இணையதள முடக்கம்

2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்பு

8,927 மணிநேரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், இந்திய அரசு இணையப் பயன்பாட்டை வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக தடைசெய்துள்ளது. 2019-ம் ஆண்டில்  விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் தொடர்ந்துள்ளது. 

இணைய முடக்கம் மற்றும் இணையத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக இந்திய ஒன்றியத்திற்கு 2.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ .20,000 கோடி) செலவு ஏற்பட்டுள்ளது. இது இந்திய ஒன்றியத்திற்கு 2020-ம் ஆண்டில் குடிமக்களின் இணைய செயல்பாட்டைத் தடுத்த தெற்காசியாவின் 21 நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

இணையதள முடக்கம் காரணமாக உலகளவில் ஏற்பட்ட மொத்த இழப்பீடான 4 பில்லியன் டாலர்களில் இந்திய ஒன்றியத்தின் பங்கு முக்கால் பாகமாகும். 

டாப் 10 VPN நடத்திய ஆய்வு

இது 2019-ம் ஆண்டின் இழப்பீடோடு ஒப்பிடும்போது இரு மடங்கிற்கும் அதிகமாகும் என்று இங்கிலாந்தை மையமாக கொண்ட டிஜிட்டல் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இணையதள பயன்பாட்டின் கட்டுபாடுகளுக்கு பெயர்போன சில நாடுகள் அதாவது சீனா மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் பொதுவில் கிடைக்கக்கூடிய திறந்த மூல தகவல்கள் மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட இணையம் மற்றும் சமூக ஊடக முடக்கங்களின் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த ஆய்வை மேற்கொண்டனர். 

டாப் 10 வி.பி.என்(Top10VPN) வெளியிட்டுள்ள உலகலாவிய இணைய முடக்கத்தால் ஏற்பட்ட இழப்பின் (Global Cost of Internet) அறிக்கையின்படி, முதலில் 2019-ம் ஆண்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் தொடர்ந்ததால் மொத்தமாக 8,927 மணிநேர இணையதள முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட அலைவரிசையின் காரணமாக, இந்திய ஓன்றியமானது வேறு எந்த நாட்டையும் விட இணையதள பயன்பாட்டை அதிகமாகவே தடை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இருட்டடிப்பு/முடக்கத்தின் விலை

காஷ்மீரின் சிறப்பு தன்னாட்சி நிலையை 2019-ம் ஆண்டில் ஒன்றிய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து காஷ்மீரில் இணையதள பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட அலைவரிசை கட்டுப்பாடுகள், ஊரடங்கிற்குப் பிறகும் மருந்துகள், வணிகம் மற்றும் பள்ளிகூடங்களை பெரிதும் பாதித்தது.

இது தொடர்பாக இந்திய ஒன்றிய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளிக்கவில்லை.

உலக வங்கி, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் டெல்லியை மையமாகக் கொண்ட மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (Software Freedom Law Center) உள்ளிட்ட குழுக்களின் தரவுகளை பயன்படுத்தி இணைய முடக்கத்தின் விலை(இழப்பீடு) கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணக்கீடுகளில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அடங்கும்.

இந்தியாவைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக இணையதள பயன்பாட்டை தடை செய்த நாடுகள்

இணையதளத்தை அதிகம் தடை செய்த 15 நாடுகள்/ நன்றி – Top10 vpn
  • ஐரோப்பிய ஒன்றிய நாடான பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் விதிக்கப்பட்ட 218 மணிநேர இணைய முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் 7.9 மில்லியன் மக்களை பாதித்ததோடு 336.4 மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியது. இந்தியாவுக்குப் பிறகு இணைய முடக்கத்தினால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பெலாரஸ் அறியப்படுகிறது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்தில், பெலாரஸில் தனியார் இணைய சேவைகளின் தேவை 650% அதிகரித்ததாக அதன் அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
  • இதே போல் சின் மற்றும் ரக்கைன் பிராந்தியங்களில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் காரணமாக மியான்மர் 2020-ம் ஆண்டில் 5,160 மணி நேரங்களுக்கு இணைய முடக்கம் செய்துள்ளது. 
  • அதை அடுத்து யேமன் 912 மணிநேர இணைய முடகத்திற்கு 237 மில்லியனை டாலர்களை இழந்துள்ளது.

உலக அளவில் ஏற்பட்ட பாதிப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவு செய்யப்பட்ட இணைய முடக்கமானது மொத்தமாக 27,165 மணிநேரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது பெரிய முடக்கம்/இருட்டடிப்பாகும். இது முந்தைய ஆண்டை விட 49% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 268 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்ட கட்டுபாடுகளில் சுமார் 42% மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையது, இதில் ஒன்று கூடலுக்கான சுதந்திரம், தேர்தலில் தலையீடு மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான மீறல்கள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *