தமிழகத்தில் வாழ்கிற பல பழங்குடி சமூகங்களில் இருளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் காடுகளில் வாழும் இருளர்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வாழும் இருளர்கள் என இரண்டு பிரிவுகளாக உள்ளனர். இவரகளில் சமவெளிப் பகுதிகளில் வாழும் இருளர்களை நாட்டு இருளர் என்று ஆவணங்கள் கூறுகிறது. இவர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வி்ழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்கிறார்கள்.
பட்டியல் பழங்குடிகளான இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். கல்லுரிப் படிப்பிற்கு செல்வதற்கு பழங்குடிகள் பட்டியலில் இடஒதுக்கீடு பெற இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்காததாலேயே பெரும்பான்மையினர் உயர்கல்வி செல்வது தடைபட்டுள்ளது. இதனால் ஆண்கள் கூலி வேலைகளுக்கு செல்வதுடன், பெண்கள் சிறுவயதிலேயே திருமணம் முடித்து வைக்கவும் செய்யப்படுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் தி.பரங்கினி என்ற கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வாழ்கிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவி தனலட்சுமி இந்த ஆண்டு
12-ம் வகுப்பில் 354 மதிப்பெண் எடுத்துள்ளார். கல்லூரி செல்வதற்காக சாதி சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கு கூடியிருந்த ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
தனலட்சுமி தன் தாய் தாட்சாயணியுடன் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு கூடிய ஆதிக்க சாதியினர், அவர்கள் உள்ளூர் கோயிலில் மரபான உரிமை கொண்டவர்களாக இருப்பதால், அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் சான்றிதழ்தான் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த தனலட்சுமி நாங்களும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால் எங்களை சமமாக நடத்துவீர்களா என்று கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் அலுவலகத்தில் இருந்து இவர்களை கீழே தள்ளியுள்ளார்.
தனலட்சுமியின் குடும்பத்தினர் இந்த தாக்குதல் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்ததால், வானுர் டி.எஸ்.பி அஜய் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், பழங்குடிகள் என்று ஜாதி சான்றிதழ் வாங்கினால்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வானூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அரசாங்கம் அறிவித்துள்ள 15 முறையான ஆவணங்கள் கொடுத்த பின்னர், சாதி சான்றிதழ் வழங்குவதை தடை செய்யக் கூடாது என்று போராட்டமும் நடத்தியுள்ளனர்.
தனலட்சுமி தனது இரண்டு சகோதரிகள் சாதி சான்றிதழ் இல்லாமல் கல்லுரி படிப்பைப் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது போல, தனக்கும் அப்படியான நிலை வந்துவிடுமோ என்று கவலை கொள்கிறார். மேலும் தி.பரங்கினி கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கின்றனர். ஆனால் சாதி சான்றிதழ் இல்லாததால், அவர்களால் மேற்படிப்பைத் தொடர முடியவில்லை.
தற்போது 40 மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் படித்து வருகிறார்கள். தனலட்சுமிக்கு உரிய நீதி கிடைத்தால் மட்டுமே, அடுத்து வருபவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிபிடத்தக்கது.
சுதந்திர இந்தியாவில் இன்னும் இந்த நாட்டின் ஒரு தரப்பு குடிமக்கள் சாதி சான்றிதழ் பெற முடியாததால் கல்வி கற்க முடியாத சூழல் இருப்பதும், சாதி சான்றிதழைப் பெறுவதற்காக போராட வேண்டிய நிலை இருப்பதும் நாட்டு மக்களாகிய நாம் அவமானமாக உணர வேண்டிய நிகழ்வாகும்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிகுமார் அவர்கள் கடந்த ஜூலை 25-ம் தேதி தனலட்சுமிக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறார். இன்னும் சாதி சான்றிதழுக்காக தனலட்சுமியின் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் தனலட்சுமிக்கு சாதி சான்றிதழ் கிடைக்காவிட்டால் அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், அவர் விரும்புகிற விவசாயப் படிப்பில் சேர முடியாமல் போகும் நிலையும் உருவாகும்.