10 வயதைக் கடந்தவர்களில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என நாடு தழுவிய அளவில் இரண்டாவது முறையாக இரத்த பரிசோதனை ஆய்வு (Sero – survey) தெரிவிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை கிட்டத்தட்ட 29,082 நபர்களிடம் இந்த புள்ளி விவரம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்தில் தொடர்ந்து இருந்து வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கடந்த மே மாதம் வரை 21 மாநிலங்களில் 70 மாவட்டத்தில் எடுக்கப்பபட்டுள்ள முதல் புள்ளி விவரத்தைக் காட்டிலும், பத்து மடங்கு அளவிற்கு தொற்று தற்போது அதிகரித்து வருவதாக இரண்டாவது கணக்கெடுப்பு (Sero – survey) கூறுகிறது. முதல்கட்ட புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்ட அதே 21 மாநிலங்களைச் சேர்ந்த 700 கிராமங்கள் மற்றும் நகரங்களில் தான் இம்முறையும் புள்ளிவிவரம் எடுக்கபட்டுள்ளது.
முதல்முறை நடத்தபட்ட ஆய்வின் போது, கிட்டத்தட்ட 18 வயதைத் தாண்டிய 6.4 மில்லியன் மக்கள் தொற்று பாதித்துள்ளது தெரிய வந்தது. தற்போது இரண்டாவது ஆய்வின் போது அந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்து 60 மில்லியனைத் தாண்டியிருக்கிறது என்று ICMR அறிக்கை தெரிவிக்கிறது.
Sero – survey ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவர்களிடம் இருந்து பெறப்படும் இரத்த மாதிரிகளில் கொரோனா நோய் தாக்கிய இரண்டு வாரங்களில் உருவாகும் ஒரு வகை எதிர்ப்பு இரத்த அணுக்கூறினைக்(IGH) கணக்கிட்டு இந்த புள்ளிவிவரங்கள் பெறப்பட்டுள்ளன.
- இந்தியாவில் கிராமங்களை விட நகர்ப்புறப் பகுதிகளில் (குடிசை மற்றும் குடிசை அல்லாத பகுதி ஆகிய இரண்டிலும்) கொரோனா நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
- 6.6% பேர் ஏற்கனவே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு விட்டனர்.
- 18 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 7.1% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு மீண்டு வந்ததற்கான கூறுகள் இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
- இனிவரும் மாதங்களில் துவங்க இருக்கும் விழா காலம் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தொடர்ந்து நோய் பரவல் அதிகமாகும் சூழல் இருப்பதால், இதனைத் தவிர்க்க புதிய யுக்திகளை கையாள வேண்டும் என அறிக்கை தெரிவிக்கிறது.
- செப்டம்பர் மாதம் இந்திய அளவில் மொத்தமாக 29 மில்லியன் பரிசோதனைகளும், ஆகஸ்ட் மாதத்தில் 23 மில்லியன் பரிசோதனைகளும், ஜூலை மாதத்தில் 10.5 மில்லியன் பரிசோதனைகளும் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த எண்ணிக்கையை வைத்து பார்க்கையில் இன்னும் பெரும்பகுதி மக்கள் தொகை தொற்று பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதும், இன்னும் பாதிப்பு உச்ச நிலையை அடையவில்லை என்றும் குழு எதிர்ப்பு சக்தியினை (herd immunity) அடைய நாம் இன்னும் வெகு தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை, தடமறிதல், சிகிச்சை, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது போன்ற செயல்திட்டத்தின் மூலம் மட்டுமே பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிற அபாயத்தை குறைக்க முடியும் என்கிறது இந்த அறிக்கை.