பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்ற பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் கார் 20 கி.மீக்கு முன்பாகவே தடுக்கப்பட்டதால், அவர் நடந்தே ஊர்வலமாக சென்று குடும்பத்தினரை சந்தித்தார். பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆதிக்க சாதியினரால் ஆபத்து இருப்பதால் Y பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் 400 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் சத்யாகிரக போராட்டம் இன்று நடத்தப்படுகிறது.
பாஜக-வின் முன்னாள் எம்.எல்.ஏ வான ராஜ்வீர் பஹல்வான், கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விடுதலை செய்யக் கோரி அந்த நபர்களின் சாதியைச் சேர்ந்தவர்களை தன் வீட்டிற்கு அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார்.
பெண்ணின் தந்தையை மிரட்டிய மாவட்ட நீதிபதியான லக்ஸ்கார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சி கோரியுள்ளது.
பாஜக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவரான அமித் மாளவியா பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது சட்ட விரோதமானது என்று தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால், பெற்றோர்கள் பெண்களை நல்ல பண்புடன் வளர்க்க வேண்டும் என்று கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
ஹத்ராஸ் வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டிருப்பதாக உத்திரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இராணிக்கு எதிராக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா ஹத்ராஸ் வழக்கிற்கு நீதி கேட்டு பாஜக அரசினை எதிர்த்து பேரணியினை மேற்கொண்டார்.