தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல்வேறு கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்த பாஜகவானது திமுக-விலிருந்து வி.பி.துரைசாமி, கு.க.செல்வம், காங்கிரசில் இருந்து குஷ்பு, தேர்தல் நெருங்கிய பின் கராத்தே தியாகராஜன் என்று பலரையும் இழுத்துக் கொண்டிருந்தது. தற்போது வட இந்தியாவில் பல மாநிலங்களில் நிகழ்த்தியதைப் போலவே தேர்தல் ஜனநாயகத்தின் மீதான தனது தாக்குதலை நிகழ்த்தத் துவங்கியிருக்கிறது.
பீகாரில் தனது கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்த்தனர். அதேபோல தமிழகத்தில் தன் கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரசில் இருந்து கார்வேந்தன் உள்ளிட்ட பலரை சேர்த்த பாஜக, தற்போது அதிமுகவைச் சேர்ந்த நடிகர் செந்திலை பிரித்து தனது கட்சியில் இணைத்துள்ளது.
ஜெயலலிதா இல்லாத அதிமுக-வை எந்த அரசியல் ஒழுங்கும் இல்லாமல் கூட்டணி கட்சியாக இருந்துகொண்டே சின்னாபின்னாமாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக. புதுச்சேரியில் 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக-விற்கு ஐந்து இடங்களை மட்டுமே கொடுத்துவிட்டு, எந்த தேர்தலிலும் தனித்து நின்று ஒரு தொகுதியைக் கூட வெற்றி பெறாத பாஜக அதிக இடங்களை எடுத்துக் கொண்டுள்ளது.
திமுக சரவணன்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சரவணன். திருப்பரங்குன்றம் தொகுதி திமுக-வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் தனக்கு வேறு ஏதாவது தொகுதியைத் தருவார்கள் என்று எதிர்பார்த்து வேட்பாளர் பட்டியல் வெளிவரும்வரை காத்திருந்தவருக்கு திமுக-வில் சீட் இல்லை என்றவுடன், மறு நாளே பாஜக-வில் சேர்ந்து, அன்று மாலையே பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு சீட்டா? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் முன்வைத்த போது, ”அவர் நேற்றே ஆன்லைனில் சேர்ந்து விட்டார்” என்று மிக நக்கலாக ஒரு பதிலை சொல்லியிருக்கிறார் பாஜக தலைவர் முருகன்.
இரண்டு கட்சிகளில் சீட் எதிர்பார்த்திருக்கும் விஜயதாரணி
திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ், 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, இன்னும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயரை அறிவிக்காமல் உள்ளது. அதில் ஒன்று விளவங்கோடு. இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரான விஜதாரணிக்கு தொகுதியினை கொடுக்கக் கூடாது என்று உள்ளூர் காங்கிரசார் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர் பாஜக-வுக்கு சென்ற பின், வேட்பாளரை அறிவிக்கலாம் என்று காங்கிரசும், விஜயதாரணி வந்தவுடன் வேட்பாளர் என்று சொல்வதற்காக பாஜக-வும், அந்த தொகுதியில் வேட்பாளாரை அறிவிக்காமல் காத்துக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசியல் தனது பேர அரசியலை மிக மோசமாக நடத்திக் கொண்டிருக்கிறது. பாரளுமன்ற ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையையும் இழக்கச் செய்யும் இந்த அரசியலை தமிழகத்திலும் துவங்கியிருக்கிறது பாஜக.
அருணாச்சல பிரதேசத்தில் முதலமைச்சரையே ஒரு ஆண்டில் மூன்று கட்சிகள் மாற வைத்த பாரதிய ஜனதா, மேற்கு வங்கத்தில் அமைச்சர்களையும் எம்.எல்.ஏ-களையும் கைப்பற்றிய பாஜக, பாண்டிச்சேரியில் ஆட்சிக் கலைப்பை நடத்தி முடித்துவிட்டு, தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த தேர்தல் காலத்திலும் தேர்தலுக்கு பிறகும் இங்கு என்ன என்ன குதிரை பேரங்களை பாஜக நடத்தும் என்று தெரியவில்லை.