கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் வேலையிழப்பு மற்றும் வருமான இழப்புடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதார சிக்கலில் இருக்கும்போது நுண் கடன் நிறுவனங்கள் (Micro Finance companies) கடன் பெற்றோருக்கு கொடுக்கும் தொல்லை என்பது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் அதிகமாக செயல்படும் மாநிலங்களில் முக்கியமானதாக தமிழ்நாடு இருக்கிறது. 2019-ம் ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டில் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் கொடுத்திருக்கும் கடன் தொகையானது 19,500 கோடி ரூபாயாகும்.
தனியார் சுய உதவிக் குழுக்கள்
மகளிர் சுய உதவிக் குழுக்கள் இரண்டு வகையாக இயங்குகிறது. அதில் ஒன்று பதிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழுவாக உறுப்பினர்களை இணைத்து அவர்களிடம் சந்தா வசூல் செய்து, அதனை கூட்டுறவு வங்கிகள் அல்லது பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்வது. அவற்றிலிருந்து சுயதொழில்களுக்கான கடன்கள் பெறுவது. பல இடங்களில் குழுவாகவும் சுய தொழில்களை செய்கிறார்கள்.
இரண்டாவது வகை மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்பவை கிராமப் பகுதிகளை குழுவாக இணைத்து, தனியார் நிறுவனங்கள் மூலம் கடன் வழங்குவதாகும். இந்த நிறுவனங்கள் உருவாக்கும் குழுக்களில் மக்களிடம் இருந்து சந்தா பெறுவதோ, குழுவாக தொழில் தொடங்குவதோ என எந்த திட்டங்களும் கிடையாது. ஒரு குழுவாக கடன் பெறும்போது ஒவ்வொரு நபரின் கடன் தொகைக்கும் மொத்த குழுவும் பொறுப்பு என்பதால், நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் வேலை எளிதாகிறது என்பதைத் தவிர, இதில் பெண்கள் குழுவாக இணைக்கப்படுவத்தில் வேறு எந்த நோக்கமும் இல்லை.
கிராம விடியல், லோக் சமஸ்தா, கோமாதா, தின லஷ்மி குழு, எக்விடாஸ், மதுரா, எச்.டி.எப்.சி, ஐ.டி.எப்.சி, சூர்யோதை, ஈசப், எல்.என்.டி, ஆசிர்வாதம், முத்தூட் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், முத்து பின்கார்ப், கிராம சக்தி, ஸ்மைல், பவ்டா, நூடுல்ஸ், பென்சில், சாட்டின், உஜ்ஜி வன், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் ஏழை பெண்கள்
இந்த நுண் நிதி நிறுவனங்கள் கடன்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை தரும் காரணத்தினால், அதனை அடைப்பதற்காக மக்கள் கந்து வட்டிக்காரர்களை அணுகும் நிலை வந்திருக்கிறது. பல இடங்களில் நுண் நிதி நிறுவனங்கள் சட்ட விரோதமாக அடியாட்களைப் பயன்படுத்தி மிரட்டுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக தற்போது மக்கள் இத்தகைய நுண் நிதி நிறுவனங்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு அரசை நோக்கி கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் வட்டாட்சியரை சந்திக்க வந்த பெண்கள் ஊரடங்கு காலத்தில் நுண் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனமான கடன் வசூலை கால நீட்டிப்பு செய்து, 2021 மார்ச் வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு காலத்தில் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குழுவைச் சார்ந்த பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அப்பெண்கள் வட்டாட்சியரிடம் பேசுகையில்,
”பாதிக்கப்பட்ட பெண்கள் நாங்க வாடகை வீட்ல் இருக்கோம், வாடகை கொடுக்க முடியல்.கடன்காரங்க வந்து அவதூறா பேசும் போது, வீட்டு ஓனர் எங்களை வீட்டை காலி பண்ண சொல்லி நெருக்கடி கொடுக்கிறாங்க. பிள்ளை குட்டியோட நாங்க எங்க போவோம் சார். வேற யாரும் வீடும் கொடுக்க முடியாதுன்னு சொல்றாங்க. எங்களுக்கு வாழ வழி சொல்லுங்க. இல்லைன்னா சாவதைத் தவிர வேற வழியில்லை. அவமானமா இருக்கு சார். கஷ்டத்தோட கூறு கடனை வாங்கிட்டோம். ஊரடங்கு காலத்துல நெருக்கடியால கட்ட முடியல. ஏதாவது வழி பண்ணுங்க”
என்று கேட்டுள்ளனர்.
நிகழும் மரணங்கள்
தஞ்சை மாவட்டத்தில் ஆனந்த் என்பவர் சிட்டி யூனியன் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனுக்கு வீட்டை ஜப்தி செய்வோம் என்று வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பறவை கார்த்திக், மஞ்சுநாத் இருவரின் மரணங்களுக்கு IDFC நிறுவனம்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாத இந்த நெருக்கடியான நேரத்தில் இத்தகைய நிதி நிறுவனங்களால் தொடர் தொல்லைகளுக்கு மக்கள் உள்ளாக்கப்படுவதை உடனடியாக அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.