தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாக நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
சங்கரலிங்கனார், தென் தமிழ்நாட்டின் வணிகக் களமான விருதுநகரை அடுத்த மண்மலைமேடு எனும் கிராமத்தில் 1895-ம் ஆண்டு பெரிய கருப்பசாமி – வள்ளியம்மை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சங்கரலிங்கனார் 1900-ம் ஆண்டு திருமால் நாடார் ஓலைப் பள்ளியிலும், 1901-ம் ஆண்டு சுவீடிஷ் மிஷன் ஞானமாணிக்கம் உபதேசியார் பள்ளியிலும், 1902-ல் சச்திரிய வித்யா கல்விச் சாலையிலும் பயின்றார். இவரது கல்வியானது எட்டாம் வகுப்புடன் முடிவடைந்தது. 1908-ம் ஆண்டு ஞானாதிநாத நாயனார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். அப்போது பெருந்தலைவர் காமராசர் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படித்தார்.
வ.உ.சி உரையைக் கேட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908-ம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார்.
விருதுநகரில் ‘பங்கஜ விலாச வித்தயாபிவர்த்திச் சங்கம்’ என்னும் அமைப்பை 1914-ம் ஆண்டு ஏற்படுத்தி, பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் செயல்பட்டார். சங்கரலிங்கனார் அச்சங்கத்தின் செயலாளராக பணியாற்றினார்.
‘மாதர் கடமை’ எனும் நூலை எழுதி 1920-ம் ஆண்டு வெளியிட்டார். அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடினார்.
கதர் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு
அதன் பின் அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென 1922-ம் ஆண்டு முதல் முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாக செய்ததைப் பாராட்டி 26.04.1926 அன்று சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது.
சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராக தந்தை பெரியாரும், செயலாளராக எஸ்.இராமநாதனும் தொண்டாற்றினர். சங்கரலிங்கனார் விருதுநகருக்கு தந்தை பெரியாரை 1924-ம் ஆண்டு அழைத்து த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசக சாலை சார்பாக பொதுக் கூட்டம் நடத்தினார்.
கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார்.
12 கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் துவங்கினார்
காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 சூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்.
- தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும்.
- சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும்.
- அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்.
- தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்.
- இந்தியா முழுவதும் மதுவிலக்கு.
என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன், சூலை 27-ம் தேதி சூலக்கரைமேட்டில் தனி ஆளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.
அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால், பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.
ஒழிந்தே தீரும் காங்கிரஸ் கட்சி என்று எழுதினார்
தான் உண்ணாவிரதம் இருந்த நாட்களில் சங்கரலிங்கனார் மூன்று கடிதங்களை எழுதினார். அதில் ஒன்றில் “பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார். 76 நாட்கள் வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. தமிழகத்தில் அப்போதிருந்த தின இதழ்களில் இதுகுறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருந்தன.
காங்கிரஸ்காரரான அவர் தனது உடலை பொதுவுடமைக் கட்சியிடம் ஒப்படைக்கச் சொன்னார்
அக்டோபர் 13, 1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது. அப்போது சென்னை மாகாணத்தில் இந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். காங்கிரஸ்காரராக வாழ்ந்த சங்கிரலிங்கனார் அவர்கள், அக்கட்சி செய்த துரோகத்தின் காரணமாக தன் உடலை பொதுவுடமைக் கட்சியிடம் ஒப்படைத்து, இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தார் . அதையொட்டி அவரை அடக்கம் செய்வதில் துணை நின்றவர்கள் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள். கம்யூனிஸ்டு தலைவர் கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகியம்மா ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பதிவேட்டில் கையெழுத்திட்டு உடலைப் பெற்றனர்.
மருத்துவமனையிலிருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரை தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 1956 அக்டோபர் 21-ம் நாள் தமிழ்நாடு முழுவதும் இரங்கல் கூட்டம் நடத்தியது திமுக.
அண்ணா தலைமையிலான திமுக அரசு 1967-ம் ஆண்டு பதவி ஏற்றதும் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இவரின் கோரிக்கையை பெரியார் கண்டுகொள்ளவில்லையாமே? உண்மையா?