கிளைமேட் எமர்ஜென்சி

’கிளைமேட் எமர்ஜென்சி’யை பிரகடனப்படுத்துங்கள்; உலக தலைவர்களுக்கு சொன்ன ஐ.நா பொதுச் செயலாளர்

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்(Antonio Guterres) உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக காலநிலை மாற்றத்தில் இருந்து காப்பதற்கான அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தின் ஐந்தாவது நிறைவு ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் உலக தலைவர்கள் மத்தியில் ஐ.நா-வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் காணொளி வாயிலாக இதை தெரிவித்தார். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநாடு

அடுத்த ஆண்டு ரஷ்யா நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற இருக்கும் சந்திப்பிற்கு முன் எல்லா நாடுகளும் நிலையான கொள்கைகளை வகுத்து  இலக்கினை விரைவாக அடைய துரிதமாக செயல்பட வேண்டிய அவசியத்தை பலரும் தெரிவித்தனர்.

“நாம் ஒரு அவசரநிலையை எதிர்கொண்டு இருக்கிறோம் என்பதை யாராவது மறுக்க முடியுமா? “ஆதலால் கார்பன் நியூட்ரல் நிலையை அடையும் வரை தங்கள் நாடுகளில் காலநிலை அவசர பிரகடனத்தை அறிவிக்குமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து தலைவர்களையும் கேட்டுகொள்கிறேன்” என போர்த்துகீசிய முன்னாள் பிரதமர் மற்றும் ஐ.நா- வின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்தார். 

ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குடெரெஸ்

பணக்கார நாடுகளின் கடமை

9/12/20 அன்று ஐ.நா சார்பாக வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் திட்ட அறிக்கையில் (UN Environment programme’s ‘Emission Gap Report’) “வசதியான 1% மக்கள், உலகில் உள்ள 50% ஏழை மக்களை விட இருமடங்கு அதிகமாக மாசுபடுத்தி வருவதாக” சுட்டிக்காட்டியது பெறும் சர்ச்சையைக் கிளப்பியது. வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்க முனைப்பு காட்டாது இருந்தை பல செயற்பாட்டாளர்கள் மற்றும் வளரும் நாடுகள் கேள்வி எழுப்பி வந்தனர்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா முன்னர் வெளியேறி இருந்த நிலையில், தற்போது புதியதாக அதிபர் பதவி ஏற்கவுள்ள ஜோ பைடன் மீண்டும் இதில் இணைவதாக தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பாரிஸ் ஒப்பந்தத்தில் ஏற்கபட்டுள்ள உறுதிபாட்டை நிறைவேற்றுவதில் முனைப்பாக செயல்படத் தொடங்கியுள்ளார் ஐ.நா பொதுச் செயலாளர் குடெரெஸ்.

மேலும் கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் அரசுகள் பொருளாதார மீட்புக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் தூய்மையான மின்னாற்றல்களுக்கு பதிலாக கார்பனை அதிகளவில் வெளியேற்றும் (50 சதவீத்திற்கும் மேலாக) எரிபொருளைப் பயன்படுத்தும் துறைகளுக்கே செலவு செய்யப்பட்டதற்கு எதிராக குடெரெஸ் கண்டனம் தெரிவித்தார். 

உலக நாடுகளின் முன்னெடுப்பு

பிரிட்டன்

பிரிட்டன் அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படும் கார்பன் எரிபொருள் திட்டங்களுக்கு, அரசாங்கத்தின் நேரடி ஆதரவை நிறுத்தப்போவதாக அறிவித்தது. மேலும் இதர ஜி-7 நாடுகளுக்கு அழுத்தம் தரும் விதத்தில் அமைந்த பிரிட்டனின் இந்த நடவடிக்கையை செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

சீனா

சீனா அதிபர் ஜி ஜின்பிங் 2060-ம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை நிறுத்த உறுதி ஏற்றுள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் நடுநிலை வகிப்பதாக அறிவித்து  பலரை ஆச்சரியப்படுத்தினார். அதுமட்டுமின்றி காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கான இலக்குகளையும் வெளியிட்டார். ஆனால் புதிய நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிதியை நிறுத்துவதற்காக, குடெரெஸ் மற்றும் செயற்பாட்டாளர்களிடமிருந்து வந்த அழைப்புகளுக்கு சீனா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

ஜப்பான் & தென்கொரியா

இதே போல் 2050-ம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக குறைப்பதாக அக்டோபரில் உறுதியளித்த ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் நிலக்கரி அனல்மின் நிலைய உற்பத்திக்கு ஒதுக்கப்படும் நிதிகளை குறைப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசு சீனாவுடனான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் நிலக்கரி ஆலைகளை கட்ட இருக்கும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு சக்தியும் நாட்டில் இருக்காது” என்று கூறியுள்ளார்.

அர்ஜெண்டினா, கனடா உள்ளிட்ட 15 நாடுகள்

அர்ஜென்டினா, பார்படாஸ், கனடா, கொலம்பியா, ஐஸ்லாந்து மற்றும் பெரு முதலிய 15 நாடுகள் தங்கள் நாட்டின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வேகத்தை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் வளைகுடா நாடுகள்

உலக அளவில் 65% கார்பனை வெளியேற்றும் நாடுகள் அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் கார்பன் இல்லா நிலையை அடைய உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார்பன் வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆஸ்திரேலியா  வளைகுடா நாடுகள் மற்றும் பிரேசில் முதலிய நாடுகள் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான திட்டத்தை முன் வைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸ் ஒப்பந்தத்தை இலக்கைக் காட்டிலும் வேகமாக, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் இந்தியா அதிகமான நடவடிக்கைகளை செய்து வருவதாகக் கூறினார். ஆனால் இந்தியாவில் அனல்மின் நிலையங்கள் தொடர்ச்சியாக அதிகப்படுத்தப்பட்டு வருவதும், உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவது என்ற பெயரில் நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்படுவதும் மோடி அவர்கள் பேசியதற்கு முரணாகவே இருக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் தான் 41 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *