விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் மீது அவதூறு பரப்புவதாகவும், பயனாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அமைப்பிற்கு ஒரு கடிதத்தினையும் ஜியோ நிறுவனம் எழுதியுள்ளது.
ஜியோ சிம்களை எரித்த விவசாயிகள்
விவசாயிகள் போராட்டம் டெல்லியில் கடந்த 18 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாய மசோதாக்கள் அம்பானி மற்றும் அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவே கொண்டுவரப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள் என பலவற்றையும் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை எரிக்கும் போராட்டத்தினையும் விவசாயிகள் நடத்தினார்கள்.
ஜியோவிலிருந்து நெட்வொர்க் மாறுவதற்கு குவியும் ஏராளமான விண்ணப்பங்கள்
இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைகள் நடந்து வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பெயரை தேவையில்லாமல் உள்ளே நுழைத்து மக்களை திசைதிருப்பும் வேலையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள், ஏஜெண்ட்கள் மற்றும் ரீடெய்லர்கள் மூலமாக பஞ்சாப் மற்றும் வட இந்திய மாநிலங்களில் இத்தகைய பிரச்சாரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருவதாக ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. ஜியோ நெட்வொர்க்கிலிருந்து உங்கள் நம்பரை வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றுவதன் மூலம் நீங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க முடியும் என்று மக்களை தூண்டி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாய சட்டங்களின் மூலமாக லாபமடையக் கூடிய நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் இருப்பதாக தவறான வதந்திகளை ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனத்தினர் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நெட்வொர்க்கை மாற்றுவதாக சொல்லி, ஏராளமான மக்களிடமிருந்து நெட்வொர்க்கை மாற்றும் விண்ணப்பங்களும் (Portability request), ரத்து செய்யும் விண்ணப்பங்களும் தங்களுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டினை ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் மறுத்துள்ளன. இது எந்த அடிப்படையுமற்ற மோசமான குற்றச்சாட்டு என்றும், தாங்கள் தங்கள் வணிகத்தை வெளிப்படையாகவே நடத்தி வருவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோவின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள், தொலை தொடர்பு நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஏர்டெல்லின் கருத்தையே தாங்களும் ஆதரிப்பதாகவும் வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் வலுப்பெற்று வருவதால் அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.