மனித உடலும் நோய் எதிர்ப்பு சக்தியும்

நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2

இக்கட்டுரையின் முதல் பாகத்தினை இந்த இணைப்பில் படிக்கலாம். நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1

முதல் பாகத்தின் தொடர்ச்சியே இது.

நம் உடலானது நலமுடன் இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற உடல் நம்முடன் பேசும் மொழிகள் பசி, தாகம், தூக்கம், ஓய்வு ஆகியவையே.

தாகம்

எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்துவது என்று மருத்துவரைக் கேட்பதை விட சிறந்தது உடலைக் கேட்பது. உடலின் நீர் தேவையை உடலானது தாகத்தின் மூலமாகக் கேட்கிறது. தாகம் இருக்கும் அளவிற்கு தண்ணீர் குடித்தால் போதும். உடல் தேவையான ஆறலை நீரிலிருந்து பெறுகிறது. காலையில் எழுந்தவுடன் தாகமற்ற நிலையில் லிட்டர் கணக்கில் வலுக்கட்டாயமாக குடிப்பது உடலுக்கு நன்மை பயக்காது. மாறாக தாகமற்ற நிலையில் குடிக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்ற உடல் உறுப்புகள் அதிகப்படியான வேலை செய்து சோர்வடையும். நீண்ட நேரம்  தாகமில்லாத போது அல்லது சிறுநீர் கழித்த பிறகு சிறிதளவு நீர் அருந்தலாம் தவறில்லை. ஆனால் தாகமற்ற நிலையில் அதிகப்படியான நீர் அறுந்துவது தவறு. முடிந்த அளவிற்கு உதடுகள் படும்படி வாய் வைத்து குடிப்பது நல்லது. உதடுகள் படாமல் நேரடியாக வாய்க்குள் ஊற்றுவதால் உதடுகள் மூலமாக உடல் உள்ளுறுப்பான மண்ணீரலுக்கு கிடைக்க வேண்டிய ஆற்றல்  முழுமையாக கிடைப்பதில்லை.

தண்ணீரின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, அரசு தண்ணீரை தனியார்மயமாக்காமல் மக்களுக்கு எளிமையாக கிடைக்கும்படி குடியிருப்புப் பகுதி, பொது இடங்களில் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டும். அனைத்து கிராம மக்களுக்கும் குடி தண்ணீர் கிடைத்திடச் செய்ய வேண்டும்.

ஓய்வு மற்றும் தூக்கம்

தொடர்ந்து இயங்கும் உடலானது இழந்த ஆற்றலை மீட்டெடுக்க ஓய்வையும் தூக்கத்தையும் அறிவிக்கிறது. பெரும்பாலான ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக நகரத்தில் வாழும் உழைக்கும் மக்களுக்கு இவை இரண்டையும் கடைபிடிப்பது கடினமாகவே உள்ளது. வறுமையின் காரணமாக தொடர் உடல் உழைப்பு இரவுப்பணி உடல் தொந்தரவுகள் உருவாக வழிவகுக்கிறது.

உலகத் தொழிலாளர்கள் கடுமையாகப் போராடி பெற்றுத்தந்த 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம் என்ற உரிமை இன்று பறிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் லாப நோக்கம் மக்களின் தூக்கத்தையும் ஓய்வையும் விலை பேசியுள்ளது.

உடல் சோர்வடையும் போது நிச்சயம் ஓய்வெடுக்க வேண்டும். இது உடல் உறுப்புகள் தொடர்ந்து சீராக இயங்க வழி வகுக்கிறது.

பொதுவாக பெரும்பாலான நிறுவனங்களில் இரவுப் பணிக்கு சற்றே கூடுதலான ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் ஊதியமானது நம் ஆரோக்கியத்தை நாம் விற்றதற்காக நிறுவனங்கள் கொடுத்த விலை. ஆனால் அந்த கூடுதல் ஊதியமானது நமது ஆரோக்கியத்தை திரும்பத் தராது.

2017-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது உயிர்க்கடிகாரம் எனும் கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்ட்டது. அதாவது உடல் உறுப்புகள் இயங்கும் நேரம், ஹார்மோன்கள் சுரக்கும் நேரம், ரத்த அழுத்தம், தூக்கம், பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உடல் இயங்கும் விதம் உள்ளிட்டவைகளை விவரிக்கிறது இந்த ஆய்வு.

தமிழர்களின் வாழ்வியலோடு இருந்து வந்தவை இவை. அதிகாலை எழும் நேரம் முதல் இரவு தூங்கும் நேரம் வரை நம் முன்னோர்கள் செய்ய வேண்டியவை கூடாதவைகள் என வகுத்து கொடுத்திருக்கிறார்கள்.அதில் முக்கியமானது தூக்கம்

இரவு தூங்கும்போது நம் உடலில் என்ன நடக்கிறது?

தூங்குவதற்கு சரியான நேரம் என்பது இரவு மட்டுமே. இரவு தூக்கத்திற்கு பதிலாக எத்தனை பகல்கள் தூங்கினாலும் இரவு தூக்கத்தை ஈடு கட்ட முடியாது. உடல் உள்ளுறுப்புகள் எந்நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முழு வீச்சில் செயல்படுகிறது. நம் உடலில் நச்சுக்களை நீக்கும் வேலைகளை செய்வது கல்லீரல். கல்லீரலின் இயக்கமானது இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை முழு வீச்சில் செயல்படுகிறது. நாம் உண்ணும் உணவு நீர் ஆகியவற்றில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கும் வேலையை நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்குமிந்த நேரத்தில் கல்லீரல் செய்கிறது. இரவு நேரத்தில் தூங்காமல் இருக்கும்போது கல்லீரலானது முழுவதுமாக நச்சு உள்ளிட்ட கழிவுகளை நீக்கும் வேலைகளினை செய்ய முடிவதில்லை. ஐம்பூத தத்துவத்தின்படி தசை, தசை நார்களை பரமாரிப்பது கல்லீரல். எனவேதான் இரவு தூங்காமல் கண் விழிக்கும்போது பகலில் உடல் சோர்வு ஏற்பட்டு புத்துணர்வு அற்ற நிலையை உணர்கிறோம்.

கல்லீரல் இரவு நேரத்தில் நச்சு நீக்கும் பணியை முழு அளவில் செய்வதுபோல மூளைப் பகுதியில் உள்ள பீனியல் எனும் சுரப்பி மெலடோனின் ஹார்மோனை சுரக்கிறது. இது சுரக்க வேண்டுமென்றால் இரவு 11 மணிக்கு நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும். பெரும்பாலான ஹார்மோன் தொடர்பான தொந்தரவுகளுக்கு இரவு தூக்கம் தவிர்ப்பது முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் ஒவ்வொரு ஹார்மோனும் மற்றொரு ஹார்மோனை கட்டுப்படுத்துவதாகவோ தூண்டுவதாகவோ உள்ளது. உடலில் எந்த உறுப்பும் ஹார்மோனும் தனித்து இயங்குவதில்லை. ஒருங்கிணைந்தே தம் பணிகளை செய்கிறது. மெலோடனின் சுரப்பது தடைபடுவதன் காரணமாக பிற ஹார்மோன்களின் செயல்பாடும் தடைபடுகிறது.

தொடர்ந்து இரவுத்தூக்கத்தை புறக்கணிப்பதால் கல்லீரல் செய்யும் உடலின் நச்சு நீக்க நடவடிக்கைகள் தடைபட்டு, ஹார்மோன்கள் சுரப்பது தடைபட்டு உடலில் பல நோய்கள் தோன்றுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. உடல் அசதியாக இருத்தல், சுருசுருப்பாக இயங்கமுடியாத நிலை, செரிமான சிக்கல், மலச்சிக்கல், உடல் சூடு அதிகமாதல், மந்தநிலை உள்ளிட்ட பல உடல் தொந்தரவுகள் ஏற்படுகிறது. முதல் நாள் இரவு தூங்கும் நேரத்தைப் பொருத்துதான் அதிகாலை எழுவதும், அதைத் தொடர்ந்து பசிக்கின்ற நேரம் பசியின் அளவு உள்ளிட்டவை உடலினால் அறிவிக்கப்படுகிறது.

நாம் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கு முன்னதாக தற்காலிக தூக்கத்தில் இருக்க வேண்டும். நாம் தூக்கத்திற்காக படுக்கைக்கு சென்று கண் மூடியதிலிருந்து ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை நேரம் எடுக்கும் இந்த நேரமானது ஓவ்வொருவரின் உடல் தன்மைக்கேற்ப மாறுபடும். சிலர் படுத்த அரை மணி நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வார்கள். சிலருக்கு ஒரு மணி நேரம் ஆகலாம். உடல் தொந்தரவுகள் உள்ளவர்கள் குறைந்தது 9.30 மணிக்குள்ளாக படுக்கைக்கு செல்ல வேண்டும். அப்போது தான் 11 மணிக்கு ஆழ்ந்த தூக்கம் ஏற்படும்.

தூக்கத்தை தவிர்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து சித்தர் பாடல்

நித்திரை அடங்கிப் போக நிகழ்ந்திடும் கருமம் கேளாய்

 நித்தமும் தலைக்கனப்பு நின்ற கண் நோதல் ஆகி

 சித்தத்தில் செவிடு உண்டாகி தெளிவறப் பேசல் அன்றி 

வைத்தது ஒர் உறக்கம் தன்னில் உண்டாம் ஓர் வாயுவின் கூறே

கழிவு நீக்கமும் நோயும்

உடலுக்கு எதிரான எந்த ஒரு பொருளும் உடலுக்குள் செல்லும்போதும், உடலில் கழிவுகள் தேங்கும் போதும் உடலானது அதை வெளியேற்றும் வேலையில் ஈடுபடுகிறது. அப்போது நமக்கு ஏற்படும் தொந்தரவுகளை நோயாக கருதுகிறோம். உதாரணத்திற்கு இயல்பிற்கு மாறான வகையில் அதிகப்படியான தூசியோ அல்லது உடலுக்கு ஒவ்வாத பொருளோ சுவாசக்காற்று வழியாக மூக்கினுள் நுழையும் போது, தும்மல் மூலமாக உடல் வெளியேற்றுகிறது. ஒவ்வாத அல்லது கெட்டுப்போன உணவை உண்ணும்போது வாந்தியாகவோ அல்லது வயிற்றுப்போக்காகவோ உடல் வெளியேற்றுகிறது. இதே போல சிறுநீர் மூலமாகவும், மலத்தின் மூலமாகவும், வியர்வை மூலமாகவும், காய்ச்சல், சளி, தும்மல், வலி மூலமாகவும் உடலானது நமக்குள் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. 

உடல்.கழிவுகள் நீங்க அனுமதிக்காமல் அடக்குவது உடலுக்கு பெரும் நோய்களை ஏற்படுத்தும். சாதாரண கழிவுகளை அடக்கும் விதமாக ரசாயன மருந்துகளை எடுக்கும் போது தேக்கமுற்ற ரசாயன கழிவுகளாக மாறி உடலுக்கு கடினமான நோய்களை பிற்காலங்களில் ஏற்படுத்துகிறது. இந்த கழிவுநீக்க நடவடிக்கையின் போது எளிமையான முறையில் வெளியேற்றுவதற்கு உதவும் விதமாக நமது மரபுவழி மருத்துவமான சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறைகள் தேவைப்படுகிறது. மரபு வழி மருத்துவங்கள் இது மாதிரியான உடல் வெளியேற்றும் கழிவுகளை அடக்குவதில்லை.மாறாக உடலின் செயல்பாட்டோடு இணைந்து கழிவு நீக்க வேலையில் ஈடுபடுகிறது.

நாம் செய்யும் இயற்கை விதி மீறல்கள் காரணமாக நோய் ஏற்பட்டிருக்கும் நேரங்களில், உடலானது தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இந்த குணமாக்கும் பணியின்போது உடலில் பெரும்பாலான் ஆற்றல் எதிர்ப்பாற்றலாக மாற்றப்படுகிறது. அந்த நேரங்களில் பசி உணர்வானது ஏற்படுவதில்லை. இது போன்ற நோய் தொந்தரவு காலங்களில் பசியற்ற தன்மை ஏற்படுகிற போது உணவு எடுக்காமல் பசி உணர்வு வரும் வரை காத்திருக்க வேண்டும். லேசான பசி போன்ற உணர்வு ஏற்படுமானால் நீர் தன்மை உள்ள பழங்களை மட்டும் உண்ணும்போது உடலின் பெரும்பாலான ஆற்றல் செரிமானத்திற்காக செலவிடப்படாமல் குணமாக்கும் வேலையை செய்கிறது.

உற்ற சுரத்திற்கும்
உறுதியாம் வாய்வுக்கும்
அற்றே வருமட்டும்
அன்னத்தை காட்டாதே
– திருமூலர்

எனவே நோயின்றி வாழ உடல் எனும் முதல் மருத்துவரின் பசி,தாகம்,ஓய்வு,தூக்கம் போன்ற  அறிவிப்புகளை கடைபிடிப்போம்.

”ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவரது பணியை அவர் செய்திட அனுமதிப்பதே நமது கடமையாகும். தானாக குணமாகும் இயற்கையான ஆற்றல்தான் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் மிகச்சிறந்த ஆற்றலாகும். அதுதான் நம்மை குணப்படுத்துகிறது.” – நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *