ராகுல் சாங்கிருத்யாயன்

ஊர்சுற்றி உலகைப் புரிந்து கொள்ளும் தத்துவங்களை உரைத்த ராகுல்ஜி

ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

இராகுல்ஜி என்று அழைக்கப்படும் ராகுல் சாங்கிருத்யாயன் 1893-ம் ஆண்டு கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம், பண்டகா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத் என்பதாகும்.  இளம் வயதிலேயே இவரின் பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார். 1897-ம் ஆண்டுப் பஞ்சம் பற்றி இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை நினைவாகும். கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயர் கொண்ட இவர், பெளத்தத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் புத்தத் துறவியாக மாறியபோது தன் பெயரை ராகுல் சாங்கிருத்தியாயன் என மாற்றிக் கொண்டார்.

பன்மொழி அறிஞர்

இராகுல்ஜி ஆரம்பப் பள்ளி வரை தான் படித்தவர் என்ற போதும், பல்வேறு மொழிகளையும் தானாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழ், இந்தி, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும் மொழிகளும், சிங்களம், பிரெஞ்சு, ரசிய மொழி ஆகிய பிற நாட்டு மொழிகளும் கற்றிருந்தார்.

நாளந்தா நூலகத்தின் புத்தகங்களை மீட்டுக் கொண்டுவந்தார்

பயணங்கள் மீது தீரா விருப்பம் கொண்ட ராகுல்ஜீ, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், முன்னாள் சோவியத் உள்ளிட்ட  பல நாடுகளுக்கும் பயணித்தவர். இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்த மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் திபெத்திற்கு இவர் புத்தத் துறவியாகச் சென்றபோது பார்த்தவர், அவற்றை அங்கிருந்து மீட்டு மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவந்தார். தற்போது பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச் சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது. 

1937-ம் ஆண்டு திபெத் பயணத்தில் ராகுல் சாங்கிருத்யாயன்
1937-ம் ஆண்டு திபெத் பயணத்தில் ராகுல் சாங்கிருத்யாயன்

சிறையிலிருந்தும் நூல்கள் எழுதினார்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1942 ஹஜாரிபாக் சிறையில் இருந்தபோது தான், புகழ்பெற்ற ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, ‘பொதுவுடைமைதான் என்ன?, சிந்து முதல் கங்கை வரை ஆகிய நூல்களை எழுதினார். இந்தியத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல், ஐரோப்பியத் தத்துவ இயல், பௌத்தத் தத்துவ இயல், ராகுல்ஜியின் சுயசரிதை , ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள், ரிக் வேதகால ஆரியர்கள், ஊர் சுற்றிப் புராணம் உள்ளிட்ட 146 புத்தகங்கள்  எழுதியுள்ளார்.

ராகுல்ஜி பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டிருந்த போது
ராகுல்ஜி பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டிருந்த போது

ஊர் சுற்றிப் புராணம்

தன் வாழ்நாளில் பெரும்பகுதியைப் பயணங்களில் கழித்ததைப் பெருமையாகக் கருதிய இராகுல்ஜி, தனது அனுபவங்களில் இருந்தும் உலகப் பயண முன்னோடிகளின் பயணக் குறிப்பில் இருந்தும் எழுதிய நூல் ஊர்சுற்றிப் புராணம். இந்த புத்தகம் புதிதாகப் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவரும் உலகைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பயணம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் எழுதியிருப்பார்.

தன் பயண அனுபவங்களால் எதிர்கொண்ட சவால்களையும், ஆச்சரியங்களையும், கண்டடைந்த சாதனைகளையும் மிகுந்த ரசனையோடு  இந்நூலில் எழுதியிருக்கிறார் இராகுல்ஜி. உலகில் முக்கியமான பயணிகளான மெகஸ்தனீஸ், பாகியாண், யுவான் சுவாங் போன்றோரின் பயண அனுபவங்களையும், சிறந்த பயண இலக்கியங்கள் எவ்வாறு படைக்கப்பட்டன  என்பதையும் விரிவாக எழுதியிருப்பார்.

வாசிப்பவர்கள் மனதில் ஊர் சுற்றும் எண்ணத்தை உருவாக்கவே இந்த புத்தகத்தை எழுதியதாகவும், ஊர் சுற்றிகளுக்குத் தேவையான  வழிகாட்டுதல்களை முடிந்தவரைத் தந்திருப்பதாகவும் இந்த புத்தகம் குறித்து  இராகுல்ஜி எழுதியுள்ளார்.

ஒரு கம்யூனிஸ்டாக தன்னை வடிவமைத்துக் கொண்டார்   

ஊர் சுற்றுவதிலும், கலைச் செல்வங்களையும், அறிவையும் தேடுவதிலும் மக்களை நேசிப்பதிலும் முழுமையான ஈடுபாடு கொண்டு வாழ்ந்தவர். வாழ்க்கை குறித்த தேடலில் முழு முனைப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கடைசியில் ஒரு கம்யூனிஸ்டாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டார்.  

வால்கா முதல் கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை, சிந்து முதல் கங்கை வரை போன்ற நூல்களின் வாயிலாக இந்திய மக்களுக்குப் புதிய வரலாற்றுப் பார்வையை உருவாக்கியவர்.

வால்கா முதல் கங்கை வரை நூலின் முகப்பு

வால்கா முதல் கங்கைவரை முத்தையா என்பவரால் தமிழில் முதன்முதலாக மொழிபெயர்க்கப்பட்டது. அதன்பின் பல மொழிபெயர்ப்பில் 40-க்கும் மேற்பட்ட பதிப்பைக் கண்டுள்ளது. மேலும் இந்த புத்தகம் பல இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளது.

கி.மு.6000 முதல் இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம் வரையிலான மனிதகுல வரலாற்றை மார்க்சியம் அல்லது பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்குகிற நூல் தான் வால்கா முதல் கங்கை வரை. இந்த நூல் தமிழில் மட்டும் 1954 லிருந்து 2009 வரை 28 பதிப்புகள் போடப்பட்டிருக்கிறது. 

வால்கா முதல் கங்கை வரை நூலில் மனிதகுல வரலாற்றை 20 கதைகளில் விளக்குகிறார் ராகுல் சாங்கிருத்யாயன். குகைகளில் வாழ்ந்த மனித இனம், அப்போது பேச்சு என்பதே இல்லை. அதன் இன்னொரு வடிவமான எழுத்து தோன்றியே 5000 வருடங்கள் தான் இருக்கும். வால்கா நதிக்கரையில் இருந்து தொடங்கும் கதை கங்கை கரையில் முடியும்.

ஆரியர் ஊடுருவல், இஸ்லாமியர் கலப்பு ,ஆங்கிலேயர் வருகை எனப் படிப்படியாக விரித்துச் செல்வார். கி.பி.1942-ம் ஆண்டு காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்துடனும், இரண்டாம் உலகப்போர் (1939-1945) நடந்துகொண்டிருக்கும் காலத்திலும் அந்த நூல் முடிவடைகிறது.

உலக வரலாற்றையும், சமூகங்களையும், அரசியலையும் தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் வால்கா முதல் கங்கை வரை.

”வால்கா முதல் கங்கை வரை” தமிழில் வெளிவந்த சில தினங்களுக்குப் பின் அறிஞர் அண்ணா, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கூட்டம் ஒன்றில், ”ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்; நல்ல தமிழில் எழுதப்பட்டிருக்கிறது” என்று பாராட்டி இந்நூலை அறிமுகம் செய்தார்.

சாகித்திய அகாதமி மற்றும் பத்மபூஷன் விருது

1958-ம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது, மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் நேருவின் கையிலிருந்து சாகித்திய அகாதமி விருதைப் பெறும் ராகுல் சாங்கிருத்யாயன்
முன்னாள் பிரதமர் நேருவின் கையிலிருந்து சாகித்திய அகாதமி விருதைப் பெறும் ராகுல் சாங்கிருத்யாயன்

லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் இந்திய தத்துவவியல் பேராசிரியர்

இராகுல்ஜி முறைப்படி கல்வி நிலையம் சென்று படிக்காதவர் என்றபோதும்  அவரது தேடலாலும் உழைப்பாலும் தத்துவம் மற்றும் வரலாற்றுத் துறையில் தவிர்க்க முடியாத அறிஞரானார். அதனால் தான் சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்திய தத்துவவியல் பேராசிரியராக நியமித்தது.

மனித சமுதாயத்தின் ஞானக் களஞ்சியமாக விளங்கியவர். ராகுல்ஜி 1963 ஏப்ரல் 14 அன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் மரணம் அடைந்தார். 

ராகுல்ஜி பெயரில் வழங்கப்படும் விருதுகள்

இந்திய அரசு மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் தேசிய விருது, மகா பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் சுற்றுலா விருது ஆகிய விருதுகளை ராகுல் சாங்கிருத்தியாயன் பெயரால் வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *