காதலித்த இருவரையும் மற்றும் காதலர்களுக்கு உதவிய நண்பரையும் என மூன்று பேரை தூக்கிலிட்டு கொலை செய்த காப் கட்டப்பஞ்சாயத்தினர் 11 பேருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணையில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் காதலித்ததற்காக ஒருவரை தண்டிப்பது கடுமையான குற்றம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு உ.பியில் நடந்த மனிதநேயமற்ற கொடூரம்
இந்த கொடூர சம்பவம் 1991 மார்ச் 27 அன்று உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது.
காதலித்த ஆண், பெண் இருவரும் பட்டியல் பிரிவின் ஒரு அங்கமான ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரு ஒடுக்கப்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்ததற்காக, ஆதிக்க ஜாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடி காப் பஞ்சாயத்து மூலம் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற தண்டனையை வழங்கி கொலை செய்தனர்.
காப் பஞ்சாயத்து என்பது அந்த கிராமத்தில் ஆதிக்க சாதியினரான ஜாட் சமூகத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கட்டப் பஞ்சாயத்து குழுவாகும்.
காதலித்த ஆண், பெண் இருவர் மற்றும் அவருக்கு உதவிய நண்பன் ஆகிய மூன்று பேரும் காப் பஞ்சாயத்துக்கு வரவழைக்கப்பட்டபோது, இளம்பெண் தன் காதலனுடன் தொடர்ந்து வாழ விரும்புவதாகக் கூறினார்,
இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் அவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களை தூக்கிலிடுமாறு கட்டாயப்படுத்தினார். காதலர்களையும், உதவிய நண்பனையும் அடித்து சித்திரவதை செய்தனர். தூக்கிலிடுவதற்கு முன்பு அவர்களின் ரகசிய உறுப்புகளை நெருப்பால் சிதைத்தனர்.
அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தண்டனை
இந்த வழக்கில் விசாரணையின் அடிப்படையில் 54 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பளித்தது. 38 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 30 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் கருத்து
இந்த வழக்கின் உண்மைகள் குறித்து கருத்து தெரிவித்த இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்சநீதிமன்றம், “காதலித்ததற்காக ஒருவரை நீங்கள் தண்டிக்க முடியாது. இத்தகைய குற்றங்கள் சமூகத்தை சீர்குலைக்கும் தன்மை கொண்டது. இது ஒரு மோசமான குற்றமாகும்.” என்று கூறியுள்ளார்.
தொடரும் பிணை குறித்த விசாரணை
வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் குற்றவாளிகளில், இரண்டு நபர்கள் மட்டுமே 10 ஆண்டு சிறைத் தண்டனையை நிறைவு செய்யவில்லை என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மேலும் ஜாமீனுக்காக விண்ணப்பத்தவர்களில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் தாங்கள் வயது முதிர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிறைக்குள் இருந்தபோது கோவிட்-19 தொற்று செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர்.
நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இதனை விசாரணை செய்தது. அதில் நீதிபதிகள் அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கிய நிலையை அறிந்து கொள்ள விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். மேலும் அவர்கள் வெளியில் வருவது பழைய சம்பவத்தை போன்ற குற்றச் செயல்களை தூண்டுமா என்றும் வினா எழுப்பினார்கள். மேலும் அவர்களை விடுவித்தாலும் வேறு மாவட்டத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர்.