கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு போன்றவற்றால் இந்தியாவின் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழலில், விவசாயத்தின் தலையெழுத்தைப் புரட்டிப் போடும் மூன்று சட்டங்களை பாராளுமன்ற விவாதத்திற்குள் கொண்டு வராமலேயே இந்திய ஒன்றிய அரசு அவசர சட்டங்களாக நிறைவேற்றியது.
அந்த மூன்று அவசர சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் என்றும், விவசாயத்தை அழிக்கக் கூடியவை என்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த மூன்று அவசர சட்டங்களாவன
- ஒப்பந்த விவசாய சேவை மற்றும் விலை உத்தரவாதத்தில் விவசாயிகளுக்கான (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம் (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Ordinance)
- விவசாய விளைபொருள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம் (The Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Ordinance, 2020)
- அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் (Essential Commodities (Amendment) Ordinance, 2020)
இந்த அவசர சட்டங்கள் குறித்த இரண்டு விரிவான கட்டுரைகள் ஏற்கனவே Madras Radicals இணையதளத்தில் வெளிவந்துள்ளது. அவற்றை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம்.
- WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
- விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
ஹரியானா போராட்டம்
ஹரியானாவில் பாரதிய கிசான் யூனியன் மற்றும் இதர விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (செப்டம்பர் 10) பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டன. ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள பிப்லி பகுதியில் டெல்லி தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல விவசாயிகள் காயமடைந்துள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த மறியல் 4 மணிநேரம் வரை நீடித்தது. பிறகு போராட்டத்தினை முடித்துக் கொண்டு கலைந்து சென்ற விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 20 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 15-ம் தேதி முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த அவசர சட்டங்கள் திரும்பப் பெறப்படாவிட்டால் நாடு முழுதும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையினை(Minimum Support Price) உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. வயதான விவசாயிகளை காவல்துறையினர் தாக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலையினை உறுதி செய்யாமல், மண்டி முறையினை அழிக்க முயலும் எந்த சட்டமும் விவசாயிகளுக்கு ஆதரவான சட்டமாக இருக்க முடியாது என்று ஹரியானாவின் எதிர்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன.
பஞ்சாபிலும் போராட்டம் அறிவிப்பு
இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய கிசான் சங்கம் மற்றும் இதர விவசாய சங்கங்கள் இணைந்து வருகிற செப்டம்பர் 15-ம் தேதி சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள இந்த மூன்று அவசர சட்டங்களும், விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கும் வகையில் இருப்பதாகவும், ஒப்பந்த முறை விவசாயம் என்பது விவசாயிகளின் நலனை முறித்துவிடும் என்றும் பல்வேறு எதிர்ப்புகளை நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் எழுப்பி வருகின்றன. மேலும் இந்த அவசர சட்டங்கள் விவசாய உற்பத்தி பொருட்களின் வணிகத்தின் மீதான மாநில உரிமைகளை பறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இந்த அவசர சட்டங்கள் தங்கள் மாநில அதிகாரத்தை பறிக்கிறது என்று கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள்
தமிழ்நாட்டிலும் இந்த அவசர சட்டங்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.
ஜூன் 10-ம் தேதி அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் அவசர சட்ட நகலினை எரிக்கும் போராட்டத்தினை நடத்தினர்.
ஜூலை 27-ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்களும் இணைந்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுதல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.
செப்டம்பர் 8-ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் இணைந்து பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டத்தினை நடத்தினர்.
தொடர்ந்து விவசாயிகள் இந்த அவசர சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பாஜக அரசு இந்த அவசர சட்டங்களை கொண்டு வந்ததை மிக முக்கியமான சாதனையாகவும், விவசாய சீர்திருத்தமாகவும் பிரச்சாரம் செய்து வருகிறது.