விவசாய போராட்டம்

திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்பு

புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 80 நாட்களாக விவசாயிகள் டெல்லியின் சிங்கு எல்லையில் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகிறார்கள். ஜனவரி மாதத்தின் போது விவசாய சட்டங்களை அமல்படுத்துவதனை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கும் பரிந்துரையை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால் விவசாயிகள் அதனை நிராகரித்துள்ளனர்.

தற்போது கோடைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் கோதுமை, அரிசி போன்ற ரேபி பருவ பயிர்களின் அறுவடைக் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறுவடைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், தற்போதைக்கு வீடு திரும்பப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

கமிட்டிகள் உருவாக்கம்

”நாங்கள் கிராமம் கிராமமாக 10 முதல் 15 டிராக்டர்களில் வந்திருக்கிறோம். எங்களுக்குள் கமிட்டிகளை உருவாக்கியிருக்கிறோம். யாரெல்லாம் ஊரில் இல்லையோ, அவர்களது பயிர்களை வேறொருவர் பார்த்துக் கொள்வதை கமிட்டி உறுதி செய்யும்” என்று விவசாயி குர்ப்ரீத் சிங் நியூஸ் லாண்டரி ஊடகத்தில் தெரிவித்துள்ளார். 

குர்ப்ரீத் சிங்கிற்கு 14 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. நீங்கள் ஏன் போராடுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, அவர் கார்ப்பரேட்டுகள் உள்ளே நுழைந்து தங்களது நிலங்களை ஒப்பந்த விவசாயத்திற்கு எடுத்துக் கொள்வது குறித்த தனது அச்சத்தினை  வெளிப்படுத்தினார். 

குர்ப்ரீத் சிங்

உள்ளூர் மண்டிகளே நம்பத் தகுந்தவை

அது குறித்து அவர் பேசும்போது, “உதாரணத்திற்கு ஜியோவை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் எல்லோருக்கும் இணைப்பை இலவசமாக வழங்கினார்கள். பிறகு தற்போது 600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான் இப்போது 22 டன் கோதுமையை ஒரு குவிண்டாலுக்கு 2000 ரூபாய் என்ற விலையில் ஆண்டிற்கு 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். உள்ளூர் மண்டிகளே எங்களுக்கு நம்பத் தகுந்தவை” என்று தெரிவித்தார். 

ஒரு வருடம் வரையில் கூட தங்கியிருப்போம்

6 மாத காலத்திற்கு தேவையான முழுமையான ரேசன் பொருட்களுடன் தாங்கள் வந்திருப்பதாகவும், சிங்கு எல்லையில் ஒரு வருடம் வரையில் கூட தங்கியிருப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் குர்ப்ரீத் சிங்குடன் வந்திருந்த மற்றொரு விவசாயி தெரிவித்துள்ளார். 

சுழற்சி முறையில் ஊர்களுக்கு சென்று வரும் விவசாயிகள்

ஜங்வாத் சிங் என்ற 23 வயது விவசாயி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்திலிருந்து ஜனவரி 23-ம் தேதி டெல்லியில் டிக்ரி எல்லைப் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறார். ஜனவரி 26 அன்று நடந்த வன்முறையில் அவர் மீது கண்ணீர் புகைக் குண்டு தாக்கியதில் காயமடைந்திருக்கிறார். அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. 

இடது காலில் கண்ணீர் புகை குண்டு ஏற்படுத்திய காயத்துடன் ஜங்வாத் சிங்

அவருக்கு 10 ஏக்கர் நிலத்தில் கோதுமையும், அரிசியும் பயிர் வைத்துள்ளார். சுழற்சி முறையில் அறுவடைக்கு வீட்டிற்கு சென்று வர இருப்பதாக அவர் தெரிவித்தார். 

பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலும் சுழற்சி முறையில் விவசாயிகள் அறுவடைக்கு சென்று வர இருப்பதை குறிப்பிட்டார். ஒவ்வொரு முறை போராட்டக் களத்திலிருந்து ஒரு விவசாயக் குழு ஊர்களுக்கு புறப்படும் போதும், புதிய விவசாயிகள் குழுவானது ஊரிலிருந்து புறப்பட்டு போராட்டக் களத்திற்கு வந்து சேர்ந்து விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மண்டி முறை ஒழிக்கப்பட்ட பீகார் விவசாயிகளின் நிலை

10 நாட்களுக்கு முன்பு பஞ்சாபிலிருந்து போராட்டக் களத்திற்கு வந்த சட்னம் சிங் என்ற விவசாயி, ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ளார். பீகார் விவசாயிகளின் மோசமான நிலையைப் பார்த்த பிறகு தான் இந்த போராட்டத்தை ஆதரித்திருப்பதாகத் தெரிவித்தார். பீகார் மாநிலம் மண்டி முறை ஒழிக்கப்பட்ட மாநிலமாகும். 

பீகாரில் சோளமானது ஒரு குவிண்டால் 500 அல்லது 600 ரூபாய் அளவிற்குத் தான் விற்கப்படுகிறது. அதனால்தான் பீகாரைச் சேர்ந்த ஏராளமானோர் விவசாயக் கூலிகளாக வேலை செய்வதற்கு பஞ்சாபிற்கு புலம்பெயர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். 

எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு ஆண்கள் இருக்கிறோம். இரண்டு பேர் சிங்கு எல்லைக்கு வரும்போது, மீதம் இருவர் வீட்டில் இருந்து பயிர்களைப் பார்த்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார். 

பயிர்கள் வீணானாலும் திரும்பப் போவதில்லை

ஒன்று அல்லது இரண்டு பருவத்திற்கு பயிர்கள் வீணாகிப் போனாலும், நாங்கள் திரும்பிப் போக மாட்டோம் என்று மோகா மாவட்டத்திலிருந்து வந்த ஹர்தேவ் சிங் தெரிவிக்கிறார். ஹர்தேவ் தனது டிராக்டரை ஒரு கேரவனாக மாற்றி வைத்திருக்கிறார். 20 பேருக்கு அது கூடாரமாக பயன்படுகிறது. 15 பேர் இரவில் உறங்குகையில் 5 பேர் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். பகத்சிங், உத்தம் சிங், கர்தார் சிங் ஆகியோரின் படங்களை தனது டிராக்டரில் மாட்டி வைத்துள்ளார் ஹர்தேவ் சிங்.

நன்றி: NewsLaundry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *