ந.சிவராஜ்

பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் படிப்பதற்கு வழிவகுத்த தலைவர் சிவராஜ்

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் ந.சிவராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

சென்னை மாநகராட்சியின் முதல் தலித் மேயர் ந.சிவராஜ் அவர்களின் பிறந்த நாள் இன்று. 1892-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் நாள் சென்னையில் பிறந்தார்.

இராயப்பேட்டையிலிருந்த வெஸ்லி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சிவராஜ், வெஸ்லி கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பையும், சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் படித்தார். 1917-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் 1925-ல் விரிவுரையாளரானவர் பின்னர் பதவி உயர்வு பெற்று பேராசிரியராகவும்   பணியாற்றினார். 

சிவராஜ் 1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி மீனாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மீனாம்பாள் சிவராஜ் தமிழகத்தில் பெண் விடுதலைக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவர். மேலும் திராவிட இயக்கத்தின் முன்னணி பெண் தலைவராவார். 

சிவராஜ் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும், நீதிக்கட்சி மாநாடுகளிலும் தொடர்ந்து உரையாற்றினார்.

பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரான வழக்கு

சென்னை பச்சையப்பன் கல்லூரியில்1927-ம் ஆண்டு வரை ஒரு ஆதிதிராவிட மாணவரைக்கூட சேர்க்கவில்லை. இதனை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் மீது வழக்கு தொடுத்து, அவ்வழக்கில் வெற்றியும் பெற்று 1928-ம் ஆண்டு முதல் ஆதிதிராவிட மாணவர்கள் கல்லூரியில் படிக்க வழிவகுத்தவர்.

சென்னை சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிவராஜ் அவர்கள் முத்தையா முதலியார் அமல்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவம், இனாம் நில ஒழிப்பு மசோதா உள்ளிட்டவற்றை ஆதரித்து முக்கியப் பங்காற்றினார். 

சட்டசபையில் எழுப்பிய உரிமைக் குரல்

ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக் கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்டசபையில் பேசினார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கவும் உழைத்தவர் சிவராஜ். சிவராஜ் அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் வெள்ளையன்குப்பத்தைச் சேர்ந்த படையாட்சி சமூகத்தினர்  குற்றப் பரம்பரை பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என்ற ஒத்திவைப்பு தீர்மானத்தை 7.8.1935 அன்று சட்டமன்றத்தில் கொண்டுவந்தார்.

1937-ம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சரானவுடன் சிவராஜ் சட்டக்கல்லூரி பேராசிரியர் பதவியைவிட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டார்.

1939-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, பெரியார் மற்றும் சிவராஜ் உள்ளிட்டோர் இணைந்து காங்கிரஸ் கட்சி குறித்தான ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். எதிர்க்கட்சிகள் முறையாக மதிக்கப்படுவதில்லை என்றும், காங்கிரசில் இல்லாதவர்கள் நாட்டிற்கு துரோகிகளைப் போல சித்தரிக்கப்படுவதாகவும், தென்னிந்தியாவில் உள்ள பிராமணரல்லாத சமூகத்தினர் அனைவரும் இணைந்து அரசியல் சாசன ரீதியான பாதுகாப்பு அம்சங்களைக் கோர வேண்டிய தேவைகளை தற்போதைய சூழ்நிலை உருவாக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.

ஜாதி ஆதிக்கத்திற்காக ஆங்கிலேய அரசை எதிர்த்தவர்

இரட்டைமலை சீனிவாசன் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் இணைந்து  அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942-ம் ஆண்டு முதல் தலைவராக இருந்தார். ஆங்கில அரசு 1946-ல் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் எதனையும் செவி சாய்க்கவில்லை என்று ஆங்கிலேய அரசை எதிர்த்து அவர்கள் கொடுத்த திவான் பகதூர் என்ற பட்டத்தையும் துறந்தார்.

முதல் வரிசையில் அம்பேத்கருக்கு அருகில் (இடப்பக்கமிருந்து) அமர்ந்திருப்பவர் சிவராஜ்

ஜாதி ஆதிக்கத்தையும், ஆங்கிலயேர் ஆதிக்கத்தையும் மக்களிடம்  அம்பலப்படுத்த 1946-ல் ’ஜெய் பீம்’ என்ற ஆங்கில வார இதழைத் துவக்கி நடத்தினார். 1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தி பல மாணவர் விடுதிகளையும் உருவாக்கினார். 

1957-ம் ஆண்டு இந்திய குடியரசு கட்சியின் சார்பாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட்டியல் சமூக மக்கள் முன்னேற பொதுவாக கல்வி அறிவும், குறிப்பாக சட்ட அறிவும் இருக்க வேண்டுமென்று போராடியவர். 1964-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் போராட்டத்திற்கு சென்ற இடத்தில் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *