கரூரில் காவல் நிலையத்துக்கு அருகிலேயே இளைஞர் ஒருவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம் வஞ்சியம்மன் கோவில் வீதியில் 23 வயதான பொறியியல் பட்டதாரி ஹரிஹரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஹரிஹரன் அதே பகுதியில் ‘லெஜெண்ட்ஸ் பியூட்டி’ என்ற பெயரில் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
அதே பகுதியில் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்த இரும்பு வியாபாரியான வேலன் என்பவரின் மகள் மீனா மற்றும் ஹரிஹரன் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மீனா மற்றும் ஹரிஹரன் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆதலால் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
பட்டப்பகலில் பொதுஇடத்தில் அடித்தே கொன்ற சாதி வெறி கும்பல்
இதனையடுத்து கடந்த 6ம் தேதி புதன்கிழமை பிற்பகலில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோயிலுக்கு வருமாறு ஹரிஹரனை அவரது காதலி செல்போன் மூலம் அழைத்ததால் ஹரிஹரன் அங்கு சென்றுள்ளார். அங்கு காதலியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, 12-15 பேர் கொண்ட கும்பல் வந்து சரமாரியாக வெட்டி கல்லால் அடித்து ஹரிஹரனை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளனர். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹரிஹரன் அதிகபடியான இரத்த கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில்தான் கரூர் நகர காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடந்தேறியுள்ள இந்த ஆணவப் படுகொலை மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
வீட்டிற்கே சென்று மிரட்டிய கும்பல்
இந்த படுகொலை தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கள ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ள தகவலின்படி,
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீனாவின் தந்தை வேலன், பெரியப்பா சங்கர், சித்தப்பா முத்து, தாய்மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகிய 5 நபர்கள் ஜெயராமன் வீட்டிற்கு சென்று, “உங்கள் மகனை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள். நாவிதர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். உங்கள் சாதி என்ன, எங்கள் சாதி என்ன? உங்கள் மகன் எங்கள் வீட்டு பெண்ணிடம் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை அறிந்த மீனா அலைபேசி மூலமாக ஹரிஹரனின் தாயார் சித்ராவை தொடர்பு கொண்டு “உங்கள் மகனை நான் காதலிக்கிறேன் என்ன நடந்தாலும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.
200 மீட்டரில் காவல் நிலையம் இருந்தும் வராத போலிஸ்
இந்த நிலையில் 06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்தேறியுள்ளதாக தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் நேரம் ஹரிஹரன் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
“சுமார் 200 மீட்டர் இடைவெளியில் காவல்நிலையம் இருக்கிறது. அந்த பகுதியில் போலீசாரும் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். இரண்டே நிமிடத்தில் அந்த பகுதிக்கு காவல்துறை வந்து அந்த இளைஞரை மீட்டிருக்க முடியும் ஆனால் காவல்துறை இதை செய்யத் தவறியுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்”.
அந்த பகுதியில் இச்சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் சுமார் 12 முதல் 15 நபர்கள் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்ததாகவும், ஆனால் மீனாவின் குடும்பத்தினரை மட்டும் குற்றவாளிகளாக வழக்கில் போலீசார் சேர்த்து பிற உடன் வந்த கும்பலை வழக்கில் சேர்க்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மனிதத் தன்மையற்ற முறையில் கொலை செய்த சாதிவெறி பிடித்த கும்பல்
மேலும் “முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா” என்று கூறிக்கொண்டே 12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைத்தாகவும், வயிற்றில் கற்களை கொண்டு அடித்து காயப்படுத்தி தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக கள ஆய்வின் போது தெரிவித்துள்ளதாக கதிர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை மீனாவின் சித்தப்பா சங்கர் (50), தாய்மாமன்கள் கார்த்திகேயன்(40), வெள்ளைச்சாமி (38) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் தந்தை வேலன், சித்தப்பா முத்து உள்ளிட்டவர்களை போலீஸார் தேடிவருவதாக தெரிவிக்கின்றன.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் காதலிக்கும் இளைஞரை பொது இடத்திற்கு வரவைத்து கல்லால் அடித்துக் கொல்வது என்பது நாகரீகமற்ற படுபாதக செயல் என்றும் கூறி வேதனை தெரிவித்தார். தமிழ்நாட்டில் இதுபோன்ற கலாச்சாரம் துவங்கியிருப்பது பெரும் ஆபத்து என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஆணவக் கொலைகளை தடுக்க ஆர்வம் காட்டாத தமிழக அரசு
இதுபோன்ற வன்முறை கும்பல் தாக்குதல் மற்றும் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தமிழகம் மிகப்பெரிய கலவர பூமியாக மாறும் என்றும் எவிடேன்ஸ் கதிர் எச்சரித்தார்.
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 9 ஆணவக்கொலைகள் மற்றும் சாதிய மரணங்கள் நடந்துள்ளதுள்ளதாகவும், ஆனால் தமிழக அரசு இவற்றைத் தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணவக்கொலையை தடுப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசுக்கும் 20 வழிகாட்டுதல் நெறிமுறைகளை தீர்ப்பாக வழங்கி நடைமுறைப்படுத்த வலியுறுத்தியிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது என கூறி சாடினார்.
மேலும் கள ஆய்வு முடிந்து திரும்புகையில் ஹரிஹரனின் உறவினர் ஒருவர் “நாட்டில் உள்ள மக்களையெல்லாம் நாங்கள் அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாதி எங்களை அசிங்கப்படுத்துகிறது, அழிக்கிறது, கொலை செய்கிறது” என கூறி வருந்தினார்.