இந்தியாவின் சிறைகளில் உள்ள 4,78,000 பேரில் 10-ல் 7 பேர் குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகள் என்று 2019-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது மொத்தமுள்ள சிறைக் கைதிகளில் 69% சதவீதம் பேர் இன்னும் குற்றம் உறுதி செய்யப்படாமலேயே சிறையில் உள்ளனர். அவர்களின் மீதான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் தான் உள்ளது. உலகத்திலேயே குற்றம் நிரூபிக்கப்படாமல் அதிகம் பேர் சிறைக்கைதிகளாக இருக்கும் 15 நாடுகளில் இந்தியா ஒன்றாக இருக்கிறது.
லிபியா, காங்கோ, நைஜீரியா, ஏமன், வங்காளதேசம் உள்ளிட்ட 14 நாடுகள் மட்டுமே இந்தியாவை விட அதிக விசாரணைக் கைதிகளை சிறையில் கொண்டிருக்கிறது.
விளிம்புநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களே சிறையில் அதிகம்
மேலும் இந்தியாவில் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக சிறைகளில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 2002-ம் ஆண்டு துவங்கி 2019-ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் இந்திய சிறைகளில் இருக்கும் 3-ல் 2 பேர் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று NCRB புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சராசரியாக,
- SC பிரிவைச் சேர்ந்தவர்கள் – 21.7%
- ST பிரிவைச் சேர்ந்தவர்கள் – 12.3%
- OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் – 30%
மேலும் சிறைக் கைதிகளில் 5-ல் ஒருவர் இசுலாமியராக இருக்கிறார் என்றும் NCRB புள்ளிவிவரங்களிலிருந்து தெரிய வருகிறது.
- இசுலாமிய சிறைக் கைதிகள் – 21.5%
ஆண்டுவாரியாக சிறைக் கைதிகளின் எண்ணிக்கை
ஆண்டு | விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்த கைதிகள் (OBC, SC, ST) | மற்ற உயர் சாதிகளைச் சேர்ந்த கைதிகள் |
2002 | 1,36,956 | 76,232 |
2003 | 1,23,615 | 74,872 |
2004 | 1,24,623 | 81,033 |
2005 | 1,36,930 | 90,355 |
2006 | 1,50,157 | 84,153 |
2007 | 1,52,380 | 89,033 |
2008 | 1,59,462 | 88,914 |
2009 | 1,64,022 | 77,251 |
2010 | 1,50,792 | 81,219 |
2011 | 1,56,550 | 84,650 |
2012 | 1,66,820 | 88,037 |
2013 | 1,78,755 | 99,748 |
2014 | 1,77,141 | 1,05,738 |
2015 | 1,84,947 | 97,129 |
2017 | 1,92,247 | 1,16,471 |
2018 | 2,09,629 | 1,13,908 |
2019 | 2,17,120 | 1,13,367 |
இந்த புள்ளிவிவரங்கள் எதை உணர்த்துகின்றன?
சிறைக் கைதிகள் குறித்தான இந்த புள்ளி விவரங்கள் இந்தியாவில் சமூக சமமின்மை பெரிய அளவில் இருப்பதை வெளிப்படுத்தும் பிம்பமாக இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
SC, ST மக்களின் வீடுகளின் சராசரி வருமானம் என்பது தேசிய சராசரியைக் காட்டிலும் முறையே 21%, 34% குறைவாக இருக்கிறது. OBC மக்களின் வீடுகளின் சராசரி வருமானம் தேசிய சராசரியை விட 8% குறைவாக இருக்கிறது.
ஏழைகளாக இருப்பவர்கள் சிறையிலிருந்து பிணை பெறுவதற்கு போதுமான வசதி இல்லாமல் இருப்பதாகவும், அரசாங்கத்தின் இலவச சட்ட உதவி என்பது முறையாக கிடைக்கப் பெறுவதில்லை, அப்படியே கிடைத்தாலும் அது முழு ஈடுபாட்டுடன் செய்யப்படுவதில்லை என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
மேலும் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்த ஒருவர் ஏதேனும் ஒருமுறை ஒரு குற்றச்செயல் தொடர்பாக கைது செய்யப்பட்டால், அவர்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். விளிம்புநிலை சமூகங்கள் மீதான தவறான முன்பார்வையும், அவர்கள் மீதான அதீத கண்காணிப்பும் கூட இதற்கான காரணங்களாக தெரிவிக்கின்றனர்.
சில குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளில் சிறுவர்கள் உட்பட ஆண்கள் பலரும் தொடர்ந்து குற்ற வழக்குகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு பிணை எடுப்பதற்கு ஜாமீன் கையெழுத்திற்குக் கூட ஆட்கள் இருப்பதில்லை என்கிறார்கள். மேலும் நீதிப் பொறிமுறைகள் தாமதமாக நிகழ்த்தப்படுவதையும் ஒரு காரணமாக அவர்கள் முன்வைக்கிறார்கள்.
கொள்ளளவை மிஞ்சிய சிறைகள்
மேலும் இந்திய சிறைகளில் சராசரி கொள்ளளவை விடவும் அதிக எண்ணிக்கையில் 118.5% என்ற விகிதத்தில் சிறைவாசிகள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
7 வருடங்களுக்கு குறைவான தண்டனை உள்ள குற்றங்களின் மீதான வழக்குகளுக்கு தேவையில்லாமல் சிறையில் அடைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன போதிலும், தேவையற்ற கைதுகள் அதிகமாக நடப்பதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
குற்றம் நிரூபிக்கப்படாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டிற்குப் பிறகு 140% அதிகரித்திருக்கிறது.