மோடி ஆளுநர்கள் கருத்தரங்கம்

பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?

ஒன்றிய அரசின் புதிய தேசிய கொள்கை குறித்து மாநில ஆளுநர்களுக்கான விவாதம் ஒன்றினை செப்டம்பர் 7 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடத்தியிருக்கிறார். ”உயர் கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கை – 2020 ன் பங்கு (Role of NEP-2020 in Transforming Higher Education)”  எனும் தலைப்பில் அந்த கருத்தரங்கம் நடைபெற்றது. 

இந்த விவாதத்தில் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள், மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், துணை ஆளுநர்கள் உள்ளிட்டோரும் சில மாநிலங்களின் கல்வி அமைச்சர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். 

இக்கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக நாட்டில் பல்வேறு முக்கியமான முன்னேற்றங்கள் நிகழப் போவதாக மோடி விவரித்தார். மேலும் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களின் பல்கலைக்கழகங்களிலும் காணொளி கருத்தரங்கங்களை செப்டம்பர் 25-ம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும் என்று ஆளுநர்களையும், கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களையும் கேட்டுக் கொண்டார்.

இப்படிப்பட்ட வேண்டுகோளினை ஆளுநர்களுக்கான கூட்டத்தில் ஏன் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதைவிட முக்கியமாக புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்தான கூட்டத்தினை ஆளுநர்களுக்கான கருத்தரங்கமாக எதற்காக நடத்த வேண்டும் எனும் கேள்வியும் எழுகிறது. 

மக்கள் பிரதிநிதிகளான மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதா?

ஒரு மாநிலத்தின் கல்வி குறித்தான கொள்கைக்கு முதன்மையானவர்களாக இருப்பவர்கள் அம்மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் கல்வி அமைச்சர்களாக இருப்பவர்கள். பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்தான கருத்தரங்கங்களை மாநில பல்கலைக்கழகங்களில் நடத்த விருப்பப்பட்டால், அதை மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டத்தினை நடத்தி அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் நடத்த வேண்டும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை -2020 க்கு இன்னும் பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநில அரசுகளிடம் உரிய விவாதத்தினை நடத்தாமல், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மாநிலங்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, அவசர கதியில் ஒன்றிய அரசினால் புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது. பாராளுமன்ற விவாதமும் தவிர்க்கப்படுகிறது. 

இதற்கு நாடு முழுதும் இருந்து ஏராளமான எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அவர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசும்போதும், இக்கொள்கைக்கு எந்த எதிர்ப்புமே இல்லை என்று தவறான தகவல்களை குறிப்பிட்டு வருகிறார்.

இதையும் படிக்க: புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?

குழு அமைத்திருக்கும் தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையினை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவினை அமைத்துள்ளது. அக்குழு இப்போதுதான் ஆய்வினைத் தொடங்கியுள்ளது. இன்னும் தமிழ்நாடு அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளவே இல்லை. அப்படியிருக்கையில் தமிழ்நாட்டின் ஆளுநரிடம் கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கை நடத்தச் சொல்வது மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயல் இல்லையா? 

மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?

மாநிலத்தின் மக்கள் பிரதிநிதிகளிடம் பேசாமல், மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநரிடம் பேசி செயல்படுத்த கேட்பதை அரசியலமைப்பு சாசனத்திற்கே எதிரான நடவடிக்கையாகும்.

பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரங்கள்

மக்கள் பிரதிநிதிகளைக் காட்டிலும் அதிக முன்னுரிமை கொடுத்து ஆளுநர்களை ஏன் அழைக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படும் போது, ஆளுநர்கள்தான் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் (Chancellors) என்று பதில் சொல்லப்படுகிறது. 

ஆனால் பல்கலைக்கழக அதிகாரம் குறித்த விவகாரங்களில் மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் மத்தியில் பல முறை முரண்பாடுகள் எழுந்திருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களை வேந்தராக நியமிக்கும் முறை என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் 1857-ம் ஆண்டு மூன்று பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டபோது ஏற்படுத்தப்பட்ட முறையாகும். அம்முறையே இன்று வரையிலும் வெகுசில மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு தொடர்கிறது.

1985-ல் தமிழ்நாட்டில் பல்கலைக்கழக அதிகாரத்தில் ஆளுநருடன் ஏற்பட்ட முரண்

தமிழ்நாட்டில் 1985-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ஆளுநராக இருந்த எஸ்.எல்.குரானா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எஸ்.கிருஷ்ணசாமி என்பவரை நியமித்தார். ஆனால் தமிழ்நாடு அரசு சி.ஏ.பெருமாள் என்பவரை நியமிப்பதற்கு பரிந்துரைத்திருந்தது. 

அப்போது கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் ஆளுநரின் நியமனத்தினை எதிர்த்து, ”மாநில முதலமைச்சருடன் ஆலோசித்து துணை வேந்தர்களை நியமிப்பதே இதுநாள் வரையில் நடைமுறையாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த முறை ஆளுநர் அந்த நடைமுறையினை பின்பற்றவில்லை. ஆளுநர் எப்போதும் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படியே நடக்க வேண்டும்” என்று பேசினார்.

மேலும் அரங்கநாயகம் பழைய வரலாறு ஒன்றையும் சுட்டிக் காட்டினார். பிரபுதாஸ் பத்வாரி ஆளுநராக இருந்தபோது, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பதில் முரண்பாடு ஏற்பட்டது. அப்போது சென்னைக்கு வந்திருந்த குடியரசுத் தலைவர் சஞ்சீவ் ரெட்டி அவர்கள் ஆளுநரிடம் முதலமைச்சரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளுங்கள். துணைவேந்தர் நியமனத்தில் முதலமைச்சரின் அறிவுறுத்தலை மறுப்பது மாநில உரிமைகளை பறிப்பதற்கு ஒப்பானதாகும் என்று தெரிவித்தார். 

குடியரசுத் தலைவர் சஞ்சீவ் ரெட்டி அன்று எடுத்த முடிவு என்பது பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில உரிமை என்ன என்பதையும், ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதையும் தெளிவாக வரையறுப்பதாக இருக்கிறது. 

ஆளுநர் அதிகாரத்தின் எல்லையை முன்வைத்த ஒரிசா முதல்வர் பிஸ்வநாத் தாஸ்

ஒரிசா முதலமைச்சராக இருந்த பிஸ்வநாத் தாஸ் பின்வருமாறு தெரிவித்தார்.

”ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஒரு முகவராக இருக்கிறார். மாநில அரசின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக அவர் மேற்கொள்ளும் செயல்கள் மத்திய – மாநில அரசுகளுக்கிடையிலான பிரச்சினையாகவே பார்க்கப்படும். மத்திய-மாநில உறவுகள் சுமூகமாக நடைபெற வேண்டுமென்றால், முதலமைச்சரின் அறிவுரையின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும், அதுவே விதி. எல்லாவற்றிற்கும் மேலாக மாநில நிதியில் நடத்தப்படும் பல்கலைக்கழகத்தில், அதன் விவகாரங்களுக்கான பொறுப்பு மாநில அரசுக்கே சேரும், வேந்தராக செயல்படும் ஆளுநரைச் சேராது. சட்டத்திடமும், மக்களிடமும் விமர்சனங்களை சந்திக்கப் போவது அரசுதான். ஆகவே துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசிடம் கருத்து கேட்டுதான் ஆகவேண்டும்”

என்று ஆளுநரின் அதிகாரத்தின் எல்லை எது என்பதை தெளிவாகப் பேசினார்.

ஆளுநரின் அதிகாரத்தை வரையறுக்கும் இந்திய அரசியல் சாசனப் பிரிவு

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 163(1) ஆளுநரின் அதிகாரத்தினை பின்வருமாறு வரையறுக்கிறது. 

”There shall be a council of Ministers with the chief Minister at the head to aid and advise the Governor in the exercise of his functions, except in so far as he is by or under this constitution required to exercise his functions or any of them in his discretion.”

அதன்படி ஆளுநரின் செயல்பாடுகள் என்பவை அமைச்சரவை மற்றும் முதலமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவே அமைகின்றன. 

மாநில பல்கலைக்கழக சட்டத்தில் ஆளுநரின் அதிகாரம்

மாநில ஆளுநர் பல்கழைக்கழக வேந்தராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு சர்காரியா ஆணையம் கீழ்காணும் பரிந்துரையை அளிக்கிறது.

”ஒரு மாநில அரசின் பல்கலைக்கழக சட்டம் என்பது ஆளுநருக்கு பல்கலைக்கழக வேந்தர் பதவியினை வழங்குகிறது. அச்சட்டத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக விவகாரத்திற்குள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்பது பல்கலைக்கழக வேந்தராக செயல்படுவதற்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, ஆளுநராக செயல்படுவதற்கு அல்ல. ஆகையால் ஒரு பல்கலைக்கழக வேந்தர் மாநிலத்தின் அமைச்சரவையின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும். பல்கலைக்கழகம் தொடர்பான குறிப்பான சில முக்கிய விடயங்களில் அமைச்சரவையின் ஆலோசனையினை பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் ஆளுநர் கேட்க கடமைப்பட்டவராக இருக்கிறார்.” (ஆனால் அவர்கள் சொல்கிற முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பதும் முன்வைக்கப்படுகிறது).

ஆளுநர் பதவி குறித்து அண்ணா எழுப்பிய கேள்விகள்

சட்டமன்றத்தில் உரையாற்றும் அண்ணா படம்: கோப்பு

ஆளுநர் பதவி என்ற ஒன்றின் மூலமாக மாநில அரசுகளின் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதைத் தடுத்து, அதனைப் பாதுகாப்பதற்காகத் தான் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆளுநர் பதவி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 1959-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையைப் புறக்கணித்தது பற்றி அவர் பேசுகையில்,

“ஆளுநர் பதவி என்ற ஒரு அமைப்பையும், ஆளுநர் நியமிக்கப்படும் முறையையும், அதற்காக வீணாக பணம் செலவழிக்கப்படுவதையும், தேர்தல் மூலம் ஏற்படாத ஆளுநர் என்ற ஒருவரை நியமிப்பதையும் குறித்து எங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் பொருட்டுதான் நாங்கள் ஆளுநர் உரையின்போது கலந்து கொள்ளவில்லை”

என்று பேசினார்.

மேலும்

“ஆளுநர் அவர்கள் இந்திய நாட்டு குடியரசுத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டவர் அல்ல. அமர்த்தப்பட்டவர். இந்த சபையிலோ அல்லது வேறு சபையிலோ உறுப்பினர் அல்லாதவர் என்பதை நிலைநாட்டவே தான் நாங்கள் ஆளுநர் உரையை புறக்கணித்தோம்….ஆளுநர் அவர்கள் எந்த விதத்திலும் (தமிழ்நாட்டின்) இரண்டு அவையையும் சார்ந்த அங்கமல்ல என்று நான் சொல்லுகின்றேன். இந்திய அரசியல் நிர்ணய சட்டம் 194வது உட்பிரிவு 4-ன் படி, ஆளுநர் அவர்கள் சட்டசபையிலும் அல்லது மேல்சபையிலும் பேசலாமே யொழிய சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதோ அல்லது அங்கே எடுக்கப்படுகின்ற வாக்கெடுப்புகளில் கலந்து கொள்வதோ முடியாதது ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 158-வது பிரிவின் படி, ஆளுநர் சட்டமன்றத்திலோ அல்லது மேல்சபையிலோ உறுப்பினராக இருக்க முடியாது. எனவே ஆளுநர் அவர்களை இந்த சபையின் அங்கம் என்று சொல்வதற்கு இல்லை. ஆளுநர் சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வது முடியாத ஒன்றாகும்.”

என்றும் பேசினார்.

தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் கூட்டாட்சி தத்துவம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பிரதிநிதிகளை கருத்தில் கொள்ளாமல் ஆளுநரை வைத்து காரியங்களை நகர்த்தும் முயற்சியினை மோடி அவர்களின் பாஜக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. மாநில அதிகாரத்தினை கட்டுப்படுத்துவதற்கான கருவியாக ஆளுநரின் பதவி பல காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இப்போது தேசிய கல்வி கொள்கை 2020-னை தமிழ்நாடு அரசு இன்னும் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்காத நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வரும் நிலையில் ஆளுநர்களுக்கான கருத்தரங்கத்தினை பிரதமர் நடத்துவது என்பதனை கூட்டாட்சி தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே பார்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *