மெட்ராஸ் டே சிறப்புப் பதிவு
போர்ச்சுகீசியரின் வணிகத் தளமான மைலாப்பூருக்கும், டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பழவேற்காட்டிற்கும் இடையில், கூவம் ஆற்றை ஒட்டி வெங்கடபதி நாயக்கரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பகுதியை பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி வணிக நோக்கத்திற்காக வாங்கி கட்டிய கோட்டைதான் ஜார்ஜ் கோட்டை.
1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாள் அந்த கோட்டை கட்டப்பட்ட நாள்தான் மெட்ராஸ் டே (Madras Day) என்று கூறப்படுகிறது. கோட்டைக்கு வடக்கில் உள்ள பகுதி வெங்கடபதி நாயக்கரின் தந்தையான சென்னப்ப நாயக்கர் நினைவாக சென்னைப்பட்டனம் என்று அழைக்கபட்டது.
கூவம் ஆறும், அடையாறு ஆறும் வணிகத்திற்கான நீர்வழிப் போக்குவரத்திற்கு பெரும் உதவியாகவும் இருந்ததால் ஆங்கிலேயர்களின் வணிகம் பல்கிப் பெருகியது. வணிகம் பெருக உள்ளூர் வணிகக் குழுக்களோடு நெருங்கிய தொடர்பைப் பேணி அவர்களின் வணிக வலையை ஆங்கிலேயர் நன்றாக பயன்படுத்தி வளர்ந்தனர்.
1693-ம் ஆண்டில், உள்ளூர் நவாப்புகளால் தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் நகரங்கள் ஆங்கிலேய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அடுத்ததாக 1708-ம் ஆண்டு திருவொற்றியூர், வியாசர்பாடி, கத்திவாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் சாத்தாங்காடு ஆகிய பகுதிகளும் ஆங்கிலேயருக்கு இலவசப் பரிசாக வழங்கப்பட்டன. 1735-ம் ஆண்டில், சிந்தாதிரிப்பேட்டையும், 1742-ம் ஆண்டில் வேப்பேரி, பெரம்பூர் மற்றும் பெரியமேடு ஆகிய பகுதிகளும் ஆங்கிலேயருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனை மையப்படுத்தி உருவான சென்னைப்பட்டினத்தை விடவும் பழமையானது, பின்நாட்களில் இந்த மாநகரோடு தன்னை இணைத்துக் கொண்ட திருவான்மியூர், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, திருமயிலை ஆகிய வழிபாட்டுத் தளங்கள். இவை தேவாரத்தில் பாடப்பட்டுள்ள திருத்தலங்கள் ஆகும்.
ஆர்மீனியத் தெருவும் பவளக்காரத் தெருவும் பல்வேறு வணிக குழுக்களின் வாழ்விடமாக இருந்தது. தங்கச் சாலையில் பழங்காலத்தில் இருந்த யூதர்களின் பெரியதொரு மயானத்தில் உள்ள ஒருசில கல்லறைகள், கடந்த காலத்தில் ஹிப்ருக்களின் குடியிருப்புகளும் கூட சென்னையில் இருந்ததற்கு சாட்சியாக இருக்கின்றன.
உலகம் முழுவதும் லேவாதவி வணிகத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியாவில் பவளங்களை வாங்கி விற்கும் பணியில் இருந்தபோது, நாட்டுகோட்டை செட்டியார்களோடு வணிகப் போட்டியிட முடியாமல் இடம் பெயர்ந்ததாகவும் வரலாறு சொல்கிறது.
சென்னை நகரத்தை நிர்வாகம் செய்ய நகராண்மைக் கழகம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. நகரத்தந்தை பதவியும் உருவாக்கப்பட்டு ஒரு புதிய நிரவாகம் அதனை நடத்தியது. நகராண்மைக் கழகமானது, 1687 டிசம்பர் 30 அன்று இரண்டாம் ஜேம்ஸ் அரசனின் அனுமதியுடன் தொடங்கப்பட்டது. முதல் நகரத் தந்தையாக நத்தானியேல் இக்கின்ஸன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1919-ம் ஆண்டு வந்த சட்டத் திருத்ததால் நகராண்மை கழகத் தலைவராக சர்.பிட்டி.தியாகராய செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகரத் தந்தை இவர் தான்.
பிரிட்டிஷ் ஆட்சியின் வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ந்தது சென்னை. அதில் முக்கியமாக துறைமுகம் சார்ந்த வணிக மையமாக ஒரு புறமும், புனித ஜார்ஜ் கோட்டை சார்ந்த அரசியல் அதிகார மையமாக இன்னொரு புறமும் என இரண்டு வழிகளில் சென்னை முக்கியமானதாக மாறியது.
பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டையும், கடலோர ஆந்திரத்தையும், கர்நாடகா மற்றும் கேரளத்தில் சில பகுதிகளையும் உள்ளடக்கிய மாகாணம் உருவானபோது சென்னை அதற்கு தலைநகரானது.
சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழர்களின் பெரும் போராட்டத்தினால், சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.