வெள்ளி கோள் நாசா புகைப்படம்

வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான குறியீடு; விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

வீனஸ் என்று அழைக்கப்படும் வெள்ளி கிரகத்தின் மேகங்களில் பாஸ்பைன் வாயு கண்டறியப்பட்டிருப்பதால், அது அங்கு உயிர்கள் இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தில் கண்டறியப்பட்டிருக்கும் இந்த வாயுவானது ஒளி வேதியியல் அல்லது புவி வேதியியல் முறைகள் நடைபெறுவதன் குறியீடாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

பாஸ்பைன் என்பது பூண்டு அல்லது அழுகிய மீனின் வாசம் கொண்ட, நிறமற்ற ஒரு வாயுவாகும். இந்த வாயு பூமியில் பெரும்பாலும் காற்றில்லா உயிரியல் மூலங்களின் ( anaerobic biological sources) வாயிலாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வாயு குறைந்த அளவில் கரிமப் பொருட்களின் முறிவிலிருந்தும் உற்பத்தியாகிறது. 

வெள்ளி என்பது சூரியனிலிருந்து இரண்டாவதாக காணப்படும் கிரகமாகும். அதன் தரைப்பரப்பு 464 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டதாகும். பூமியைக் காட்டிலும் 92 மடங்கு அதிகமான அழுத்தத்தினைக் கொண்டதாகும். வெள்ளியின் தரைப் பரப்பானது உயிர்கள் வாழ்வதற்கு விரோதமான சூழலைக் கொண்டிருந்தாலும், அதன் மேற்பரப்பின் சூழலானது அதாவது தரைமட்டத்திலிருந்து 53 முதல் 62 கி.மீ உயரத்தின் அளவிலான பகுதி மிதமான வெப்பநிலையைக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 டிகிரிக்கு வந்துவிடுகிறது.

நேச்சர் அஸ்ட்ரானமி (இயற்கை வானியல்) இதழ் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, மேகங்களைச் சுற்றியுள்ள தன்மை அமிலத்தன்மை மிக அதிகமானதாகும். இத்தகைய சூழலில் பாஸ்பைன் வாயுவானது எளிதில் அழிந்துவிடக் கூடியது என்று தெரிவிக்கிறது. 

கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் (cardiff university) ஜேன் க்ரீவ்ஸ் மற்றும் சக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மாக்ஸ்வெல் தொலைநோக்கியின் மூலமாக வெள்ளி கோளை ஆய்வு செய்த போது 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பாஸ்பைனுக்கு ஒத்த நிறமாலை வரிசைகளை கண்டறிந்தனர். வெள்ளியின் மேகங்களில் ஒரு பில்லியனுக்கு 20 பாகங்கள் பாஸ்பைன் இருப்பதாகவும் கண்டறிந்தனர். 

கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி
ஒரு பில்லியனுக்கு 20 பாகங்கள் பாஸ்பைன்

பாஸ்பைன் வாயு எந்தெந்த வழிகளில் எல்லாம் உருவாகியிருக்கலாம் என்பதனை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கிரகத்தின் தரைப்பரப்பு, மைக்ரோமீட்டராய்டுகள், மின்னல்கள், மேகங்களுக்குள் நடக்கும் வேதியியல் விளைவுகள் என பலவற்றையும் ஆராய்ந்துள்ளனர்..

ஆனால் பாஸ்பைன் வாயு எந்த மூலத்திலிருந்து உருவாகியது என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. 

ஆனால், பாஸ்பைனின் இருப்பதை வைத்து மட்டும் நுண்ணுயிர்கள் ஒரு பகுதியில் வாழ்வதற்கான சான்றாகக் கொள்ள முடியாது. அது அந்த கிரகத்தில் நடக்கும் நமக்கு தெரியாத புவியியல் அல்லது வேதியியல் நடைமுறைகளின் வாயிலாகவும் நிகழலாம் என்று தெரிவித்தனர். பாஸ்பைன் வாயு எங்கிருந்து உற்பத்தியாகிறது எனும் மூலத்தினை கண்டறிய மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று தெரிவித்தனர்.

அந்த ஆய்வு குறித்து அவர்கள் எழுதும்போது, PH3 என்று அழைக்கப்படும் பாஸ்பைன் வாயுவானது இதுவரை கண்டறியப்படாத ஒளிவேதியியல் விளைவுகளாலோ அல்லது புவிவேதியியல் விளைவுகளாலோ உருவாகி இருக்கலாம். அல்லது பூமியில் உருவாவதைப் போன்று, உயிர்களின் இருப்பிலிருந்து உயிரி உற்பத்தியின் வாயிலாகவும் உருவாகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 

இதுவரை நமக்கு தெரிந்த எந்த வேதியியல் செயல்முறையும் பாஸ்பைன் உருவாக்கத்தின் காரணத்தினை விளக்க முடியாவிட்டால், வெள்ளி கிரகத்தின் சூழல் நமக்கு இதுவரை தெரியாத வேறான ஒன்றாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது. அது ஏதேனும் ஒரு புவிவேதி நிகழ்வாகவோ, ஒளிவேதி நிகழ்வாகவோ அல்லது ஒரு உயிரினம் வாழ்வதன் காரணமாகவோ கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 

ஆனால் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதற்கான அத்தியாவசிய சூழல் வெள்ளி கிரகத்தின் மேகங்களில் இல்லாமல், அதிக வேதித் தன்மையுடன் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ராயல் இன்ஸ்ட்டிடூஷன் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் விஞ்ஞானி ஆலன் ட்ஃப்பி இதனைப் பற்றி குறிப்பிடுபோது, பூமியைத் தாண்டி வேறொரு இடத்தில் உயிர்கள் இருப்பதற்கான குறியீடாக இருக்கிறது என்றும், அதுவும் நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு பகுதியிலிருந்து அந்த குறியீடு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

வெள்ளியின் தரைப்பரப்பு நரகத் தன்மையுடையது. ஈயம் கூட உருகும் அளவுக்கு வெப்பமானது. ஆனால் மேகங்களுக்கிடையில் செல்லும் போது வெப்பம் குறைகிறது. பாஸ்பைன் கண்டுபிடிக்கப்பட்ட 50 கி.மீ அளவில் வெப்பநிலையும், அழுத்தமும் பூமியைப் போலவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

ஆனால் மேகங்களுக்கிடையில் உள்ள சல்ஃபூயூரிக் அமிலம் பாஸ்பைனின் மூலக்கூறுகளை உடைத்திருக்க வேண்டும். அப்படி நடைபெறாததால் பாஸ்பைன் எப்படி உருவானது என்பதை கண்டுபிடிப்பதில் முடிவு தெரியாமல் இருக்கிறது. 

பூமியில் பாஸ்பைன் என்பது உயிர்களோடு தொடர்புடையதாக இருப்பதால்தான், வெள்ளியிலும் உயிர்கள் இருக்கலாமோ என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. ஆனால் எதையும் உறுதி செய்வதற்கு முன்னர் பாஸ்பைன் உருவாவதற்கான உயிரியல் அல்லாத அனைத்து முறைகளையும் நாம் அங்கு சோதித்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *