பொருளாதார வீழ்ச்சி

பேரழிவை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம்! தடுக்கும் வழி என்ன?

2020-ம் ஆண்டின் முதல் காலாண்டு (ஏப்ரல் – ஜூன்) காலத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கடந்த ஆண்டைக் காட்டிலும் 24% குறைந்துள்ளது. இந்த மதிப்பீடு கூட குறைந்த அளவிலானது எனவும், உண்மையான பாதிப்பானது இதைவிட அதிகமாகவே இருக்கும் எனவும் பெரும்பாலான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் முன்னாள் தலைமை புள்ளிவிபர நிபுணர் புரோனாப் சென், உண்மையான உள்நாட்டு உற்பத்தியானது 32% சதவீதத்திற்கு மேல் குறைந்து இருக்கக்கூடும் என கூறியுள்ளார்.

உலகில் உள்ள பெரும் பொருளாதார நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் முதல் காலாண்டின் உள்நாட்டு உற்பத்தியின் சரிவு அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் முதல் காலாண்டு காலத்தில்தான் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து லாக்டவுன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மற்ற நாடுகளைக் காட்டிலும் லாக்டவுன் நடவடிக்கைகள் அதிகபட்ச கெடுபிடியாக இருந்தது இந்தியாவில்தான். 

தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை லாக்டவுன் காலத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக 8.8 கோடி அளவிற்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை கூறியது. லாக்டவுன் அறிவிப்பானது எந்தவித முன்திட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், சுமார் 4 மணி நேரத்திற்கு முன்பாக அவசரமாக பிறப்பிக்கப்பட்டு பெரும் பொருளாதார நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்த கடுமையான லாக்டவுன் நடவடிக்கையால் சிறு அளவிற்கு கொரோனா  பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என்று சொன்னாலும் கூட, இன்றுவரை பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. கடந்த திங்கள்கிழமை பிரேசில் நாட்டைக் கடந்து கொரோனாவால் பாதிக்கபட்ட மொத்த எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திற்கு இந்தியா சென்றிருக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த உரிய தரவுகள் அரசிடம் இல்லை

இந்த லாக்டவுன் காலத்தில் பேச வேண்டிய இரு முக்கிய சிக்கல்கள் அரசால் தவிர்க்கப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கும், வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் சொந்த ஊர்களுக்கு புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்களுக்கும் இந்திய அரசு பெரிதாக எந்த உதவியும் வழங்கவில்லை. 80% சதவீத மக்களுக்கு உள்ளடக்கியதாகக் கூறப்பட்ட இலவச ரேசன் உணவுப் பொருட்களும் ஒரு பெரும் பகுதியினருக்கு பல்வேறு காரணங்களால் சரியாக சென்று சேரவில்லை. இது குறித்து நேற்றைய பாராளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் வேலையிழப்புகள் குறித்தோ, சொந்த ஊருக்கு செல்லும் வழியில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தோ, இறந்த தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்ட விபரம் குறித்தோ எந்த ஒரு தரவையும் அரசு பராமரிக்கவில்லை என பதில் அளித்து தன் கையாளாகாத்தனத்தை ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கடுமையான லாக்டவுன்; மிகக் குறைவான நிவாரணம்

இதே காலத்தில் அமெரிக்காவானது தனது உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் அளவிற்கான கொரோனா நிவாரணத் தொகுப்பினை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளது. ஜெர்மனி அதன் உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவிற்கு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தது. ஜப்பான் அரசோ இதைவிட சற்று அதிகமான சதவீதத்தினை தன் மக்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ GDP-ல் 1% அளவுக்குத்தான் நிவாரணத் தொகுப்புகள் அறிவிக்கப்பட்டன. கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவில் தான் மிகக் குறைந்த அளவிலான நிவாரணத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன்களைப் பெற்று சமாளித்த மக்கள்

தற்போது நாம் சந்தித்து வரும் பொருளாதார சரிவைக் காட்டிலும் இனி வரப்போகும் பாதிப்பு குறித்தே நிபுணர்கள் அதிகமாக கவலை தெரிவிக்கிறார்கள். கொரோனா காலங்களில் வேலை இழந்த மக்கள் தங்கள் சேமிப்புகளைப் பயன்படுத்தியோ, வெளியில் கடன்களைப் பெற்றோ தங்கள் அன்றாட தேவைகளை குறைந்தபட்ச அளவிற்கு பூர்த்தி செய்து வந்தனர்.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தால் மட்டுமே அவர்கள் இழந்த சேமிப்புகளையும், பெற்ற கடன்களையும் அடைக்க முடியும் என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெருமளவு அவர்கள் வாங்கிய கடன்களை அடைப்பதற்கே போய்விடும் என்பதே உண்மை. இதனால் இவர்களின் கைகளில் சகஜமாக செலவு செய்வதற்கு போதிய பணம் இல்லாமல் போகும்.

லாக்டவுனுக்கு முந்தைய பொருளாதார நிலையை அடைய வாய்ப்பில்லை

பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு திரும்புகிறது என செய்திகளில் தெரிவிப்பது லாக்டவுன் காலத்தில் அதல பாதாளத்திற்குச் சென்ற பொருளாதாரம், தற்போது அந்த பாதாளத்திலிருந்து சற்றே மேலே மீண்டு வருகிறதே தவிர, லாக்டவுன் காலத்திற்கு முன்பு இருந்த பழைய நிலைமைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்த உண்மையைப் புரிந்து கொள்ள ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம், லாக்டவுன் தளர்வுக்கு முன் வேலையிழந்த ஒருவருக்கு மீண்டும் அதே சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (உண்மையில் இதுபோன்ற பொருளாதார சிக்கல்களுக்கு பின் முதலீடுகள் பெருகி அதே சம்பளத்தில் வேலைவாய்ப்பு வருவதற்கு பல காலம் எடுக்கும். ஆனால் இப்போதைக்கு இந்த உண்மையை தவிர்த்து விடுவோம்). இச்சூழலில் மக்களிடத்தில் அத்தியாவசியம் இல்லாத பிற தேவைகளுக்கு பணம் செலவு செய்வது குறைந்தே காணப்படும். ஏனெனில் மக்கள் அவர்கள் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு உள்ளாவார்கள். இதனால் சந்தையில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு பெரிய அளவிற்கான தேவைகள் இல்லாமல் போகும். இச்சூழல் கொரோனா காலத்தில் இருந்த அதே மந்த நிலையையே தற்போதும் நிலவ வைக்கும். அதாவது லாக்டவுன் காலத்திற்கு முன்னர் இருந்த பொருளாதார நிலைமைகள் தற்போது இருக்காது. 

இரண்டு கூறுகள் இந்த வாதத்திற்கு எதிராக வைக்கப்படக் கூடும்.

முதல் வாதம்

முதலானது லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போன காரணத்தினால், லாக்டவுன் தளர்வுகளுக்கு பின் இந்த தேவைகள் அதிகரித்து மக்கள் இரண்டு மடங்காக அத்தேவைகளை நிறைவு செய்ய முற்படுவார்கள் என்பது.

மேலே விளக்கிய காரணங்களின் அடிப்படையில் பார்த்தால் மக்களுக்கு அத்தியாவசியம் தாண்டி தேவையை பூர்த்தி செய்ய தற்சமயம் போதிய பணம் இருக்காது என்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா காலத்தில் ஏற்பட்ட தேவை இரட்டிப்பாகும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. உதாரணமாக ஒருவர் காரோ அல்லது இருசக்கர வாகனமோ, தன் குழந்தைக்கு பொம்மையோ வாங்க வேண்டும் என தேவை ஏற்பட்டிருந்து லாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள்ளேயே இருந்த காரணத்தினால் வாங்க முடியாமல் போயிருந்தால், அவர் லாக்டவுன் தளர்த்தப்பட்ட பிறகு அதே பொருட்களை வாங்கும்போது, இரண்டு கார்களோ அல்லது இரண்டு இரு சக்கர வாகனங்களோ வாங்கப்போவதில்லை. காலம் கடத்தப்பட்ட தேவையானது முடிந்து போன தேவையே.

இரண்டாவது வாதம்

இரண்டாவதாக லாக்டவுன் காலத்தில் விற்றுத் தீர்ந்த சரக்குகளின் கையிருப்பு குறைவாக இருப்பதால், லாக்டவுன் தளர்வுக்குப் பின் அந்த சரக்குகளாஇ அதிகமாக உற்பத்தி செய்ய நேரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த உற்பத்தி விகிதம் என்பது ஒரு சிறிய அளவில் மட்டுமே உதவ முடியும். பெருமளவில் வீழ்ந்த பொருளாதாரத்தினை மீட்டு எழுப்பும் அளவிற்கு, இவற்றின் தேவை இருக்காது. அதனால் குறிப்பிட்ட சில சரக்குகளின் உற்பத்தி அதிகரிப்பு என்பது மட்டுமே பொருளாதாரத்தினை மீட்க உதவாது.

இனிதான் பொருளாதார சிக்கல் தீவிரமாகும்

பிரச்சினைகள் இத்தோடு நின்று போகப்போவது இல்லை. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, உற்பத்தியானது கொரோனாவிற்கு முன்பு இருந்ததைவிட குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக முதலீடுகள் குறையக்கூடும். முதலீடுகள் குறைந்தால் தற்போது உள்ள உற்பத்தியைக் காட்டிலும் உற்பத்தி மேலும் குறைந்து போகக்கூடும். அதுமட்டுமில்லாமல் முதலீடுகள் குறையக் குறைய வேலை இழப்புகளும் அதிகரிக்கும். முதலீடு குறைவு, உற்பத்தி குறைவு, அதிகரிக்கும் வேலை இழப்பு இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் ஏற்படுமானால் பொருளாதார நிலைமை பேரழிவை நோக்கி செல்லும்.

லாக்டவுனுக்கு முன்பே இந்தியாவில் வேலையிழப்பின் விகிதம் அதிக அளவில் இருந்தது. தற்போது இந்த சுழற்சியால் ஏற்படும் வேலை இழப்புகளையும் சேர்த்து கணக்கிட்டால் பொருளாதார பேரிடருக்கு இட்டுச் செல்லும். மேலும் இச்சூழல் வங்கிகளில் வாராக்கடன்களும் அதிகரிக்கச் செய்துவிடும். 

அரசு மேற்கொள்ள வேண்டிய இரண்டு நடவடிக்கைகள்

இந்த சிக்கலுக்குள் சிக்காமல் தவிர்க்க அரசு உடனடியாக தலையிட வேண்டும். அரசு தலையிடவில்லை என்றால் இந்த பேரிடரை தவிர்க்க முடியாது. மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இதை செய்ய இருவழிகள் உள்ளன.

முதல் நடவடிக்கை

முதலாவதாக அரசு மக்களுக்காக செலவிடும் நிதியின் அளவினை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளுக்கு அரசு ஒதுக்கும் நிதியை அதிகரிக்க வேண்டும். கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் இருந்து செயலாற்றிய மாநில அரசாங்கங்கள் மீது மேலும் சுமையை ஏற்றாமல், ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் தேவையான போதிய நிதி ஆதாரங்களை திரட்டித் தர வேண்டும்.

இரண்டாவது நடவடிக்கை

இரண்டாவது வழி, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க அரசு வழிவகை செய்திட வேண்டும். இதற்காகத்தான் இடதுசாரி மற்றும் ஜனநாயக அமைப்புகள், அரசாங்கத்தால் கொடுக்கப்படும் இலவச ரேஷன் பொருள்களைத் தாண்டி, வருமான வரி வரம்பிற்குள் வராத ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு ரூபாய் 7,500 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

இதற்குத் தேவையான நிதியை ஆரம்பத்தில் ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடனாகப் பெற்று விநியோகிக்க வேண்டும். இந்த கடன்களை ரெப்போ விகிதத்தில் பெற்றிட வழி செய்ய வேண்டும். பொருளாதாரம் ஓரளவிற்கு சரியான பின்னர், பெரும் செல்வந்தர்கள் மீதான சொத்து வரியினை விதித்து, சமூகத்தில் உள்ள பொருளாதார சமநிலையின்மையை சரிசெய்ய வேண்டும். 

மாநிலங்களின் ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்க வேண்டும்

மொத்தத்தில் பேரழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் இந்திய பொருளாதாரத்தைக் காக்க நிதியை மக்கள் கையில் நேரடியாக பணமாகவோ அல்லது சரக்கு மற்றும் சேவை துறைகளில் நேரடியாகவோ செலுத்தப்பட வேண்டும். இதைத் தொடங்க முதலில் ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகைகளை உடனடியாக அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி இழப்பீட்டை அளிப்பது பொருளாதாரத்தை மீட்கும் வழி என்பது மட்டுமல்ல. அரசியல் சாசன ரீதியாக மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்திருக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றும் நடவடிக்கையும் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *