ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மியும் ஆசிய உற்பத்தி முறையும்

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்து ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கி இந்தியாவின் ஜி.டி.பி என்பது மைனஸில் சென்றுகொண்டிருக்கும் காலத்தில் 2200 கோடி ரூபாயை விளம்பரங்களுக்காக ஒரு துறை செலவிடுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இன்றைக்கு தொலைக்காட்சிகளில், இணையதளத்தில் நாம் திரும்பும் திசையெங்கும் வரும் விளம்பரங்கள் அந்த துறையில் இருந்துதான் வருகின்றன. இப்போது நடந்துகொண்டிருக்கும் ஐ.பி.எல் போட்டியை வழங்குவது கூட அந்த துறையாகவே இருக்கிறது.

கொரோனாவின் ஆரம்ப காலத்திலேயே விளம்பர வருவாய் குறைந்ததாக சொல்லி விகடன், தி ஹிந்து, சன் குழுமம் போன்ற பெரிய நிறுவனங்களே ஆட்குறைப்பு செய்துகொண்டிருக்கும் நிலையில், இவ்வளவு கோடிகளை விளம்பரங்களுக்காக ஒரு துறை செலவிடுகிறது என்றால் அதன் வருமானம் எவ்வளவு உயர்ந்து இருக்க வேண்டும்?

சோசியல் கேசினோ என்று அழைக்கப்படக் கூடிய ஆன்லைன் விளையாட்டுத் துறை கடந்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்பதே அதற்குக் காரணம்.

ஆன்லைன் ரம்மி, ரம்மி சர்க்கிள், A23, ஜங்க்லி ரம்மி, ட்ரீம் 11 என்று தினந்தோறும் பல்வேறு ஆன்லைன் கேமிங் அப்ளிக்கேஷன்களில் கோடிக்கணக்கானவர்களும் அவர்களின் கோடிக்கணக்கான சிறு முதலீடுகளும் புழங்கிக் கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சங்களை இழந்து தற்கொலை செய்து கொண்டவரின் ஆடியோ பதிவு இணையத்தில் வைரல் ஆனது.

சிறு தொகைதான் என்று விளையாட்டாக ஆரம்பித்து லட்சங்களில் இழந்து அந்த பாரம் தாங்க முடியாத இந்திய ஏழை நடுத்தரவர்க்கம் தற்கொலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் செல்வாக்காக இருக்கும் இந்த கேசினோ கலாச்சாரம் என்பது இப்போது மெல்ல இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கிறது.

பண்பாட்டு அளவிலேயே இந்த கேசினோ கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளின்  உற்பத்தி முறையோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் அதற்கு நேர் எதிரான ஆசிய உற்பத்தி முறையோடு தொடர்புடைய இந்தியப் பண்பாடு என்பது சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது.

பல நூற்றாண்டுகளாக ஆசிய நாடுகளின் பிரதான விவசாய உற்பத்தியாக இருந்த நெல்லும் கோதுமையும் அடிப்படையில் நீண்டகாலப் பயிர்களாக இருப்பவை, அதிக மனித உழைப்பைக் கோருபவை, மாறுபட்ட பருவ நிலைகளைக் கடந்து சேமிக்க வேண்டியவை. இந்த உற்பத்திப் பண்புகள்தான்  இந்த நாடுகளின் மக்கள் அடர்த்திக்கும் சேமிப்புப் பழக்கத்திற்கும் அடிப்படையாக இருப்பவை.

இது எங்க அம்மாவிற்கு சீதனமாக வந்த சைக்கிள், இந்த ஸ்கூட்டரை 30 வருடங்களாக வைத்திருக்கிறோம், இந்த டிவி வாங்கி 15 வருடங்களாச்சு என்று பழைய பொருட்களை பெருமையாகக் கருதக்கூடிய மனநிலையை கொண்டது இந்திய சமூகம். ஆடம்பரத்தை பெரிதும் விரும்பாத சேமிப்புப் பழக்க வழக்கத்தைக் கொண்ட சமூகமாக இருந்ததால்தான் 2008-ல் உலகம் முழுதும் பொருளாதார நெருக்கடி வந்தபோதும் நாம் மட்டும் தப்பித்தோம்.

ஆனால் இந்த கலாச்சாரம் உலகமயமாக்கலுக்குப் பிறகு வெகுவாக சிதைந்து இருக்கிறது. மேற்கத்திய சந்தைப் பொருளாதாரத்திற்கு நாம் வெகுவாக ஆட்பட்டு வருகிறோம். அதன் அடுத்த கட்டம்தான் இந்த ஆன்லைன் கேசினோ மார்க்கெட். வறுமையில் உள்ள கோடிக்கணக்கான ஏழை நடுத்தர மக்கள் தங்கள் பொருளாதார விடுதலை இந்த சூதாட்டங்களில் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்படுகிறார்கள். ஆனால் முடிவில் அனைத்தையும் இழந்து தற்கொலைகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.

கோடிக்கணக்கான மக்களை சிறுகச் சிறுக சுரண்டும் இது போன்ற சூதாட்டங்களுக்கு இந்திய அரசு சட்ட அங்கீகாரம் வழங்கி அனுமதி அளித்திருப்பது மக்களின் மீது ஆட்சியாளர்களுக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *