பெரியபாளையம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தைப் போல சென்னையில் கிடைத்த குண்டு

சென்னையின் புறநகர் பகுதியான பெரியபாளையத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கே புதைந்திருந்த வெடிக்காத பழைய குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். முதலில் அதனை ஏதோ ஒரு இரும்பு என்று நினைத்து கிரிக்கெட் மட்டையால் தட்டிப் பார்த்த இளைஞர்கள் பின்பு அது வெடிகுண்டு என்பதைக் கண்டுபிடித்தவுடன் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து அந்த குண்டினை ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு அடி நீளமும், 8 கிலோ எடையும் கொண்டதாக அந்த குண்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

வான்வழி ஷெல் குண்டுகளின் வெடிக்காத ஒரு குண்டு

ஏதோ ஒரு சமயத்தில் வான்வழியாக ஷெல் குண்டுகள் வீசப்பட்டபோது, அதில் வெடிக்காமல் போன குண்டாக இது இருக்கக் கூடும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இக்குண்டினை கவனமாகக் கையாளாவிட்டால் இப்போதும் கூட இது வெடிக்கும் ஆபத்து உண்டு என்று தெரிவித்தனர்.

கும்மிடிப்பூண்டி இரும்பு உருக்கு ஆலைகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள இரும்பு உருக்கு ஆலைகளுக்காக, பழைய இரும்புப் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டுவந்த போது, அதில் இந்த குண்டு வந்திருக்கக் கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று இப்பகுதிகளில் மக்கள் கால்நடைகளை மேய்க்க வரும்போது சில குண்டுகளை ஏற்கனவே கண்டறிந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

பழைய இரும்புப் பொருட்களை வாங்குபவர்கள் யாராவது இதனை இப்பகுதியில் போட்டுவிட்டு சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. இதனை ஆய்வு மேற்கொண்டு கவனமான முறையில் அழிப்பதற்கு நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

அழிக்கப்பட்ட 1628 குண்டுகள்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி இரும்பு உருக்கு ஆலைகளில் 7 டன்கள் அளவுக்கான வெடிக்காத குண்டுகள் கண்டறியப்பட்டு கையகப்படுத்தப்பட்டன. கடந்த மார்ச் 21-ம் தேதி அன்றுதான் ராணுவ நிபுணர்களின் மேற்பார்வையில் 1,628 குண்டுகள் கவனமான முறையில் அழிக்கப்பட்டன. 

காஞ்சிபுரத்தில் 2019-ல் வெடித்த குண்டு

கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள கோவில் ஒன்றில் இரும்பு வேலை செய்து கொண்டிருந்த போது, பழைய ராக்கெட் லாஞ்சர் ஒன்று வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

குண்டுகள் கரையொதுங்கும் அரசியலைப் பேசிய திரைப்படம்

திரைப்படத்தின் போஸ்டர்

கடந்த ஆண்டு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு எனும் திரைப்படம், இப்படிப்பட்ட வெடிக்காத குண்டுகள் பல்வேறு கடற்கரையோர நாடுகளில் இன்னும் கரையொதுங்கிக் கிடப்பதைப் பற்றி பேசியது. அத்திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காமல் இருந்த குண்டுகள் சென்னையின் பல பகுதிகளில் கிடப்பதையும் பேசியது. இந்நிலையில் அதே போன்றதொரு குண்டு பெரியபாளையத்தில் கிடைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் இன்னும் கிடைக்கும் குண்டுகள்

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜெர்மனியில் ஒரு கட்டுமானப் பணியின் போது இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் 500 கிலோ எடை கொண்டதாக இருந்ததாகக் கூறப்பட்டது. அவை கண்டெடுக்கப்பட்டவுடன் அபாயத்தை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் 8000க்கும் மேற்பட்ட மக்கள் வேறு பகுதிக்கு இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டனர். 

ஜெர்மனியில் குண்டுகள் கிடைத்த இடம்

இங்கிலாந்தில் வெடிக்கச் செய்யப்பட்ட குண்டுகள்

இங்கிலாந்தில் கிடைத்த குண்டு

இதேபோன்று இங்கிலாந்திலும் எக்ஸ்டர் பகுதியில் கடந்த மாதம் மிகப் பெரிய குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியிலிருந்த மக்களை வெளியேற்றி ஆழமாக குழிதோண்டி அந்த குண்டினை வெடிக்கச் செய்தனர். அந்த சத்தம் 10 கி.மீ தூரம் வரையிலும் கேட்டதாக சொல்கிறார்கள்.

குண்டு வெடிக்கச் செய்யப்பட்ட காணொளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *