சென்னை டிராம் வண்டிகள்

மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்

மெட்ராஸ் டே சிறப்புப் பதிவு

1892-ம் ஆண்டில் அன்றைய மெட்ராஸ் நகரத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக டிராம் வண்டிகள் இயக்குவதற்கான தடங்கள் அமைக்கும் பணியினை மெட்ராஸ் எலக்ட்ரிக்கல் சிஸ்டம் நிறுவனம் துவங்கியது. 1895-ம் ஆண்டில் டிராம் வண்டிகள் மெட்ராசின் சாலைகளில் பயணிக்கத் தொடங்கின. 

மணிக்கு 7 மைல் வேகத்தில் மெதுவாக செல்லும் இந்த ட்ராம் வண்டிகள் ஒடிக் கொண்டிருக்கும்போதேகூட பயணிகள் இறங்கவும், ஏறவும் முடியும். முதலில் குதிரைகள் மூலமாக இழுக்கும் டிராம் வண்டிகள் தான் நடைமுறையில் இருந்தன. மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை.

1891-ம் ஆண்டு மெட்ராசிற்கு எடுத்துவரப்பட்ட முன்னோட்ட டிராம் வண்டி
1891-ம் ஆண்டு மெட்ராசின் சாலைகளில் சோதனைக்காக இயக்கிப் பார்க்கபட்ட முன்மாதிரி ட்ராம் வண்டிகள்

ஆரம்பத்தில் சில நாட்கள் இலவசமாக இயக்கப்பட்ட இந்த வண்டிகள் பின்னர் கட்டண முறை கொண்டுவரப்பட்டது. அப்போது இயக்கப்பட்ட பேருந்துகளை விட டிராம்களில் பயணிப்பது விலை குறைவானதாக இருந்தால், டிராம்கள் மக்களிடையே வரவேற்பை பெற ஆரம்பித்தன. 

24 கிலோ மீட்டர் தூரத்திற்கு போடப்பட்டிருந்த தடங்களில் 97 டிராம்கள் வரை பயணித்தன. இரண்டு வகையான டிராம் வண்டிகள் இருந்தன. 50 அடி நீளம் கொண்ட பெரிய வண்டிகள், 35 அடி நீளம் கொண்ட சிறிய வண்டிகள். டிராம் வண்டியின் உள்ளே இருபுறமும் அமருவதற்கு மரத்தாலான பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. 60 பேர் வரை அந்த பெஞ்சுகளில் அமர முடியும். நடுவிலுள்ள பகுதிகளில் நின்று கொண்டு பயணிக்கலாம். மொத்தமாக 150 பேர் வரை ஒரு டிராமில் பயணிக்க முடியும்.

ட்ராம் வண்டிகளில் ஏறும் மக்கள்

பாரிஸ் கார்னர், சென்ட்ரல், லஸ் கார்னர், சாந்தோம் சர்ச், மவுண்ட் ரோடு, புரசைவாக்கம், இன்றைய பூந்தமல்லி சாலை என பல பகுதிகளை டிராம்கள் இணைத்தன. ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் வரையில் இந்த டிராம் வண்டிகளில் பயணித்ததாக சொல்லப்படுகிறது. 

மெட்ராஸ் மவுன்ட் ரோடில் பயணித்த டிராம் – 1940

சாலையில் தண்டவாளங்கள் மாதிரியான இரும்பு உலோகங்கள் பொருத்தப்பட்டு, டிராம் வண்டியின் மேற்புரத்தில் ஒரு உலோகக் கம்பி பொருத்தப்பட்டு அதன் உச்சியில் இருக்கும் சக்கரம் மின்சார வயர்களை தொடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். சத்தமில்லாமல் பயணிக்கும் இந்த டிராம் வண்டிகள் வருவதை சாலையில் எதிரில் செல்வோருக்கு அறிவிக்கும் வண்ணம் உலோகத்தாலான மணிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

முக்கால் அணா, ஒரு அணா (ஒரு ரூபாயில் 1/16 பங்கு) என்று பயணச் சீட்டுகளின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. மாதத்திற்கு 6 ரூபாய் என்ற கட்டணத்தில் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளும் நடைமுறையில் இருந்தன. 

சில ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனம் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குவதாக அறிவித்தது. 1940-களின் காலக்கட்டத்தில் ஒரு மாதத்திற்கு 50,000 ரூபாய் வரை நட்டம் ஏற்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்தது. மேலும் அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தியது இன்னும் சிக்கல்களை அதிகப்படுத்தியது. 

1950-ம் ஆண்டு மெட்ராசின் சைனா பஜார் சாலையில் டிராம் வண்டிகள்

இதனால் 300 பணியாளர்களை பணிநீக்கம் செய்திட ட்ராம் நிறுவனம் முடிவெடுத்தது. அதற்கு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. நிறுவனம் 1953-ம் ஆண்டு ட்ராம் இயக்கத்தினை நிறுத்த முடிவெடுத்த போது போராட்டங்கள் பெரிதாக ஆரம்பித்தன. எழும்பூர் மற்றும் ராயப்பேட்டையிலிருந்து டிராம் ஷெட்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் பல கூட்டங்களை நடத்தி, தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வண்ணம் டிராம் சேவைகளை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்று தெரிவித்தன. ஆனால் அரசு அக்கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. 1651 தொழிலாளர்களின் வேலை பறிபோனது. 

டிராம் சேவை நிறுத்தப்பட்ட பிறகு, டிராம் பயணித்த வழித்தடங்களில் 50 புதிய பேருந்துகள் அறிவிக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதல்முறையாக மெட்ராசில் கொண்டுவரப்பட்ட டிராம் சேவை 58 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்று மக்களின் பொருளாதார வாழ்வின் ஒரு அங்கமாய் மாறியிருந்த டிராம் சேவைகளுக்கு 1953 ஏப்ரல் 12 அன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

அதற்குப் பிறகு டிராம் பயணிக்க போடப்பட்டிருந்த மின்சார வயர்களும், தண்டவாளங்களும் நீக்கப்பட்டு, சாலைகள் மாற்றியமைக்கப்பட்டன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *