பயனாக 1988-ம் ஆண்டு நௌமே(noumea) ஒப்பந்தம் பிரெஞ்ச் அரசு, பூர்வகுடி மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஐரோப்பியர்களுக்கு இடையே போடப்பட்டது. 

அந்த ஒப்பந்தம் நியூ காலிடோனியா மக்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை அளித்ததோடு தனிநாடாக செல்வதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கான உரிமையையும் வழங்கியது.

பொதுவாக்கெடுப்பு

இதனையடுத்து 2018-ம் ஆண்டு முதல் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 55.7 % மக்கள் பிரிந்து செல்ல வேண்டாம் என வாக்களித்தனர்.

இதற்கடுத்து இந்த ஆண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது முறையாக நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் சுயராஜ்யம் அமைய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது தெரியவந்துள்ளது. இம்முறை சுமார் 53.26% வாக்காளர்கள் பிரான்ஸ் நாட்டை விட்டு விலக வேண்டாம் எனவும் கடந்த முறையை விட 2.44% அதிகமாக (46.74%) விலக வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.  

பொதுவாக்கெடுப்பின் போது வாக்களிக்க வரிசையில் நிற்கும் மக்கள்

இந்த வாக்கெடுப்பில் பிரிந்து செல்வதற்கு பெரும்பான்மை ஆதரவு வரவில்லை என்றாலும் நௌமே(noumea) ஒப்பந்தத்தின்படி மீண்டும் ஒரு முறை வாக்கெடுப்பு நடத்தும் உரிமை இருக்கிறது. இதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை பொது வாக்கெடுப்பில் நடத்துவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

நிக்கல் உலோகத்தை மையப்படுத்திய காலிடோனியாவின் வருவாய்

எஃகு, ரிச்சார்ஜபிள் பேட்டரிகள் மற்றும் நாணயங்கள் செய்வதற்கான மூலப் பொருளான நிக்கல் உலோகம் அதிகளவில் இத்தீவில் காணப்படுகிறது.  பிரஞ்ச் அரசின் துணையுடன் நிக்கல் வணிகம் இத்தீவின் முக்கிய வருவாய் ஈட்டும் துறையாக இருக்கிறது. கிட்டத்தட்ட 2018-ம் ஆண்டு உள்நாட்டு உற்பத்தியில் 7% ஆக இருந்த நிக்கல் தொடர்பான வணிகம், இனிவரும் காலங்களில் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரூன் பொதுவாக்கெடுப்பு முடிவை வரவேற்று நியூ காலிடோனியா மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தங்கள் நாட்டில் இருந்து நியூ காலிடோனியா விலகினால் பிரான்ஸ் தனது அழகை இழக்கும் எனவும் பதிவு செய்துள்ளார். 

கொரோனா தொற்று காலத்தில் நியூ கலிடோனியா

நியூ காலிடோனியா பகுதி கொரோனா தொற்றால் பெரிதாக பாதிக்கப்படவில்லை. தற்போது வரை கொரோனா தொற்றால் 27 நபர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களே. இதனால் பிரான்ஸ் கட்டுப்பாட்டிற்கு உரிய பகுதிகளில் மிகக் குறைந்த காலம் (மார்ச் 24 முதல் ஏப்ரல் 20) லாக் டவுன் போடப்பட்ட பகுதி இத்தீவே ஆகும். எனினும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான போக்குவரத்துகளை குறைத்தும், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பின்பே அனுமதிக்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இதனால் வாக்கெடுப்பு பணி எந்த வித சிக்கலும் இன்றி சாதாரண முறையில் நடைபெற்று முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *