தந்தை பெரியார்

பெரியார் காங்கிரசை தூக்கி எறிந்தது ஏன்??

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals

காங்கிரஸ் எதிர்ப்பும், காந்தி எதிர்ப்பும், பார்ப்பனிய எதிர்ப்பும்  தன் வேலைத்திட்டத்தின் முழுநேர வேலை என்று  அறிவித்து வேலை செய்த பெரியார், பார்ப்பனர்களையும் பாப்பனியத்தையும் எதிர்ப்பது என்று பெரியார் எடுத்த கொள்கை முடிவானது அவர் நீண்ட பயணத்தில் வந்தடைந்த இடம். அது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல.

1908 முதல் காங்கிரஸ் மாநாடுகளுக்கு பெரியார் பங்கேற்றிருக்கிறார். 1917இல் நீதிக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரசில் உள்ள பார்ப்பனர் அல்லாதவர்கள் இணைந்து சென்னை மாகாண சங்கம் என்பதை உருவாக்குகிறார்கள்.

இதில் கேசவபிள்ளை, வ.உ.சி, வரதராஜ நாயுடு, சர்க்கரைச் செட்டியார் உள்ளிட்ட முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள்.

1919-ல் சென்னை மாகாண சங்கம் தனது இரண்டாவது மாநாட்டை நடத்துகிறது. இரண்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை முன்வைத்து மிகத்தீவிரமான தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள்.

காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் சென்னை மாகாண சங்கமானது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை மிகத் தீவிரமாக முன்னெடுப்பதைக் கண்டு அதனை முடக்க நினைக்கிறார்கள். அதன்பின் சென்னை மாகாண சங்கத்தின் கூட்டங்கள் நடைபெறாமல் தடுக்கிறார்கள்.

சென்னை மாகாண சங்கத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட பின்னும் காங்கிரசில் பெரியார் வகுப்புவாரி. பிரதிநிதித்துவத்திற்கு தொடர்ந்து பேசுகிறார்.

1919-ல் திருச்சி காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு தீர்மானம் கொண்டு வருகிறார். அதன் பின்னும் 1920 நெல்லை காங்கிரஸ் மாநாடு, 1921 தஞ்சை காங்கிரஸ் மாகாண மாநாடு, 1923-ல் நடைபெற்ற மாகாண மாநாடு என தொடர்ந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானங்களை மீண்டும் முன்வைத்தார்.

1924-ல் காங்கிரசின் தலைவராக பெரியார் இருந்தபொழுது நடந்த மாநாட்டிலும் தீர்மானம் கொண்டுவந்தார். அது மறுக்கப்பட்டது.

சேரன்மகாதேவி குருகுல போராட்டம்

வ.வே.சு ஐயர் காங்கிரசின் கொள்கையையும், தேசிய உணர்வையும் பரப்ப கல்லிடைக்குறிச்சியில் ஒரு குருகுலத்தை நடத்தி வந்தார்  அது பிற்காலத்தில் சேரன்மகாதேவியில் நடத்த மாற்றப்பட்டது.

இது காங்கிரசின் நிதியில் நடைபெற்ற குருகுலம் ஆகும். இங்கு பார்ப்பனர்களுக்கு தனி உணவும், பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனி உணவும் பரிமாறப்பட்டது. 

பார்ப்பனரல்லாதோர் தனி இடங்களில் அமர்ந்து உண்ணும் படி அமைக்கப்பட்டது. தனித்தனி தண்ணீர் குவளைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் மகன் பார்ப்பனர்களுக்கான தண்ணீர் குவளையில் இருந்து தண்ணீர் குடித்ததற்காக தண்டிக்கப்பட்டார். இது பெரியாரின் கவனத்திற்கு வந்தது. அதன்பின் குருகுலத்திற்கு அனுப்பும் பணத்தை மறுத்தார். ஏனெனில் அப்பொழுது பெரியார் காங்கிரசின் தலைவர்.

எல்லாவற்றிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முதன்மை இலக்காக வைத்து பெரியார் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். பார்ப்பனர்களும் பார்ப்பன ஆதரவாளர்களும் அதை நிறைவேற்ற விடாமல் தடுக்கிறார்கள்.

1925 நவம்பர் 25 காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முதல் நாளில் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடத்தி வகுப்புவாரி உரிமை தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுவது என்று தீர்மானித்தார்.

வகுப்புவாரி தீர்மானத்தை காரியக் கமிட்டிக்கு கொண்டுசென்ற பொழுது, 25 பேர் கையெழுத்து வேண்டும் என்று புதிதாக ஒரு விதியைச் சொன்னார்கள் பெரியார் 50 பேரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார். ஆனாலும் புறக்கணித்தார்கள். அப்பொழுது இதற்கு மேல் காங்கிரஸ் தேவை இல்லை என்று தூக்கி எறிந்து வெளியேறினார். இதை பெரியார் முடிவு செய்த தினத்தில் சுயமரியாதை இயக்கத்திற்கான விதை தூவப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *