ஆங் சாங் சூகி

மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்

கடந்த நவம்பர் மாதம் மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் ஆங்சாங் சூகி தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி ஆட்சியமைத்த புதிய அரசை ராணுவம் ஏற்க மறுத்தது.

இந்த நிலையில்தான் கடந்த 1-ம் தேதி ஆங் சாங் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ஆங் சாங் சூகி, அதிபர் வின் மைன்ட் மற்றும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் இந்தப் போக்கைக் கண்டித்து கடந்த சில நாட்களாக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக ஆங் சாங் சூகியின் ஜனநாயகக் கட்சி தொண்டர்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு

மியான்மரின் முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் வந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களை ஒடுக்க ஆயுதமேந்திய போர் வாகனங்களை சாலையில் குவித்து வருகிறது.  மியான்மாரின் வடக்கு பகுதியில் ஒன்பது நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

குறிப்பாக கச்சின் மாகாணத்தில் மித்கினா என்கிற நகரத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல ராணுவம் பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கைதுசெய்து வருகிறது.

20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை 

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருபவர்கள் ராணுவத்தினரை தடுத்தால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று மியான்மரின் இராணுவம் எச்சரித்துள்ளது. இராணுவ ஆட்சிக்குழு தொடர்ச்சியான பல சட்ட மாற்றங்களை அறிவித்துள்ளது. 

எழுத்துப் பூர்வமாகவோ அல்லது பேச்சின் வடிவிலே ராணுவத்தின்மீது வெறுப்பை அல்லது அவமதிப்பையோ தூண்டினால் அவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும். மேலும் அவர்கள் நீண்ட சிறைதண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது. 

ஆங் சாங் சூகி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை பாதுகாக்க வேண்டும் மற்றும் மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற முழுக்கத்துடன் லட்சக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர். 

தொடர்ந்து எச்சரிக்கும் ராணுவம்

இன்று இராணுவ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்புப் படையினர் தங்கள் கடமைகளை செய்வதைத் தடுக்கும் நபர்கள் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும், அதே நேரத்தில் பொதுவில் அச்சம் அல்லது அமைதியின்மையைத் தூண்டுவதாகக் கண்டறியப்பட்டவர்கள் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் என்றும் அறிவித்துள்ளது. 

ஏழு முக்கிய எதிர்கட்சி பிரச்சாரகர்களுக்கு கடந்த சனிக்கிழமை ராணுவக் குழு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ராணுவ கைதுகளில் இருந்து தப்பிப்பவர்களுக்கு பொதுமக்கள் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று ராணும் எச்சரித்துள்ளது. 

24 மணி நேரத்திற்கும் மேலாக மக்களை தடுத்துவைக்க மற்றும்  தனியார் சொத்துக்களை முடக்க பல்வேறு சட்டங்களை ராணுவக் குழு நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவிற்கு தேவைப்படும் அனைத்து நடைமுறைகளையும் இராணுவம் சனிக்கிழமை நிறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *