கொரோனா தடுப்பூசி

சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தனக்கு அந்த தடுப்பூசியின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் அப்படி கூறியதற்காக தடுப்பூச்சியைத் தயாரித்த சீரம் இந்திய நிறுவனம்(Serum Institute of India), அவருக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பாதிப்பு இருப்பதாக சொன்னவரை மிரட்டுவதா? மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி

”ஒரு தன்னார்வலர் தடுப்பூசியால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பினைக் குறித்து பேசியதற்காக அவரை மிரட்டுவது உலகத்திலேயே முதல்முறையாக இங்குதான் நடைபெற்றிருக்கிறது. அவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு ஒன்றரை மாத காலமாக தடுப்பூசி நிறுவனமானது இதனை தெரியப்படுத்தாமல், ஒன்றரை மாதம் கழித்து மத்திய மருந்து தர நிறுவனத்திடம் தெரியப்படுத்தி விட்டதாக சொல்கிறது. ஒருவேளை பாதிக்கப்பட்ட தன்னார்வலர் அவர் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் இருந்திருந்தால் இவை வெளியில் வராமலேயே போயிருக்கும்” என்று இந்தியன் ஜார்னல் ஆஃப் மெடிக்கல் எதிக்ஸ்-ன் ஆசிரியர் அமர் ஜெசானி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

”தனக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்த அடுத்த நாளிலேயே அத்தடுப்பூசியின் சோதனையானது நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அடுத்த வார காலத்திற்குள் அப்பிரச்சினைக்கான காரணம் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை உண்டாக்கியிருக்க முடியும். அதைவிட்டுவிட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை வெளியில் சொன்ன தன்னார்வலர் மீது வழக்கு போடுவது ஒரு தடுப்பூசி தயாரிப்பின் சரியான வழிமுறை அல்ல” என்று வைராலஜி மருத்துவரான ஜேகப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிழை இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்த அஸ்ட்ராசெனேகா நிறுவனம்

இந்த தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனங்களில் ஒன்றான அஸ்ட்ராசெனெகா நிறுவனம் கடந்த நவம்பர் 27-ம் தேதி தனது தடுப்பூசி உருவாக்கிய முறையில் பிழை இருப்பதை ஒப்புக்கொண்டு மீண்டும் உலகளவில் பரிசோதனையை தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சொரியட் தெரிவித்திருந்தார். 

இதன் காரணமாக உலகளவில் அஸ்ட்ராசெனெகா நிறுவனம் முன்னர் வெளியிட்டு வந்த ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த சூழலில், தற்போது இந்தியாவில் பொதுவெளியில் தனக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து தெரிவித்த தன்னார்வலருக்கு எதிராக சீரம் இந்திய நிறுவனம் 100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு போட்டது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சீரம் இந்தியா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயலுக்கு மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் ICMR மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவை தொடர்ச்சியாக அமைதி காத்தே வருகின்றன.

‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி 

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சீரம் இந்திய நிறுவனம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா(AstraZeneca) ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் ‘கோவிஷீல்ட்’ எனும் பெயரில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தது.

உலகளவில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் ஒன்பது நிறுவனங்களில் அஸ்ட்ராசெனெகா ஒன்றாகும். AZD1222 எனப்படும் சீரம் இந்திய நிறுவனம் தயாரித்த தடுப்பூசி மனிதர்களுக்கான பரிசோதனை கட்டத்தில் இருந்து வந்தது. பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பல்வேறு கட்டங்களில்(phase 1,2,3) பரிசோதனை நடைபெற்று வந்தது. 

பாதிக்கப்பட்ட தன்னார்வலர்

இந்த தடுப்பூசி பரிசோதனையில் சென்னையைச் சேர்ந்த 40 வயதான வணிக ஆலோசகர் ஒருவரும் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இவருக்கு சென்னையில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் பரிசோதனைக்காக சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி ஒரு டோஸ் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இவருக்கு கடுமையான தலைவலி , எரிச்சல் மாற்று நரம்பியல் குறைபாடு உள்ளிட்ட பல பாதகமான எதிர்வினையைத் தூண்டியதோடு மூளை வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தடுப்பூசி பரிசோதனையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் நவம்பர் 21 அன்று வழக்கு தொடர்ந்தார். 

“தான் அதை(தடுப்பூசி) எடுத்துக் கொண்டபின், தடுப்பூசி பாதுகாப்பாக இல்லை என்பதை தெளிவாக நிரூபிக்கிறது. மேலும் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி தனக்கு ஏற்படுத்திய பாதகமான விளைவை மறைக்கவே முயற்சிக்கின்றனர்” எனவும் அந்த வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.

இப்பரிசோதனையின் விளைவாக அவர் உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருவதாக தெரிவித்து இருந்தார். மேலும் தனக்கு தேவையான மருத்துவ செலவுகளை மேற்கொள்ள 5 கோடி ரூபாயை சீரம் இந்திய நிறுவனம் வழங்க வேண்டும் என அந்நிறுவனத்திற்கு மும்பை நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதனை மறுத்துள்ள சீரம் இந்திய நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ள நபர் உள்நோக்கத்துடன் நிறுவனத்தின் பெயரைக் கெடுக்கும் விதமாக பொது வெளியில் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டி உள்ளது. 

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் நிறுவனங்களின் நெறிமுறைக் குழுவும் இந்த வழக்கு தொடர்பாக தற்போது ஆய்வு செய்து வருகின்றன.

பரிசோதனை முடிவதற்கு முன்பே கோடிகளில் ஒப்பந்தமாகும் தடுப்பூசி

சில வாரங்களுக்கு முன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனையின் தரவுகள் வெளிவந்தது. அதில் வயதானவர்கள் மற்றும் நோய் தொற்றுக்கு அதித ஆபத்தில் உள்ளவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பிணை உருவாக்குவதாக கூறப்பட்டது. மேலும் தடுப்பூசிக்கான  மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிறிஸ்துமசுக்குப் பின் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் கடந்த வாரம் பேட்டியளித்த சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, “எங்களுக்கு 100 மில்லியன் [10 கோடி] அளவுகள் ஆர்டர் கிடைத்துள்ளதாக” தெரிவித்தார்.

ஏற்கனவே 100 மில்லியன் டோஸ் அளவிற்கு இந்நிறுவனத்தின் தடுப்பூசிக்களை பெற இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *