பிரபல தத்துவவாதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான நோம் சாம்ஸ்கி மற்றும் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளரான விஜய் பிரசாத் ஆகிய இருவரும் 2021-ம் ஆண்டு மனித இனம் கவலை கொள்ளவேண்டிய 3 முக்கிய பிரச்சினைகளைக் குறிப்பிட்டு குளோப்ட்ரோட்டர் (Globetrotter) இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
இதில் மனித இனம் தவிர்க்க வேண்டிய அல்லது கண்டிப்பான கொள்கை மாற்றங்களை செய்ய வேண்டிய விடயங்களாக அணுசக்தி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவு மற்றும் புதிய தாராளமய கொள்கைகளால் ஏற்படும் பேரழிவுகள் குறித்து எச்சரித்து உள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவு
உலக வெப்பமயமாதல் காரணத்தினால் உருகி வரும் பனிப்பாறைகளும் அதனைத் தொடர்ந்து அதிகரித்து வரும் கடல்நீர் அளவுகளின் காரணமாக மார்ஷல் தீவு முதல் சீஷெல்ஸ தீவுகள் வரை மூழ்கும் அபாயம் இருப்பதாக 2018 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு அறிக்கை வெளியானது.
சுமார் 1 மில்லியன் எண்ணிக்கையிலான விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளதாக 2019 ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.
கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து மாசு ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்திகளுக்கு மாறுவதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்க வளர்ந்த நாடுகள் முனைப்பு காட்டாமல் இருந்து வருகின்றன. (வல்லரசு நாடு என தன்னை கூறிக்கொள்ளும் அமெரிக்கா “பாரிஸ் ஒப்பந்தத்தில்” இருந்து பொறுப்பற்ற முறையில் வெளியேறியது.) இது காலநிலை மாற்றத்தின் ஆபத்தை சரிசெய்வது குறித்து சர்வதேச சமூகத்திடம் ஒரு தீவிரத் தன்மை இல்லாததையே இது காட்டுகிறது.
தொடர்ந்து ஏற்படும் தீவிரமான காட்டுத் தீ பேரழிவுகளும், பவளப் பாறையில் நிகழக் கூடிய பாதிப்புகளும் நமக்கு சில உண்மைகளை உணர்த்துகின்றன. ஆபத்து என்பது எதிர்வருகிற காலத்தில் இல்லை. நிகழ்காலத்திலேயே வந்துவிட்டது.
இதற்கு இடையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்பாரா மழை, வெள்ளம், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல்கள் காரணமாக அப்பாவி மக்கள் இறப்பு அதிகரித்து வருகிறது. இத்தோடு நில்லாமல் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து பொருளாதாரம் மற்றும் உயிர் அளவில் பெறும் சேதங்களை விளைவிக்கின்றன.
அணுசக்தி நீக்கம்
மெக்சிகோ பாலைவனத்தில் ஜூலை 16, 1945-ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்விலிருந்துதான் மனிதகுலம் தன்னைத்தானே அழிக்கக்கூடிய அபாயகரமான பாதையில் முதல் அடியை எடுத்து வைத்தது.
பனிப்போர் காலம் முடிவுக்கு வந்த 1991-ம் ஆண்டில் நள்ளிரவிற்கு முன் 17 நிமிடங்களாக (11:43 PM) வைக்கப்பட்ட ஊழி கடிகாரத்தை (Doomsday Clock) கடந்த 2020 ஆம் ஆண்டு வெறும் 100 நொடிகளாகக் குறைத்து (11:58:20 PM) அணு விஞ்ஞானிகள் உலக அழிவை குறித்து எச்சரித்தனர்.
ஊழிக் கடிகாரம் குறித்து தெரிந்து கொள்ள: அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)
ஆனாலும் 13,500 அணு ஆயுதங்கள் மீது பிரதான சக்தி வாய்ந்த நாடுகள் அமர்ந்துள்ளனர். (அவற்றில் 90 சதவீதத்திற்கும் மேலாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா நாட்டில் மட்டும் உள்ளன). இந்த உலகில் உயிரினங்கள் வசிக்க முடியாததாக மாற்ற இந்த ஆயுதங்களே போதுமானவை ஆகும்.
அணு ஆயுதக் குறைப்பை நோக்கிய உடனடி நகர்வுகள் உலகத்தின் நிகழ்ச்சி நிரலாக கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நாளான ஆகஸ்ட் 6 என்பது ஒரு போராட்ட நாளாக மாற வேண்டும்.
சமூக சமநிலையின்மையை பெரிதாக்கும் தாராளவாத கொள்கை
மேற்குலக நாடுகளில் தாராளவாத கொள்கைகளை முன்னிறுத்தி அரசு லாபம் கொழிக்கும் எந்திரங்களாகவும், சமூக நல அமைப்புகள் தனியார் நிறுவனங்களின் பண்டங்களாக மாற்றபட்டுவிட்டன. மேலும் தொழிலாளர் வர்க்கம் அமைப்பாய் திரளவதற்கான வாய்ப்புகளற்று இருக்கும் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி பணம்படைத்தவர்கள் முன்மொழியும் கொள்கைகளால் பட்டினியில் வாடும் மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிகரிப்பது கண்முன்னே நிகழ்ந்து வருகிறது.
அமெரிக்கா தனது ஆயுத பலத்தை அதிகரிக்க கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர்கள் வரை செலவு செய்யும். அதேசமயம் இந்த தொகையில் ஒரு பகுதியைக் கூட கல்வி, சுகாதாரம் போன்ற பரந்துபட்ட பொது மக்கள் நன்மைக்கு செலவிடத் தயங்குகிறது. இது ஒரு நாட்டை அவற்றின் அரசியலமைப்புகளில் எழுதப்பட்ட சொற்களால் தீர்மானிக்கக்காமல் அந்த நாட்டின் வரவு செலவுத் திட்டங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பெரும்பாலான நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் ஆயுத ஒப்பந்தங்களால் தீர்மானிக்கப்படக்கூடியதாக மாறி வருகிறது.
இது போன்ற ஆயுத பலத்தால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் அதிகாரத்தை செலுத்த பாலஸ்தீன், ஏமன் போன்ற நாட்டு மக்கள் உரிமைகள் அற்றவர்களாகவே வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் ஒருபடி மேலே சென்று இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கியூபா, ஈரான், வெனிசுலா உள்ளிட்ட 30 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா சட்டவிரோத பொருளாதாரத் தடைகளைப் விதித்து நெருக்கடியை ஏற்படுத்தி வருவதையும் நாம் பார்த்துவருகிறோம்.
அணுசக்தி மற்றும் காலநிலை மாற்றப் பேரழிவு போன்ற இரு அச்சுறுத்தல்களுகிடையில் புதிய தாராளவாத கொள்கையின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க தற்போதைய தலைமுறையினர் குறுகிய கால பிரச்சினைக்களை மட்டும் கவனத்தில் எடுத்து கொண்டு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தான கேள்விகளை மறந்து விடுகின்றனர்.
உலகளாவிய இந்த பிரச்சினைகளுக்கு உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. 1960களில் மூன்றாம் உலக நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாகவே உலகத்தின் வல்லரசுகள் அணு ஆயுதக் குறைப்பு குறித்தான Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நாம் இந்த 2021-ம் ஆண்டில் உடனடியாக கவனம் செலுத்தி விரைந்து செயல்பட ஒரு வலுவான சர்வதேச கூட்டிணைவை கட்டி எழுப்ப வேண்டியது அவசியமாகிறது.
நோம் சாம்ஸ்கி அரிசோனா பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மிக சமீபத்தில் காலநிலை நெருக்கடி மற்றும் உலகளாவிய பசுமைக்கான புதிய ஒப்பந்தங்கள்: கிரகத்தை காப்பதற்கான அரசியல் பொருளாதாரம் எனும் நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள விஜய் பிரசாத் குளோபிரோட்டர் இணையதளத்தில் தலைமை ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். இடதுசாரி புத்தகங்களின் தலைமை ஆசிரியராகவும், ட்ரைகோன்டினென்டல் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் உள்ளார். சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் நிதி ஆய்வுகளுக்கான சோங்யாங் இன்ஸ்டிடியூட்டில் மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார்.