பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சரியாக நடைமுறைபடுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய உயர்மட்ட குழு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து சந்திக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மூலம் தெரிய வந்துள்ளது.
1955-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் 1989-ம் ஆண்டு புதிதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தில் உள்ள 16(2) என்ற விதியின்படி முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி, ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர், எஸ்.சி – எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் உள்ளடக்கிய ஒரு குழுவானது, குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சந்தித்து சட்ட நடவடிக்கை பற்றியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்தும் கொடுக்கப்பட்ட புகார்களில் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும்.
2013-க்குப் பிறகு இந்த கூட்டம் நடத்தப்படவே இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் இந்த கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட பின், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாக அவசரமாக செப்டம்பர் 8-ம் தேதி கூட்டப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 2013-ல் இருந்து தர்மபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டை சங்கர், ஓசூர் நந்தீஷ்-சுவாதி, அரியலூர் நந்தினி, கச்சநத்தம் படுகொலை, பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதல் என்று ஆணவப் படுகொலை மற்றும் வன்கொடுமை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. இதனை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்றன.
2014-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரை 192 சாதிய ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு இடங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியவில்லை என்று புகார்களும் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட வேண்டிய குழு சந்திக்கவே இல்லை என்பது அரசின் அலட்சியம் என்றே கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருங்ககாலத்தில் இந்த கூட்டத்தை முறையாக நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டதோடு, ஒருவேளை நடத்தாமல் விட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்