நாட்டின் முன்னணி ஐ.ஐ.டி-களில் பி.எச்.டி-க்கான விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது.
சட்டப்பூர்வமாக இடஒதுக்கீடு இருந்தபோதும் பொதுப்பிரிவினரோடு ஒப்பிடும் போது இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் பட்டியல் பிரிவு பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் குறைந்த அளவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஐ.ஐ.டி மாணவர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அதிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் தகவல்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிந்த விவரங்கள் ஆகியவற்றை ஒப்பிடுவதன் மூலம் இதனைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் உயர்கல்வி அமைச்சகம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தும் ஐ.ஐ.டி மற்றும் பி.எச்.டி படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டைக் கடைபிடிக்காதது தெரிவந்துள்ளது.
பொதுப்பிரிவினருக்கு வழங்கப்பட்ட 65.6% இடங்கள்
2015 முதல் 2019-ம் ஆண்டுக்கான மொத்த மாணவர் சேர்க்கையில் பழங்குடியினர் 2.1% சதவீதமும், பட்டியல் பிரிவினர் 9.1% சதவீதமும் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளனர். ஆனால் சட்டத்தின்படி பழங்குடியினருக்கு 7.5% சதவீதமும், பட்டியல் பிரிவினருக்கு 15% சதவீதமும் இடஒதுக்கீடு இருக்கிறது.
அதேபோல 27% இடஒதுக்கீடு இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர்களில் 23.2% மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 65.6% சதவீதம் இடங்கள் பொதுப்பிரிவில் இருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது .
வெறும் 238 பட்டியல் பிரிவு மாணவர்கள்
இந்தியாவில் உள்ள சிறந்த ஐ.ஐ.டி-களில் முக்கியமானதாக விளங்கும் டெல்லி, மெட்ராஸ், பம்பாய் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி-களில் பொதுப்பிரிவு மாணவர்களை சேர்க்கும் அளவுக்கு இடஒதுக்கீட்டில் வரும் பிரிவினர் சேர்க்கப்படவில்லை.
மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையையும், ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையையும் பிரிவு வாரியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது 11,019 பட்டியல் பிரிவு விண்ணப்பதாரர்களில் 238 பேரும், 1,809 பழங்குடி விண்ணப்பதாரர்களில் 40 பேரும் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.
அனைத்து ஆண்டுகளிலும் பொதுப்பிரிவினர் எண்ணிக்கை அபரிவிதமான அதிகமாகவும், இடஒதுக்கீட்டிற்கு உரிய பிரிவினர் தங்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டை விட குறைவாகவுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐ.ஐ.டி டெல்லி
உதாரணமாக ஐ.ஐ.டி டெல்லியில், அனைத்து விண்ணப்பதாரர்களில் 63.3% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் அனுமதிக்கப்பட்டவர்களில் 76.3% பேர் உள்ளனர்.
இதற்கு மாறாக, ஓபிசி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுகளில் விண்ணப்பித்தவர்களின் சதவீதம் 22.9%, 11.9% மற்றும் 1.9%. ஆனால் அனுமதிக்கப்படுபவர்கள் சதவீதம் முறையே 17%, 6% மற்றும் 0.7% எனும் அளவிற்கு குறைவாக உள்ளது.
ஐ.ஐ.டி டெல்லியில் உள்ள இ.இ.இ.யில் ஜனவரி 2019 சேர்க்கைப் பட்டியலை பார்க்கும் போது இன்னும் கூடுதலான தகவல்கள் தெரியவருகிறது. 195 எஸ்.சி விண்ணப்பதாரர்களில், மூன்று பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். (ஏற்றுக்கொள்ளும் விகிதம் 1.5%). 30 எஸ்.டி விண்ணப்பதாரர்களிடமிருந்து யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக 1,071 பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களிடமிருந்து 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஐ.ஐ.டி கான்பூர்
ஐ.ஐ.டி கான்பூரில் உள்ள இ.இ.இ.யில் ஜூலை 2016 சேர்க்கை சுழற்சியில் 396 பொதுப்பிரிவினர் விண்ணப்பதாரர்களிடமிருந்து (7.3%) 29 ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதே நேரத்தில் 46 எஸ்.சி விண்ணப்பதாரர்களில் ஒருவர் கூட தேர்வு செய்யப்பபடவில்லை. ஐ.ஐ.டி கான்பூரில் உள்ள இ.இ.இ.யில் ஜூலை 2016 சேர்க்கை சுழற்சியில் 396 பொதுப் பிரிவினர் விண்ணப்பதாரர்களிடமிருந்து (7.3%) 29 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதே நேரத்தில் 46 எஸ்சி விண்ணப்பதாரர்களில் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.
ஐ.ஐ.டி குவஹாத்தி
ஓரளவு அதிக எண்ணிக்கையில் இடஒதுக்கீட்டு பிரிவினர் சேர்க்கப்பட்டுள்ள ஒரே பெரிய ஐ.ஐ.டி-யான ஐ.ஐ.டி குவஹாத்தியில் கூட இடஒதுக்கீடு சொல்லும் சரியான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி வேட்பாளர்களின் சதவீதம் முறையே 21%, 12.3% மற்றும் 5.5% தான் என்பது பெரும் சோகமே.
ஐ.ஐ.டி சென்னை
ஐ.ஐ.டி சென்னையிலும் பி.எச்.டி அனுமதியைப் பொறுத்தவரை பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிக மோசமாகவே உள்ளது.
2015 முதல் 2019 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் 54,462 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2,195 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் எஸ்.சி மாணவர்கள் 7.6% மற்றும் எஸ்.டி.மாணவர்கள் வெறும் 1.2% மட்டுமே என்று தரவுகள் காட்டுகின்றன. இடஒதுக்கீட்டு கொள்கையில் 15% இடங்கள் பட்டியல் சாதியினருக்கும் 7.5% இடங்கள் பழங்குடிகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.
மேலும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் விகிதத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வு இருப்பதையும் தரவுகள் காட்டுகிறது.
விண்ணப்பங்கள் ஏற்றக் கொள்ளப்பட்ட சதவீதம்
இது ஒவ்வொரு 100 விண்ணப்பதாரர்களுக்கும் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போது, ஐ.ஐ.டி களை பொறுத்தவரை வரலாற்று ரீதியாக சலுகை பெற்ற முன்னேறிய சமூகங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட பொதுப்பிரிவு மாணவர்கள் 4.4% சதவீதம் பேர் ஏற்றுக்கொள்ளும் விகிதத்தைக் கொண்டிருந்தனர். இது பட்டியல் சாதிக்கு 2.9% மற்றும் பழங்குடிகளுக்கு 2.7% சதவீதமாகவும் இருக்கிறது.
5,855 எஸ்சி விண்ணப்பதாரர்களில் 167 பேரும், 991 எஸ்டி விண்ணப்பதாரர்களில் 27 பேரும் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு நூற்றாண்டு போராட்டத்திற்குப் பிறகும் இன்னும் உயர் கல்விக்கான சமூகநீதியானது, பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுவிட்ட பின்னும் மறுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்பதே நிதர்சனம்
தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.