பெரம்பலூர் குன்னம்

கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அரசு பள்ளிக்கு அருகில் உள்ள ஓடையில் புதைந்திருந்த கல் மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் ஆய்வுகளில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள ஆய்வுகள் தனித்தன்மை வாய்ந்தது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் கடலாக இருந்து நிலப்பகுதியாக மாறியதில் கடலில் வாழ்ந்த நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், கடலோரப் பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் டைனோசர் போன்ற விலங்குகள் பூமிக்குள் புதைந்து பாசில்கள் எனப்படும் கல்புதைப் படிவங்களாக மாறிவிட்டன. இத்தகைய கல்புதைப் படிவங்கள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அவ்வப்போது கண்டறியப்பட்ட வண்ணம் உள்ளன. 

தற்போது குன்னம் அரசு பள்ளிக்கு அருகில் உள்ள ஓடையில் புதைந்திருந்த கல் மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 5 மீட்டர் நீளமுடைய புதைந்த நிலையில் உள்ள கல்மரத்தின் மேற்பகுதி மட்டும் வெளியில் தெரிகிறது. மேலும் அந்த ஓடையில் சிறுசிறு கிளைகள் போன்ற அமைப்புடைய மரத்துண்டுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. 

இது போன்ற கல்மரம் பெரம்பலூர் மாவட்டத்தில் கிடைப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே சாத்தனூரில் 1940-ம் ஆண்டில் எம்.எஸ்.கிருஷ்ணன் என்ற புவியியல் ஆய்வாளர் கல்மரம் இருப்பதை பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் பல்வேறு கல் மரத்துண்டுகள் இந்த பகுதியில் கிராமங்களில் கண்டறியப்பட்டுள்ளது. 

இதேபோல் குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்துக் கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல் ஆய்வாளர்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையில் இங்கு உருண்டை வடிவத்தில் கிடைத்தது டைனோசர் முட்டையா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே அரியலூர் மாவட்டம் செந்துறையில் 44 டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் பொதுமக்கள் அப்படி கோருகிறார்கள் என்றும், இங்கு கிடைத்தது கடல் படிமப் பாறைகள் உருவாக்கிய தொல் உயிரியல் எச்சங்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பகுதியை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்  என்றும் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *